உலகம் – உயிர் – சாதி தோன்றியது, இப்படித்தான்!

(சென்ற இதழ் தொடர்ச்சி)

ஏன், எதற்கு எப்படி? என்று எதையுமே ஆராய்ச்சி செய்து பார் என்று ஏதென்சு நகரத்து இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டிய அறிஞர் சாக்ரடீசு நஞ்சு கொடுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். பகுத்தறிவு பேசிய இத்தாலி நாட்டைச் சேர்ந்த புரூனோ என்ற பகுத்தறிவாதி 16.2.1600 இல் ரோமன் சர்ச்சில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை! போலியான மதக் கருத்துகளை யாரும் எதிர்க்கத் துணியவில்லை! துணிந்த ஒரு சிலரோ மக்கள் கூட்டத்தின் முன்பாக எரிக்கப்பட்டனர்.! கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர்! தூக்கிலிடப்பட்டனர்! கை கால்கள் துண்டிக்கப்பட்டனர்! இத்தகைய கொடுமையான தண்டனைகளை நேரில் கண்டபின் யாருக்கு போலி மதக் கருத்துகளை எதிர்க்கத் துணிவுண்டாயிருக்கும்? இவ்வாறு அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான கருத்துகளை தங்கள் மத நூல்களில் கொண்டுள்ள அனைத்து மதங்களும் மக்களின் அறியாமை அச்சம், மூடநம்பிக்கை போன்றவைகளை அடித்தளமாகக் கொண்டு அழகாகவும், உறுதியாகவும் மனித சமுதாயத்தில் நிலைநிறுத்தப்பட்டன. உலகில் உள்ள அத்தனை மத நூலகளிலும் அறிவியல் உண்மைகளுக்குப் புறம்பான செய்திகள்தான் பிரபஞ்சத்தைப் பற்றி, அதன் தோற்றத்தைப் பற்றி, மனித குலம் உருவான வரலாற்றைப் பற்றிக் காண முடிகின்றது. தெய்வீகமானதென்றும், புனித மானதென்றும், மத நம்பிக்கையாளர்களால் போற்றப்படு கின்ற அனைத்து மத நூல்களும் பொய் மூட்டைகள் எனும்போது அவை கூறும் கருத்துகளும் அவை காட்டும் சொர்க்கம், நரகம் போன்றவையும் எவ்வளவு போலியானவை என்பது நான் கூறாமலேயே உங்களுக்கு விளங்கும். எனவேதான் தெளிவாக உறுதியாக ஒரு கருத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். இன்றைய மனித குலத்துக்குத் தேவை மத நல்லிணக்கமல்ல! மாறாக மதமற்ற ஒரு நிலை! உண்மைக்குப் புறம்பான போலிக் கருத்தோடு உடன்பாடும் தேவையில்லை! இணக்கமும் தேவையில்லை! மதங்களற்ற மனித சமுதாயமே இன்றைய மானுட அமைதி வாழ்விற்கு மகத்தான் தேவை!

சாதிகள் தோன்றிய வரலாறு

உலகில் எந்த மதத்திற்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு இந்து மதத்திற்கு உண்டு! அதுதான் சாதீயத்தை இந்து மதமும் அதன் கடவுள்களும் அங்கீகரிக்கின்ற அருவருக்கத்தக்க செயல்! இந்து மதத்தின் ரிக் வேதம் தொடங்கி, மகாபாரதம், இராமாயணம் போன்ற அதிகாசங்களிலும் பகவானால் அருளப்பட்டதாகக் கதைக்கப்படும் பகவத் கீதையிலும் மனித குலத்தை இழிவு படுத்தும் சாதீயம் வலியுறுத்தப்பட்டு நியாயப்படுத்தப்படு கின்றது! இந்து மதத்தின் முதன்முதல் வேதமாகிய ரிக்வேதத்திலேயே பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் சமுதாயப் படிக்கட்டில் மிக உயர்ந்த சமூகமாக வும், அடுத்து தோளில்,தொடையில் மற்றும் பாதத்தில் பிறந்தவர்கள் அடுத்தடுத்து தாழ்ந்த சமூகங்களாகவும் திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளது! இந்தியாவில் ஆயிரக் கணக்கான சாதிகள் உருவாகி மனிதகுல ஒற்றுமைக்கு எதிரான சாதிச் சண்டைகளும் கலவரங்களும் உருவாகக் கருவான இந்த மனிதகுல விரோதக் கருத்தை பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் பகர்கிறாராம்!

பகவத் கீதை அத்தியாயம் 4 – பாடல் 13 இவ்வாறு கூறுகிறது:

“மனிதர்களின் நான்கு வர்ணங்களையும் குணத்தின் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் நான்தான் படைத்தேன். படைத்த என்னாலேயே இந்த அமைப்பை மாற்ற முடியாது.”

கடவுள் மனித குலத்தின் நான்கு பிரிவுகளையும் குணத்தின் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில்தான், தான் படைத்ததாக வாக்குமூலம் தருவதோடு படைத்த தன்னால்கூட இந்த அமைப்பை மாற்ற முடியாது என்று ஆணித்தரமாக அடித்துக் கூறினால் மனித குலத்தின் ரீதியிலான பிரிவுகளை எவ்வளவு ஆழமாக இந்துமதம் வலியுறுத்துகின்றது என்பதை மனிதநேயச் சிந்தனையாளர்களின் முடிவுக்கே விட்டு விடுகின்றோம். 20 இலட்ச ஆண்டுகள் மனித வரலாற்றிலே எந்த நாட்டிலும் சாதிகள் தோன்றவில்லை. இந்தியாவில் மட்டும் ஒரு தன்னல சக்திகளால் 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பாக வேதங்கள் கற்பிக்கப்பட்டு அதன் அடிப்படையில் செயற்கையாகத் திணிக்கப்பட்டதுதான் சாதி எனும் சமதாய நோய்! நம் தமிழகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் 2000 ஆண்டுகள் முன்பு வரை சாதிகள் கிடையாது. ஒரே இனமாக வாழ்ந்து வந்த நம் தமிழகத்தில், வடநாட்டு பார்ப்பன உயர்சாதியினர் புகுந்து,  நம் மன்னர்களைப் புரியாத மொழி (சமஸ்கிருதம்) மூலம் ஏமாற்றி, தம்மை ஆட்சி ஆலோசகர் களாக நியமிக்கச் செய்து, அவர்களின் நச்சுக் கருத்துகளின்படி நம் மன்னர்களை ஆட்சி நடத்தச் செய்தார்கள்; அன்று முதல் பற்றிக் கொண்டு வேகமாகப் பரவி இந்தச் சமுதாயத்தைச் சீரழித்து வருவதுதான் இந்த சாதீய நோய்!

பெரியார் முழக்கம் 22032012 இதழ்

You may also like...