கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்ற நிகழ்வுகள்
உடன்குடி : 17.01.2012 மாலை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் ரூஃபஸ்-சோனாபாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கழகத் தலைவர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சீமான் (நாம் தமிழர் கட்சி), பேராசிரியர் ஜக்மோகன் (உலக சீக்கிய செய்திகள்), ம.செந்தமிழன் (திரைப்பட இயக்குனர்), பாமரன் (எழுத்தாளர்), அற்புதம் அம்மாள், பேராசிரியர் அறிவரசன், முனைவர் சுப. உதயகுமார் (அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: 18.01.2012 மாலை 7 மணியளவில் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் நடைபெற்ற ஈழம்-கூடங்குளம்-முல்லைப் பெரியாறு ஆகியவற்றில் இந்திய அரசின் துரோகத்தை விளக்கி, கழகத்தின் சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. கோ.அ.குமார் (மாவட்ட செயலாளர்) தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அம்புரோசு, துணைத் தலைவர் வே.பால்ராசு முன்னிலை வகித்தனர். சிற்பிராசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பால் பிரபாகரன் உரையாற்றினார். இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். இந்திய அரசின் துரோகத்தை விளக்கி கழகத் தலைவர் அடுக்கடுக்கான ஆதாரங்களோடு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இரா. கலைச்செல்வன் (உழைக்கும் மக்கள் மன்றம்), மாரியப்பன் (பா.ம.க. நகர்மன்ற உறுப்பினர்) ஆகியோர் கலந்து கொண்டனர். சிங்கண்ணன் நன்றியுரை கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கழக தோழர்கள் சிறப்பாக செய்தனர்.
புளியங்குடி : 19.01.2012 அன்று நெல்லை மாவட்டம் புளியங்குடியில் மாலை 7 மணியளவில் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு பார்ப்பன இந்தியாவின் துரோகத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பசும்பொன் (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), பீர்முகமது (ம.தி.மு.க.), அம்மையப்பன் (பு.இ.மு.), தங்கவேல் (நாம் தமிழர்), சத்யராஜ் (தமிழ் உணர்வாளர் கூட்டமைப்பு), சந்திரமோகன் (ஒன்றிய குழு உறுப்பினர்), பால் பிரபாகரன், காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாத்தங்குடி : 21.01.2012 அன்று திண்டுகல் சாத்தங்குடி உறவின்முறை திருமண மண்டபத்தில் செம்பட்டி வின்சென்ட்-விஜயலட்சுமி வாழ்க்கை துணை ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் அய்.பெரியசாமி தலைமை தாங்கினார். கழகத் தலைவர் வாழ்க்கைத் துணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். சக்ரபாணி (ஒட்டன்சத்திரம் ச.ம.உ.), சிவகுருசாமி (தி.மு.க.), பால்பிரபாகரன் (பெரியார் தி.க.) ஆகியோர் உரையாற்றினர். கழகப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் சம்பத், ரவனா, தாமரைக் கண்ணன், பழநி நல்லம்பி, ஒட்டன் சத்திரம் பெரியார் நம்பி, ஆல்பர்ட், தாராபுரம் குமார், பெரியகுளம் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியனின் திண்டுக்கல் இல்லத்திற்குச் சென்று கழகத் தலைவர் அவரது குடும்பத்திறகு ஆறுதல் கூறினார். க.சு.ரவணா, பால். பிரபாகரன், முருகன் (தி.மு.க.) ஆகியோர் உடன் சென்றனர்.
செய்தி: இராவணன்
பெரியார் முழக்கம் 23022012 இதழ்