சங்கமித்ரா முடிவெய்தினார்
நெருப்பு எழுத்துகளால் ஆரியத்தை அலற வைத்த ஆற்றல்மிகு எழுத்தாளர் சங்கமித்ரா (72) முடிவெய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கடந்த சில மாதங்களாக இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, திருச்சி கி.ஆ.பெ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 7 ஆம் தேதி காலை முடிவெய்தினார். 1970களில் ‘விடுதலை’ நாளேட்டில், ‘காஞ்சிப் பெரியவாளின் கல்கி முகாரி’ என்று எழுதத் தொடங்கிய அவர், தனது எண்ணங்களை எழுதிக் குவித்துக் கொண்டே இருந்தார். ‘பெரியார் தமிழ்ப் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்த அவர், வே. ஆனைமுத்து அவர்களுடன் வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து, வகுப்புவாரி உரிமை, பெரியார் சிந்தனைகளை ‘இந்தி’ மொழியில் பேசி பரப்பி வந்தார். ‘ஸ்டேட் வங்கி’யில் உயரதிகாரியாகப் பணியாற்றி, பார்ப்பன அதிகாரிகளின் பூணூல் வெறி சகிக்காது, பதவியை உதறி வெளியே வந்த அவர், பார்ப்பன அதிகார வர்க்கத்தை தனது எழுத்துகளால் தோலுரித்துக் காட்டி வந்தார். திருச்சி தென்னூரில் அவரது உறவினர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மற்றும் திருச்சி மாவட்டக் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
பெரியார் முழக்கம் 12042012 இதழ்