சுப்ரமணிய சாமியின் துரோகக் குரல்

சர்வதேச அரசியல் தரகரும், பச்சைப் பார்ப்பனிய வெறியாளருமான சுப்ரமணியசாமி, முல்லைப் பெரியாறு  பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிரான கருத்தை முன் வைத்துள்ளார். முல்லைப் பெரியாறு நீர் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு தமிழர்கள் தயாராக வேண்டும் என்று அவர் பேசியதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தின் கவுரவ பேராசிரியராக இருந்த அவரை அண்மையில் அப்பல்கலை, அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டது. அவரது இந்துமத வெறி கருத்துகளே இதற்குக் காரணம். டெல்லியிலிருந்துவெளிவரும் ‘டி.என்.ஏ.’ என்ற ஆங்கில நாளேட்டில் சுப்ரமணிய சாமி கட்டுரை ஒன்றை எழுதினார்.

“இந்துக்கள் அல்லதவர்கள், தங்களது முன்னோர்களது பாரம்பர்யத்தை அங்கீகரித்து ஏற்க வேண்டும்; அவ்வாறு முன்னோர் பாரம்பர்ய மரபுகளை ஏற்காதவர்கள் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய 300 பள்ளிவாசல்களை இடிக்க வேண்டும். இந்து மதத்திலிருந்து எவரும் மதம் மாறக் கூடாது. ஆனால், பிற மதத்திலிருந்து இந்து மதத்துக்கு வருவோரை ஊக்குவிக்க வேண்டும்” என்றெல்லாம் அக்கட்டுரையில் தனது ஆர்.எஸ்.எஸ். வெறியை எழுதிக் காட்டினார். ஹார்வேர்டு பல்கலை மாணவர்கள் இத்தகைய மதவெறியாளரை பல்கலையில் பயிற்றுவிக்க அனுமதிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலை நிர்வாகமும் அவரை பதவி நீக்கம் செய்துவிட்டது.

முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று திரள வேண்டும் என்றும், யூதர்களிடமிருந்து இந்துக்கள் பாடம் பெற வேண்டும் என்றும் அதே கட்டுரையில் அவர் அறைகூவல் விடுத்தது அப்பட்டமான மதக் கலவரத்தைத் தூண்டும் எழுத்துகளாகும்,.

ராஜிவ் கொலை நடந்தபோது கொலையில் சோனியா குடும்பத்தின் சதி இருப்பதாக எழுதியவரும் இதே சுப்ரமணியசாமிதான். ராஜிவ் கொலைப் பற்றி ஆங்கிலத்தில் அவரே எழுதிய நூலில் இவ்வாறு எழுதியிருக்கிறார். அந்த சுப்ரமணியசாமிதான், அண்மையில், 3 தமிழர்களையும் தூக்கில் போட்டேயாக வேண்டும் என்றும், அவர்கள் தான் ராஜிவ் கொலையில் உண்மையான குற்றவாளிகள் என்றும் திமிரோடு பேசினார்.

‘2ஜி அலைவரிசை’ ஊழல் வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் இந்த மனிதர். பிரதமர் ஆலோசனை பெற்றுதான் அலைவரிசை ஒதுக்கீடு நடந்தது என்றும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் இதில் பங்கு உண்டு என்றும், சுப்ரமணியசாமி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனாலேயே சுப்ரமணியசாமி ஊழலை எதிர்க்கும் உத்தமராக கருதிவிடக் கூடாது. ராஜிவ் ஆட்சியில் நடந்த போபோர்ஸ் பீரங்கி ஊழலுக்கு எதிராக ‘தொடை தட்டி கிளம்பிய’ இதே சுப்ரமணியசாமி, ராஜிவ் ஆதரவுடன் சந்திரசேகரை பிரதமராகக் கொண்டு நடந்த காங்கிரசின் ‘பினாமி அமைச்சரவையில் சட்ட அமைச்சர் பதவி தரப்பட்டவுடன் போபோர்ஸ் வழக்கை குழி பறிக்க தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார். இது பற்றிய முழுமையான தகவல்கள் உரிய ஆதாரங்களோடு பெரியார் திராவிடர் கழகம் அண்மையில் வெளியிட்டுள்ள ‘அரசியல் தரகர் சுப்ரமணியசாமி’ நூலைப் படித்தால் தெரிந்து கொள்ள முடியும்.

இந்தியாவில் பார்ப்பனர்கள் அதிகார மய்யங்களை ஆட்டிப்படைத்து வருகிறார்கள். தனி மனிதர்களாகவே அவர்கள் காட்சி அளித்தாலும், இந்தியாவின் அதிகார மய்யங்களின் ‘ஆசீர்வாதத்தோடு’ அவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். தமிழ்நாட்டில் துக்ளக் சோ, பாரதிய ஜனதா ஆட்சியை டெல்லியில் மீண்டும் கொண்டுவர அ.இ.அ.தி.மு.க.வை – பாரதிய ஜனதாவிடம் கொண்டுபோய் கூட்டணியில் இணைக்க காய் நகர்த்துகிறார். மற்றொரு பக்கம் சுப்ரமணியசாமி காய் நகர்த்துகிறார். மாயாவதியானாலும், சோனியாவானாலும் பார்ப்பனர்களுக்கு வலை வீசவே துடிக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் ஆலோசகர்கள் தலைமைப் பொறுப்புகளிலும் பார்ப்பனர்களே குவிந்து கிடக்கிறார்கள். இதுவே இன்றைக்கும் இந்தியாவின் போக்காக தொடருகிறது.

 

பெரியார் முழக்கம் 26012012 இதழ்

 

You may also like...