அறிவார்ந்த காதலை வரவேற்போம்

“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடி காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா?

பழகினால்தானே தெரியும்? திடீரெனறு ஒருவரை ஒருவர் முடிச்சுப் போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் – ஆசை – இஷ்டம்.”

– பெரியார் (‘விடுதலை’ 24.5.1947)

  • விடலைப் பருவ உணர்ச்சிக் காதல் – வாழ்க்கைக்குப் பயன் சேர்க்காது.
  • அறிவார்ந்த சாதிகளைக் கடந்த புரிந்துணர்வு காதலை வரவேற்போம்.
  • அறிவியலுக்கு எதிரான ‘சோதிடப் பொருத்தம்’ வாழ்க்கைப் பயணத்தில் ஒற்றுமையை உருவாக்கி விடாது என்பதற்கு குடும்பநல நீதிமன்றங்களில் குவியும் விவாக ரத்து வழக்குகளே சான்று; அத்தனை திருமணங்களும் நாள் பார்த்து, சோதிடம் பார்த்து நடந்த திருமணங்கள் தானே?
  • பழந்தமிழர் பண்பாடே காதல் வாழ்க்கை தான். ஒருவரை யொருவர் புரிந்த வாழ்க்கையே சிறப்பானது என்று, சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. “நீயும், நானும், உன் சுற்றமும், என் சுற்றமும் யார் என்றே தெரியாமல், அன்பினால் நாம் மண்ணில் நீர் கலப்பதுபோல் (செம்புலப் பெயனீர் போல) கலந்து விட் டோம்” என்று சங்க இலக்கியம் ‘குறுந்தொகை’ கூறுகிறது.
  • அறிவார்ந்த – ஒருவரையொருவர் புரிந்து கொண்ட காதலை வரவேற்போம்; பெண் – ஆண் சமத்துவத்தை வளர்ப்போம்; சாதி – மூடநம்பிக்கைகளை தகர்ப்போம்.

வாழ்க்கை இப்படி அமையட்டும்!

“நடு நிசியில்

அழும் குழந்தைக்காக

அதட்டி…. அடித்து

எரிச்சலுடன் எழுப்பி விடாது

தொட்டிலைச் சற்று

இழுத்து விடுவாயா?

என்னை

நீயாக்காமல்

இருப்பாயா நீ?

…………………..

நெகிழ்ந்து போகிறேன்

உன்னோடு பேசிக் கொண்டிருப்பதைவிட

உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில்

இன்னும் கூடுதலாய்.

……………………..

பாரதிதாசன்

பெண்களைக்

குடும்ப விளக்கென்று

சொன்னாலும்…… சொன்னார்

நம்மவர்கள்

எண்ணெய் ஊற்றி

எரித்தே விடுகிறார்கள்.

அடுக்களை நெருப்பில்

அன்றாடம் நின்றும்

நம் உணர்வுகள் இன்னும்

சூடேறவில்லையடி?

– கவிஞர் இளம்பிறை

பெரியார் முழக்கம் 16022012 இதழ்

You may also like...