பாரதிதாசன் பல்கலை கழகத் துணைவேந்தரின் பார்ப்பனப் போக்கைக் கண்டித்து திருச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை இயக்குநர் பேராசிரியர் முனைவர் மணிமேகலையை தற்காலிக நீக்கம் செய்ததைக் கண்டித்தும், தற்காலிக நீக்க ஆணையை ரத்து செய்யக் கோரியும், பாரதிதாசன் உயராய்வு மையம், பெரியார் உயராய்வு மையம் ஆகியவற்றை முடக்க முயற்சி செய்ததைக் கண்டித்தும் பெரியார் திராவிடர் கழகம் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் திருச்சி புகைவண்டி சந்திப்பு எதிரே பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் எஸ்.எஸ். முத்து தலைமையில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பார்ப்பன அம்மையாரான துணைவேந்தர் மீனா அவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து செயல்படுத்திவரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு விரோதமான செயல்பாடுகளை விளக்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் உரையாற்றினர். பெரியார் தி.க மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் மனோகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய முஸ்லீம் மகிளா அந்தோலன் என்ற இசுலாமிய மகளிர் அமைப்பின் மாநில ஒருங் கிணைப்பாளர் கமீலா, சமூக ஆர்வலர் அம்பிகா நடராசன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர் நடராசன், ஜெயம் ஸ்நாக்ஸ் இன்பவல்லி, தாழம்பூ, மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவர் காளீஸ்வரி, மகளிர் தொழில் முனைவோர் சங்கத்தின் ஜான்ஸி, சமூகப் பணியாளர்கள் ஜெயந்தி, இந்திராணி, பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் ஆய்வு மாணவர் காமாட்சி, அறிவியல் இயக்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் நீலா, ஆகியோரும் தொழிலாளர் கல்வி மற்றும் மேம்பாட்டு மய்யம், தேசிய தபால் ஊழியர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளும் முனைவர் மணிமேகலை அவர்களின் முயற்சியில் உருவான மகளிரியல் துறையால் பயன்பெற்ற பல்வேறு மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடனும் குடும்பத்துட னும் முழுமையாக இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் ஆதித்தமிழர் பேரவையின் பொறுப் பாளர் விடுதலை வெங்கட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் தமிழாதன், புதிய தமிழகம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர் சங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இந்திரஜித், மக்கள் உரிமைப் பேரவை அமைப்பாளர் வழக்கறிஞர் பானுமதி, நாம் தமிழர் கட்சி மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரபு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கப் பொறுப்பாளர் நிலவழகன்,தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கவித்துவன், பெரியார் பாசறை அமைப் பாளர் சீனி.விடுதலை அரசு ஆகிய தோழர்கள் தங்கள் அமைப்புகளைச் சார்ந்த தோழர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முனைவர் மணிமேகலை தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட உடனேயே கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஓரிரு நாட்களுக்குள்ளேயே போராட்டத்தை அறிவித்தார். அறிவித்த குறுகிய இடைவெளியில் திருச்சியிலுள்ள அனைத்து அமைப்புகளையும் திரட்டி 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்கும் வகையில் எழுச்சிகரமான போராட்டத்தை திருச்சி பெரியார் தி.க தோழர்கள் நடத்தினர். நிகழ்ச்சியில் அரசியல் சட்ட எரிப்பு வீரர்கள் இலால்குடி முத்துச்செழியன், இளந்தாடி துரையரசன், மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கிய சாமி, கரூர் மாவட்டச் செயலாளர் காமராஜ், கரூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் மலைக்கொழுந்தன், குணராஜ், பழனி, பொன்னுச்சாமி, அசோக், தாமரைக்கண்ணன், ஜெகநாதன், திண்டுக்கல் இராவணன் உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர் புதியவன் அடுத்தகட்டப் போராட்டத்தை அறிவித்தார். உடனடியாக முனைவர் மணிமேகலையின் தற்காலிக நீக்க ஆணையை ரத்து செய்யாவிட்டால் வரும் பிப்ரவரி 28 ஆம் நாள் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆயிரம் பெண்களுடனும் தோழர்களுடனும் பல்கலைக்கழகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடைபெறும் என குழுமியிருந்த பெண்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார்.
பெரியார் முழக்கம் 16022012 இதழ்