பெரியார் கருத்து செயல் வடிவம் பெறுகிறது: ‘போரா’ சமூகத்தின் பொது சமையல் அறைத் திட்டம்

வீட்டுக்கு வீடு சமையலறைகள் வேண்டாம்; பொது சமையலறை உருவாக வேண்டும் என்று கூறியவர், தந்தை பெரியார். அவரது கருத்து இப்போது செயல்படத் தொடங்கியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தில் சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட பிரிவு ‘தாவூத் போரா’ என்ற சமுதாயப் பிரிவாகும். அவர்களின் மதத் தலைவரான டாக்டர் சையதுனா முகம்மது புர்கானுதீன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பொதுச் சமையல் அறைத் திட்டத்தை முன் வைத்தார். இதனால் சமையல் அறையில் முடக்கப்படும் பெண்களின் ஆற்றலை வேறு பணிகளில் திருப்பிவிட முடியும் என்றார்.

புதுடில்லியில் ராஜ்காட் பகுதியில் 2200 போரா சமூகக் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பப் பெண்கள் தங்கள் வீடுகளில் சமையலறையை இழுத்துப் பூட்டிவிட்டு, பொது சமையல் கூடத் திட்டத்துக்கு வந்து விட்டனர். நகரத்தில் 5 பொது சமையல் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா குடும்பத்துக்கும் ஒரே தரத்திலான உணவு, பொது சமையல் கூடத்தி லிருந்து வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணங்கள் குடும்பத்திடமிருந்து பெறப்படுகின்றன. நிர்ண யிக்கப்பட்ட கட்டணத்தைவிட பல குடும்பத்தினர் கூடுதலாக கட்டணம் செலுத்தி வருகிறார்கள். ஏழைகளாக இருப்போருக்கு குறைந்த கட்டணத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஏழை பணக்காரர் வேறுபாடின்றி தரமான உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. புதுடில்லியில் போரா சமூகத்தினர் 13 வெவ்வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் பொது சமையல் திட்டம் வந்து விட்டது குறிப்பிடத்தக்கதாகும். போரா சமூகப் பெண்கள் சமையலறையிலிருந்து விடுதலை பெற்றதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்.

பெரியார் முழக்கம் 23022012 இதழ்

You may also like...