எல்லை மீட்புப் போராட்டம்: பெரியார்-ம.பொ.சி. கடிதத் தொடர்புகள் உணர்த்தும் உண்மைகள்!
நான் அதற்கு திராவிட பார்லிமெண்டரிக் கட்சித் தலைவர் நண்பர் சுயம்பிரகாசம் ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரால் உள்ள கட்சிக்குத் தலைவராய் இருந்துவரும் சர்.பி.டி. ராஜன் மற்றும் கம்யூனிஸ்டு, சோஷ்யலிஸ்ட் தோழர்களைக் கேட்டு அவர்களைச் சேர்த்துக் கொள்ளலாம் என்றேன். அவர் அதற்கு “கண்ணீர்த் துளிகளைச் சேர்க்கலாமா” என்றார்.
நான் இப்போது, “அவர்கள் தேவையற்றவர்கள். அவர்களால் ஆகக் கூடியது ஒன்றும் கிடையாது. சும்மா கூட்டத்திற்காகிலும் ஆள் சேர்ப்பது சரி யில்லை. கொஞ்சமாக இருந்தாலும் பொறுக்கி எடுத்த திறமைசாலிகளாக இருந்தால் போதும். உபயோகமற்றதுகளை எல்லாம் சேர்த்து கொண் டால் வீண் கயவாளித்தனத்துக்கு இடமாகிவிடும்” என்று சொல்லிவிட்டேன்.
பிறகு வீட்டிற்கு வந்தவுடன் தொலைபேசியில் நண்பர் ம.பொ.சி. என்னைக் கூப்பிட்டார். ‘என்ன விசயம்’ என்று கேட் டேன். அதற்குள் வீட்டிற்குப் போனவுடன் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. “நான் கம்யூனிஸ்டுக்காரர்களைக் கேட்டேன், அவர்கள் மேலிடத்தை விசாரித்து சம்மதம் பெற்ற பின்பு தான் கலந்து கொள்வோம் என்றனர். சோஷியலிஸ்டுகள் சரி என்றார்கள். ஆனாலும் இவர்களும் மற்றத் தோழர்கள் சிலரும் எல்லைப் பிரச்னைக்கு மட்டும் தான் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்கிறார்கள். நீங்கள் தெரிவித்த மற்ற நான்கு கிளர்ச்சிக்கும் சம்மதிக்க மறுக் கிறார்கள். எனவே அவைகளைப் பற்றி யோசித்துத்தான் சொல்ல வேண்டும். உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட் டார்.
நான் அதற்கு, “நானும் யோசித்துத் தான் சொல்ல வேண்டும்” என்று கூறி விட்டு இரவே சென்னையை விட்டு புறப்பட்டுவிட்டேன். பிறகு 21 ஆம் தேதி அன்றைய தினம் அவருடைய தந்தி எனக்குக் கிடைத்தது. அதில் “உடிளேரடவநன ழுரசரளயஅல; றசைந லடிரச உடிளேநவே யள யீநச அல டநவவநச” என்பதாக இருந்தது இதைக் கண்டவுடன் நான் ஒன்றும் செய்வதற்கு முடியவில்லை. காரணம் “யள யீநச அல டநவவநச” என்பதாகத் தந்தியில் கண்டிருக்கிறது. ஆனால் அவருடைய தபால் எனக்குக் கிடைக்க வில்லை. கிடைத்திருந்தால்தான் நான் என்ன விஷயம் என்பதைப் புரிந்து கொண்டு மறு பதில் கொடுக்க முடியும். ஆனால் அவர் 20 ஆம் தேதி தான் கடிதம் எழுதியிருக்கிறார். அக் கடிதம் நியாயப்படி 21 ஆம் தேதி தான் எனக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 22 ஆம் தேதி தான் கிடைத்தது. இந்த ஒழுங்கில் அந்தக் கடிதத்திற்கு இரண்டனா ஸ்டாம்பு அதிகம் ஒட்டி ‘எக்ஸ்பிரஸ்’ தபாலில் அனுப்பியிருக்கிறார்.
தபால் துறையின் லட்சணம் அப்படியிருக்கிறது. இப்படி ஒரு நாள் தாமதித்ததுகூடப் பெரிதல்ல. என்னுடைய தபால்களை எத்தனையோ – அதுவும் ‘எக்ஸ்பிரஸ்’ தபாலில் அனுப்பப்பட்டவைகளை தபால் பெட்டிகள் விழுங்கிவிட்டனவோ தெரிய வில்லை. அப்படி அதிக தபால்கள் இன்னமும் எனக்கு அனுப்புவது வந்து சேருவதும் இல்லை.
அப்படிப்பட்ட நிலையில் நண்பர் ம.பொ.சி. 20 ஆம் தேதி அனுப்பிய எக்ஸ்பிரஸ் கடிதம் எனக்கு 22 ஆம் தேதி வந்து சேர்ந்தது. அவர் 20 ஆம் தேதி எழுதினார்என்பதற்கும் எனக்கு 22 ஆம் தேதி தபால் கிடைத்தது என்பதற்கும் தபால் உறையிலேயே தபால் ஆபிசின் முத்திரை இருக்கிறது. எனவே, நான் 21 ஆம் தேதி தந்தியைக் கண்டவுடன் ஒன்றும் புரியாமல் திகைத்து ‘ட்ரங்கால்’ மூலமாக நண்பர் குருசாமி யுடன் பேசுவதற்கு சென்றேன். ஆனால் கூப்பிட்டு விசாரித்தவுடன் அன்றைய தினம் அவர் திருவத்தி புரம் போய்விட்டார் என்பதாக கூறிவிட்டார்கள். பிறகு நான் நண்பர் ம.பொ.சி.க்குத் தந்தி மூலமாக “றசைந சநஉநiஎநன டநவவநச nடிவ சநஉநiஎநன” என்பதாக தந்தி கொடுத்துவிட்டேன். “உங்க கடிதம் கிடைக்காததால் நான் விஷயம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை” என்று கூறி, மேலும் நான் அவரிடம் நேரில் பேசிய மேற்குறிப்பிட்ட அய்ந்து பிரச்சினைகளை பற்றியும் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்று கூறினேன்.
அவர் அதற்கு, “நான் கடிதத்தில் எழுதியுள்ளது என்னவென்றால், 1. தமிழக எல்லைப் பகுதி,
- தமிழகம் என்று பெயரிடுவது 3. இந்தி திணிப்பை எதிர்ப்பது ஆக இந்த மூன்றுக்கு மட்டும் போராட் டம் துவங்கத் திட்டம் இடப்பட்டிருக்கிறது. அதற்கான அழைப்பு நகலையும் அனுப்பி இருக்கிறேன். அதைப் பார்த்துக் கையெழுத்திட்டு அனுப்பினால் அதன்படி அச்சடித்து எல்லோருக்கும் அனுப்பி விடுகிறேன்” என்று கூறினார்.
நான், “அய்ந்து போராட்டங்களுக்குச் சொன்னேன். மூன்றை மட்டும் குறிப்பிட்டால் போதாது” என்றும் கூறினேன். பிறகு, “இதனை விவரிக்க இன்று தங்களுக்கு தபால் எழுதுகிறேன். நாளைக்கு என் தபாலைப் பார்த்துவிட்டு விவரம் தெரிவியுங்கள்” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். அன்றைக்கே ட்ரங்காலில் பேசியவைகளை உறுதிப் படுத்த கடிதத்தின் மூலம் விவரமாக அய்ந்து பிரச்னைகளையும் எழுதி அவருக்கு ஒரு கடிதமும் அதே கடிதத்தின் நகல் ஒன்றை நண்பர் குருசாமிக் கும், மற்றொரு நகலை ‘விடுதலை’ அலுவலகத்திற்கும் அனுப்பி, அவைகளை நண்பர் ம.பொ.சி.யிடம் சேர்க்கும்படி எழுதியிருந்தேன். ஏன் மூன்று கடிதங்களை மூன்று பேருக்கும் அனுப்பினேன் என்றால், ஏதாவது ஒன்றாவது போய்ச் சேரும் என்பதற்கே ஆகும். தபால் ஆபீசில் தபால்களை சரியானபடி போய்ச் சேருவதில்லை என்ற பெரிய நியூஸென்ஸுக்காக, இப்படிஅனுப்பினேன். ஆனால் மூன்றும் போய்ச் சேர்ந்துவிட்டன.
அன்றைய தினம், அதாவது 22 ஆம் தேதிதான் எனக்கு நண்பர் ம.பொ.சி.யின் கடிதம் கிடைத்தது. அதில் அவர் எழுதியிருந்ததாவது, “தாங்கள் 19.1.1956 இல் என்னிடம் கூறிய மூன்று விஷயங்களையும் சேர்த்து தலைவர்களுக்கு சர்வ கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்துள்ளேன். அவை
- தமிழக எல்லைப் பகுதி. 2. தமிழகம் என்று பெயரிடுவது 3. இந்தி திணிப்பை எதிர்ப்பது ஆகும்.”
அழைப்பு நகல் ஒன்றை இத்துடன் இணைத் துள்ளேன். அதை தாங்கள் கையொப்பமிட்டு மறு தபாலில் அச்சிட்டு எல்லோருக்கும் அனுப்பி விடுகிறேன். இந்த அழைப்பில் “கண்ணீர் துளி” சார்பில் கையெழுத்துப் போடுவது பற்றி தங்கள் கருத்தறிய விருப்பம். கூட்ட இடமும் நேரமும் இன்னமும் நிச்சயிக்கவில்லை. தாங்கள் ஏதேனும் யோசனை சொன்னால் நலம்” இப்படி எழுதி இருந்தது.
இதில் மூன்று விஷயங்கள் என்று குறிப்பிட்டிருக் கிறார். நான் அவரிடம் நேரில் கூறியவை அய்ந்து விஷயங்கள். ஆனால் இரண்டு விஷயங்களை விழுங்கிவிட்டு மூன்று விஷயங்கள் என்பதாக மட்டும் குறிப்பிட்டிருந்தார். அவர் அனுப்பி இருந்த அழைப்பு நகலில் பின்கண்டவாறு கண்டிருந்தது.
அன்புடையீர் வணக்கம்.
திரு-கொச்சியிலுள்ள தமிழ்ப் பகுதிகள் விஷயத்தில் மத்திய அரசாங்கம் செய்துள்ள நேர்மையற்ற முடிவைத் தாங்கள் அறிவீர்கள். மற்றும் சென்னை ஆந்திர எல்லைப் பிரச்னையில் எல்லைக் கமிஷன் அனுப்பும்படி சென்னை அரசாங்கம் கோரியிருந்ததையும், மத்திய அரசு அலட்சியப் படுத்தியிருக்கிறது. தமிழ்ப் பகுதிகள் மட்டுமே கொண்டு அமையவிருக்கும் தனி ராஜ்யத்திற்கு தமிழகம் என்று பெயரிடுமாறு தமிழக மக்கள் கோரி வந்ததும் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவற்றோடு தமிழ்நாட்டு மக்கள் மீது அரசியல் ரீதியாக இந்தியைத் திணிக்கவும் மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. ஆகவே மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள இந்த அநீதிகளை எதிர்த்து கிளர்ச்சி செய்ய தமிழர்கள் எல்லோரும் கட்சி பேதமின்றி ஒத்துழைக்க வேண்டுமென்று இதில் கையொப்பமிட்டுள்ள நாங்கள் கருதுகின் றோம். கிளர்ச்சி நடத்துவதற்கு பொதுவானதொரு வேலைத் திட்டம் அவசியமாகிறது; ஆகவே இதுபற்றி ஆலோசிக்க எல்லாக் கட்சித் தலைவர் களின் கூட்டம் ஒன்று ஜனவரி 24 ஆம் தேதி அன்று…. மணிக்கு… இடத்தில் கூட்டி இருக்கிறோம். தாங்கள் தவறாமல் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கக் கோருகிறோம்.
ம.பொசிவஞானம்
இப்படி எழுதப்பட்டிருந்தது.
இதில் கூட்டம் நடைபெறும் இடமும் நேரமும் குறிப்பிடாமல் அந்த இடம் காலியாக இருக்கிறது. காரணம் அதை என்னைப் பூர்த்தி செய்து அனுப்பும்படி எழுதப் பட்டிருந்தது. இதில் 5 பேர்களின் கையெழுத் திற்காக உள்ள இடத்தில் முதலாவது எனக்கு காலியாக விடப்பட்டு, இரண்டாவது இடத்தில் நண்பர் ம.பொ.சி. கையெழுத்திட்டிருக்கிறார்.
இன்றைக்கும் முதல் நாள் எனக்குக் கிடைத்த நண்பர் குருசாமியின் கடிதத்திலும் இதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது இன்று காலை 9 மணிக்கு திரு.ம.பொ.சி. அவர்கள் தாமாகவே இங்கு வீட்டுக்கு வந்தார். தனிமையிலேயே வந்தார். முடிவு என்ன என்று கேட்டார்.
“எல்லா பிரச்னைகளையும் கலந்து போரா டினால் தான் பெரியார் அவர்கள் உடன்படுவார்கள்” என்று விளக்கிக் கூறி, நேற்று டைப் அடிக்கப்பட்ட நம் கிளர்ச்சித் திட்டத்தை அவர் கையில் கொடுத்து, அதைப் படித்து விளக்கிக் கூறினேன். தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்றும் கூறி விட்டு, 24 ஆம் தேதியன்று ஆலோசனைக் குழு கூட்டி அதில் விவாதித்து முடிவு செய்யலாம் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியும், க.து. கட்சியும் இக்கூட்டுக் கிளர்ச்சிக்கு வருவதாக நேற்றிரவே ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார்…. பிறகு திரு.ம.பொ.சி. தம் கையெழுத்துடன் பொதுப்படையாக இந்திய சர்க்கார் தமிழருக்கு இழைத்துள்ள தீங்குகளை எதிர்த்துப் போராடுவதற்காக என்று காரணம் காட்டி ஒரு அழைப்பு வேண்டுகோள். எல்லா முக்கியத் தலைவர்களுக்கும் விடுப்பதாகவும் அதில் தங்கள் கையெழுத்திடச் செய்வதற்காக இன்றே திருச்சிக்கு அனுப்புவதாகவும்…….. சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்….. இதைக் கண்டவுடன், நான் அவர் க.துக்கள் சார்பில் கையெழுத்திட என் சம்மதத்தை நண்பர் ம.பொ.சி. கேட்டது. க.துக்களைக் கலந்து ஆலோசித்து அவர்கள் சம்மதம் பெற்று வைத்துக் கொண்ட பிறகுதான் கேட்டிருக்கிறார்.
நான் 21 ஆம் தேதி எழுதிய கடிதத்தை நண்பர் ம.பொ.சி. பார்த்துவிட்டு அதற்கு பதில் எழுதிய கடிதத்தில் எழுதியிருந்ததாவது:
“19.1.1956 இல் நாம் சென்னையில் சந்தித்தபோது, எல்லைப் போராட்டத்தோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்பையும் சேர்க்க வேண்டுமென்று வற்புறுத்தினீர்கள். அதிலுள்ள சங்கடங்களை நான் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தேன்; என்றாலும் தாங்கள் கூறுவதையும் மற்ற தலைவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல சம்மதித்தேன். நேற்று பல முக்கியஸ்தர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினேன். தங்கள் கடிதமும் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழக எல்லைப் பகுதிகள் பற்றிய பிரச்னையில் மத்திய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து எல்லோரும் ஒன்றுபட்டுக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற கொள்கை எல்லோராலும் ஏற்கப்பட்டது. அதுபற்றி மேலும் ஆலோசிக்க ஜனவரி 27 ஆம் தேதி தாங்கள் சென்னையில் இருக்கும் தருணத்தில் மற்ற ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளையும் அழைத்து, எல்லோரும் ஒன்று கூடி ஆலோசிக்க முடிவு செய்துள்ளோம். தாங்கள் அவசியம் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்வதற்கேற்ப சென்னைக்கு வரக் கோருகிறேன்” என்பதாக எழுதப்பட்டிந்தது.
நண்பர் குருசாமி என்னுடைய 21 ஆம் தேதி கடிதத்தைப் பார்த்துவிட்டு பதில் எழுதியதில், “தங்கள் கடிதங்கள் (விடுதலை ஆபீசுக்கு அனுப்பினதும்) ஆக இரண்டும் கிடைத்தன. கடிதத்தை ஊன்றிப் படித்தேன். திரு. ம.பொ.சி. அவர்களை போன் மூலம் கேட்டேன். தனக்கும் கடிதம் வந்திருப்பதாகக் கூறினார். தம் கட்சிக்காரர் ஒருவர் வீட்டில் 4-5 பேர் கம்யூனிஸ்ட் கட்சி க.து.க்கள் திரு.அந்தோணிப் பிள்ளை ஆகியோருடன் இன்று மாலை 4 மணிக்கு கலந்து பேச வேண்டுமென்று என்னை அழைத்தார். தாங்கள் இல்லாதபடி எந்த ஆலோசனைக் குழுவும் தேவை இல்லை – பயன்படாது என்று கருதி வர இயலாமையைக் கூறி விட்டேன். பத்திரிகையில் தங்கள் கடிதத்தை வெளியிடலாமா என்று கேட்டேன். நேரில் வந்து பதில் தருவதாகக் கூறினார். இந்நேரம் வரையில் வரவில்லை… வேண்டுகோள் அறிக்கையில் க.து. கையெழுத்துத் தேவையில்லை என்று இருமுறை காலையிலும் மாலையிலும் கூறினேன். ஒப்புக் கொண்டார். அவர்களும் ஒப்புக் கொண்டதாகக் கூறினார். தாங்கள் 24 ஆம் தேதி இங்கு வர முடியாதென்று அவருக்கு டெலிபோனில் கூறியதாகத் தெரிவித்தார்…. நம்முடைய கருத்து மத்திய சர்க்காரை எதிர்ப்பது என்பது. ஆனால் இவர்களுடைய கருத்து திரு.காமராசர் ஆட்சிக்கு தொல்லை கொடுப்பதற்கு நம்மைப் பயன்படுத்த வேண்டும் என்பது… இன்று மாலை 5-6க்கு போன் செய்தேன். தங்கள கடிதத்தை வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டார். 27 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு ஆலோசனைக் குழு கூட்டுவதென்றும் தங்களுக்காகவே இத் தேதி குறிப்பிடப்பட்டிருக்கிறதென்றும் தங்களை இன்றி எந்த முடிவும் செய்வதற்கு இல்லை என்றும் கூறினார்….”. இப்படியாக அவருடைய கடிதத்தில் கண்டிருந்தது.
தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று போராடிய ஒரே தலைவர் ம.பொ.சிவஞானம் (ம.பொ.சி.) என்றும், பெரியார், அதற்கு ஆதரவு தரவில்லை என்றும், சிலர் பேசவும், எழுதவும் புறப்பட்டுள்ளார்கள். ‘திராவிட’ கட்சிகள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்களோடு சமரசம் செய்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை (இப்போது கேரளாவில் அடங்கியுள்ள பகுதிகள்) தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் ம.பொ.சிக்கும் தனக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை விரிவாக விளக்கிப் பெரியார் 29.1.1956 ஆம் ஆண்டு வேலூரில் நிகழ்த்திய சொற்பொழிவை இங்கு வெளியிடுகிறோம். பெரியாரின் இந்த பேச்சு, பல உண்மைகளை வெளிச்சப்படுத்துகிறது.
தேவிகுளம், பீர்மேடு எல்லை மீட்புப் போராட்டம் தொடர்பாக தனக்கும் ம.பொ.சி.க்குமிடையே நடந்த கடிதத் தொடர்புகளை விளக்கி பெரியார் நிகழ்த்திய உரையை கடந்த இதழில் வெளியிட்டிருந்தோம். அந்த உரையின் தொடர்ச்சி. – ஆசிரியர்
பெரியார் முழக்கம் 12012012 இதழ்