உச்சநீதிமன்றம் ஒப்புதல் 9 ஆண்டுகளாக சட்ட விரோதமாக தூக்கு

தூக்குத் தண்டனை ஒழிப்பு இயக்கத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவறான குற்றச்சாட்டு களின் அடிப்படையில் ஒருவரை சாகடித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த தண்டனை என்பதை உலகம் முழுதும் மனித உரிமையாளர்கள் வற்புறுத்தி வரு கிறார்கள். இதே கருத்தை இப்போது இந்தியாவில் நீதிபதிகளாக இருந்தவர்களும் சுட்டிக்காட்ட முன் வந்துள்ளதோடு, குடியரசுத் தலைவராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கும், கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 2012 ஜூலை 25 ஆம் தேதி 14 முன்னாள் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கையெழுத்திட்டு தனித்தனியாக எழுதியுள்ள முறையீட்டு கடிதங்களில் தற்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 13 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்துவதற்கு குடியரசுத் தலைவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை (அரசியல் சட்டத்தின் 72வது பிரிவு) பயன்படுத்த முன்வர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.

இதில் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, உச்சநீதி மன்றமே தவறான தீர்ப்புகள் அடிப்படையில் தூக்குத் தண்டனை கடந்த 9 ஆண்டுகளாக வழங்கப்பட் டிருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டுள்ளதாகும். இந்த உண்மையை வெளியே கொண்டு வந்துள்ளனர், இந்த நீதிபதிகள். நீதிபதிகளே இப்படி, ஒரு குழுவாக இணைந்து குடியரசுத் தலைவருக்கு இத்தகைய கடிதங்களை எழுதுவது இதற்கு முன் எப்போதும் நடந்திடாத ஒரு நிகழ்வாகும். மூன்று தமிழர் தூக்குத் தண்டனையை (பேரறிவாளன், சாந்தன், முருகன்) நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக தன்னைத் தானே தீயிட்டு உயிராயுதமாகிய வீராங்கனை செங்கொடி முதல் நினைவு நாளில் மரண தண்டனைக்கு எதிரான இந்தச் செய்தி வெளி வந்திருப்பது செங்கொடியின் வீரமரணத்துக்கு கிடைத்துள்ள உரிய மரியாதை என்றே கருத வேண்டியிருக்கிறது. இந்த நீதிபதிகளின் கடிதங்களில் கூறப்பட்டுள்ளது என்ன?

  • 1980 ஆம் ஆண்டு வந்த ஒரு வழக்கில்தான் முதன்முதலாக உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனைக்கு ‘கடிவாளம்’ போட்டு, ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்று தீர்மானிக்கப்படும் குற்றங்களுக்கு மட்டுமே தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது (பச்சன் சிங் என்பவருக்கும் பஞ்சாப் மாநில அரசுக்கு மிடையே நடந்த வழக்கு) இந்தத் தீர்ப்பை வழங்கியது, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு (Constitution Bench).
  • ‘அரிதினும் அரிதான வழக்கு’ என்று ஒரு வழக்கை நீதிமன்றம் முடிவு செய்யும்போது, குற்றத்தின் கொடூரமான பின்னணியை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. குற்றவாளியின் சமூகப் பின்னணி, அவர் குற்றம் செய்ததற்கான பின்னணியையும் குற்றத்துக்கு சமமான அழுத்தம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், 5 உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ‘அரசியல் சட்ட அமர்வு’ வலியுறுத்திய இந்த அழுத்தமான கருத்து பிறகு வந்த தீர்ப்பு களில் வெளிப்படையாகவே மீறப்பட்டுள்ளது.
  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ராவ்ஜிராவ் என்பவர், 1996 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தூக்கிலிடப்பட்டார். தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி இதே மாநிலத்தைச் சார்ந்த சுடர்ஜாராம் என்பவரும், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தூக்கி லிடப்பட்டார். இந்தத் தண்டனைகளை வழங்கிய 2 உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஏற்கனவே 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டுள்ளனர்.
  • “ஒரு கிரிமினல் குற்றத்தில் முறையாகத் தண்டனை வழங்கப்படும்போது, குற்றத்தின் தன்மை மற்றும் கொடூரத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டுமே தவிர குற்றவாளியின் பின்னணியைப் பார்க்க வேண்டியது அவசியமல்ல” என்று இந்த நீதிபதிகள் தீர்ப்பில் எழுதினர். (பாரா 24) இது 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வெளியிட்ட தீர்ப்புக்கு நேர் முரணாகும்.
  • இந்தத் தவறான ‘ராவ்ஜி’ வழக்கின் தீர்ப்பையே முன்னுதாரணமாகக் கொண்டு, அதற்குப் பின் வந்த பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் தவறாகவே தூக்குத்தண்டனைகளை விதித்து வந்துள்ளது.
  • அண்மையில் 2009 ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றத்தின் பரிசீலனைக்கு மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த 3 தூக்குத் தண்டனை வழக்குகள் கொண்டு வரப்பட்டன. ஒன்று சந்தோஷ்குமார் பாரியார் என்பவர் மீதான வழக்கு. இரண்டாவது திலீப் திவாரி என்பவர் மீதான வழக்கு. மூன்றாவது ரகேஷ் குமார் என்பவர் மீதான வழக்கு. மகாராஷ்டிராவைச் சார்ந்த இந்த 3 பேர் தூக்குத் தண்டனைகள் விசாரணைக்கு வந்தன.
  • இதில் சுந்தோஷ் குமார் பாரியார் என்பவர் வழக்கில் பம்பாய் உயர்நீதிமன்றம் வழங்கிய தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்றம், இது ‘அரிதிலும் அரிதான வழக்காகக் கருத முடியாது’ என்று கூறிவிட்டது. ஏற்கனவே உச்சநீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின்படி குற்றவாளியின் பின்னணியையும் கவனத்தில் கொண்டு, ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. “ஒரு குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை விதிப்பதற்கு முன் அவர் திருந்தி வாழக்கூடிய வாய்ப்புள்ளவரா என்பதை முன் நிபந்தனையாகக் கொண்டு, தீர்ப்பளிக்க வேண்டும். இதை உச்சநீதி மன்ற அரசியல் சட்ட அமர்வு தெளிவாகக் கூறியுள்ளது. இதைக் கருத்தில் கொள்ளாமல், இந்த குற்றவாளிக்கு, பம்பாய் உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது” என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.
  • இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ள கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் கொண்டவை. ஆயுள் தண்டனை ஒருவருக்கு விதிக்கப்பட்டால், அதற்கான “காரணங்களை”க் குறிப்பிட வேண்டும். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அதற்கான “சிறப்பான காரணங்களை”க்கூற வேண்டும். இந்திய தண்டனைச் சட்டத்தின் 354(3) விதி இப்படி கூறுகிறது. இதில், குற்றத்துக்குச் ‘சிறப்பான காரணங்கள்’ உண்டு என்று முடிவு செய்தால், குற்றப் பின்னணியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், குற்றவாளிப் பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இதற்கு மாறான கருத்தை ராவ்ஜி வழக்கில் பதிவு செய்து தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
  • அனைத்துக்கும் உச்சமாக மேற்குறிப்பிட்ட 2009 ஆம் ஆண்டு பாரியார் வழக்கில் நீதிபதிகள் பதிவு செய்துள்ள கருத்துகள் மிகவும் அதிர்ச்சித் தரத்தக்கதாகும். 1996 ஆம் ஆண்டு ராவ்ஜிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தவறான தீர்ப்புக்குப் பிறகு, 9 ஆண்டுகளாக அதையே முன்னுதாரணமாகக் கொண்டு, குறைந்தது 6 வழக்குகளில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது பிழையாலும் அறியாமையானாலும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்றே, நாங்கள் கருதுகிறோம் என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் தவறை ஒப்புக் கொண்டுள்ளனர்.
  • (We are not oblivious that Ravji case has been followed in atleast six decisions of this court in which death punishment has been awarded in last nine years, but, in our opinion, it was rendered ‘per incurian’ (out of error and ignorance)
  • இந்தத் தவறை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொள்வதற்கு ஒரு சில நாட்கள் முன்பு வந்த ஒரு வழக்கில்கூட ‘ராவ்ஜி’ வழக்கில் வழங்கப்பட்ட தவறான தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, 6 பேர் தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. (மகாராஷ்டிராவில் நடந்த அங்குஷ் மாருதி ஷிண்டே உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கு). இதில் தூக்குத் தண்டனைக்கு உள்ளான அங்குஷ் ‘மைனர்’. 18 வயது நிறை வடையாத அங்குஷ் மாருதி ஷிண்டே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில்தான் சட்டப்படி, வைக்கப் பட்டிருக்க வேண்டும். அனால் சட்டவிரோதமாக 9 ஆண்டுகள் மராட்டிய சிறையில் அடைக்கப் பட்டிருந்தான். இதில் 6 ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். சிறுவர் களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பதை சட்டம் தடை செய்துள்ளது. ஆனாலும், இவனது ‘கருணை மனு’வை மாநில ஆளுநர் நிராகரித்துள்ளார். வழக்கை விசாரித்து தண்டனை வழங்கிய நாசிக் விரைவு நீதிமன்ற நீதிபதி, இந்த சிறுவனைப் பார்த்தவுடனேயே வயது பற்றி கேட்டறிந்திருக்க வேண்டும். அந்த சிறுவனின் பள்ளிச் சான்றிதழிலேயே பிறப்பு தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங் களைப் பரிசீலிக்காமலே தூக்குத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட இந்த சிறுவன், கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு, கடந்த 2012 ஜூலை

7 ஆம் தேதி தூக்கிலிருந்து தப்பியுள்ளான். நாசிக் மாவட்ட நீதிமன்றம் அனிக்ஷா ஷிண்டே ஒரு ‘மைனர்’ என்று அறிவித்ததால், இந்த சிறுவன் தலை தப்பியது.

  • இப்படி உச்சநீதிமன்றமே தவறான தீர்ப்புகளால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டிருப்பதை பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதங்களில் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் “சுதந்திர இந்தியாவில் ‘குற்றம் மற்றும் தண்டனைக்கான’ கிரிமினல் வழக்கு வரலாற்றில் நீதித் தன்மை கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை மிகவும் காலம் கடந்தே எங்களால் கூட அறிய முடிந்தது என்று வேதனையுடன் பதிவு செய்துள்ளனர். ‘ராவ்ஜி’ வழக்கின் தவறான முன் உதாரணத்தை முன் வைத்து, தற்போது தூக்குக் கொட்டடியில் நிறுத்தப்பட்டுள்ள 13 பேரின் பெயர்ப் பட்டியலையும் முன்னாள் நீதிபதிகள் குறிப்பிட்டு, அவர்களின் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட வேண்டும்; ஆயுள் தண்டனையாக மாற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் இந்தக் கடிதங்களை உள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நன்றி: ‘பிரன்ட் லைன்’ செப்.7

பெரியார் முழக்கம் 30082012 இதழ்

You may also like...