கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்ச்சிகள்
13.8.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில், சட்ட ஒழுங்கை சீர்படுத்தக் கோரியும், மனித உரிமை ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் சமூகநல ஆர்வலர் ராஜ்மோகன் படுகொலை, ஓசூரில் பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி படுகொலை, தேசிய மனித உரிமைகள் இயக்க மாநில செயலாளர் சங்கமித்ரனுக்கு வீச்சரிவாள் வெட்டு ஆகிய பிரச்சனைகளை சுட்டிக் காட்டி நடைபெற்ற இந்த கணடனப் பொதுக் கூட்டம், தேசிய நுகர்வோர் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக, அதன் மாநில இணைச் செயலாளர் பா.ரவி தலைமையில் நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் மூ.விஜய ரத்தினம், வழக்கறிஞர் சங்கமித்ரன் மற்றும் பல மனித உரிமை ஆர்வலர்கள் கணடன உரையாற்றினர்.
15.8.2012 புதன்கிழமை அன்று மாலை 4 மணிக்கு, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் மருத்துவர் லாவண்யா – வழக்குரைஞர் கலையரசு ஆகி யோரது சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. இந்த வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நடத்தி வைத்தார். திரைப்பட இயக்குநர் மணிவண்ணன், எழுத்தாளர் பாமரன், வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரையாற்றினர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் ஓராண்டுகளாக நடைபெற்று வருகிறது. 367-வது நாளான 16.8.2012 வியாழக்கிழமை அன்று இடிந்த கரையில் அணு உலைக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வை.கோ., திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பல இயக்கங்களைச் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பெரியார் முழக்கம் 23082012 இதழ்