கோயில் சொத்துகளை ஏப்பமிடும் பார்ப்பனர்கள்

கோயில் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டி லிருந்து நீக்கி, தனி வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராமகோபாலன் ‘பிராமண சங்கம்’ இந்து முன்னணி போன்ற பார்ப்பன பார்ப்பனிய அமைப்புகள் கூப்பாடு போடுகின்றன. கோயில் சொத்துகளை சுருட்டுவதில் பார்ப்பனாகளே முன்னணியில் இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது. மயிலாப்பூர் கபாலீசுவரன் கோயில் நிர்வாக அதிகாரி பரஞ்சோதி, கோயில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். 473 பேரில், இரண்டு பேர் மட்டுமே முஸ்லீம்கள், இந்துக்களில் ஒரு சில பார்ப்பனரல்லாதார் தவிர, பெரும்பான்மையினர், அய்யர், அய்யங்கார்கள்தான். கே.எம்.முன்ஷி ராஜ கோபாலாச்சாரி பார்ப்பனர்களால் தொடங்கப் பட்ட பாரதிய வித்யாபவன், ‘காபாலீசுவரனுக்கு’ 35 லட்சம் ரூபாய் வாடகை தரவில்லை. 1903 ஆம் ஆண்டு பார்ப்பனர்கள் தொடங்கிய மயிலாப்பூர் கிளப் ‘கபாலீசுவரனுக்கு’ தரவேண்டிய வாடகை பாக்கி 3.57 கோடி, ‘புதிய ஜனநாயகம்’ பத்திரிகை  இதை விரிவாக அம்பலப்படுத்தியுள்ளது. தில்லை நடராசன் கோயில் நிர்வாகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த தீட்சப் பார்ப்பனர் கோயில் சொத்துகளை நகைகளைத் திருடியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்றம், தில்லை நடராசன் கோயிலை அறநிலையத் துறையிடம் ஒப்படைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள தீட்சதர்கள், தங்களில் ஒருவர்தான் ‘நடராசப் பெருமான்’ என்றும், எனவே கோயிலும், அதன் சொத்துகளும் தங்களின் ஆன்மிக உரிமை என்று வழக்குப் போட்டிருக்கிறார்கள்.

பெரு முதலாளிகளுக்கு…

நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் பெரு முதலாளிகள் மீதான கம்பெனி வரி மற்றும் நேர் முகவரிகளில் ரூ.4500 கோடி வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு கட்டுவதற்காக எக்சைஸ் வரி, சேவை வரி ஆகியவை 10-லிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட் டுள்ளன. இதனால் 73 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். பெரும் முதலாளிகளிட மிருந்து சட்டபூர்வமாக விதிக்கப்பட்ட வரிகளையே வசூலிக்காமல் விட்டது 65,29,000 கோடி. இதில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்காமல் விட்டது 50,000 கோடி. நாட்டின் நிதிப் பற்றாக் குறையின் அளவே ரூ.5,21,000 கோடிதான். விதிக்கப் பட்டிருந்த வரிகளை கண்டிப்பாக வசூலித்திருந் தாலே ரூ.8000 கோடி நிதி உபரியாக இருந்திருக்கும். ஆனால், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்காமல் இருப்பதற்காக மக்களின் சொத்தாகிய பொதுத் துறை சொத்துகளில் ரூ.30,000 கோடி அளவுக்கு விற்பனை செய்ய அரசு முன் வந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் செல்லப் பிள்ளையாகி மக்களை வாட்டி வதைக்கிறது, இந்திய ஆட்சி!

காந்தி – தேசத் தந்தையா?

உ.பி. மாநிலம் லக்னோவில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அய்ஸ்வர்யா,  தனது பாடப் புத்தகத்தில் ‘காந்தி தேசத் தந்தை’ என்று படித்த போது ஒரு சந்தேகம் எழுந்தது. இந்தப் பட்டத்தை யார் கொடுத்தார்கள் என்று பெற்றோரிடம் கேட்க, அவர்களுக்கு விடை தெரியவில்லை. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல தகவல்களைப் பெற்று வரும் அவரது தாயார் ஊர்வசி சர்மா ஆலோசனையின் பேரில் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதி கேட்டார். தேசத் தந்தை என்பதற்கான அரசு உத்தரவோ, ஆவணமோ ஏதும் கிடைக்காத பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அங்கும் எந்த ஆவணமும் இல்லாத நிலையில் தொல் பொருள் ஆய்வகத்துக்கு கடிதத்தை அனுப்பியது. உள்துறை ஆய்வகத்தின் தகவல் அதிகாரி ஜெயப் பிரகாஷ் ரவீந்திரன், இதற்கான பதிலைத் தர முடியாத நிலையில் அய்ஸ்வர்யாவே நேரடியாக ஆய்வகம் வந்து ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கட்டும் என்று பதில் கூறி விட்டார். தேசத் தந்தை என்று காந்தி அதிகார பூர்வமாக அறி விக்கப்படாத நிலையிலேயே அவர் தேசத் தந்தை யாக்கப்பட்டு, தேசிய  சின்னமாக்கப் பட்டு காந்தியை அவமதிப்பது தேச விரோத குற்றமாக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்கள்தான் காந்தியை ‘மகாத்மா’ வாக்கினார்கள் என்றும், ‘என்னிடம் பெரும் தொகையைக் கொடுங்கள். நான் கழுதையைக்கூட மகாத்மாவாக்கிக் காட்டுகிறேன்’ என்றும் பெரியார் கூறியது எவ்வளவு சரியான உண்மை என்பதும் இதன் மூலம் உறுதியாகியுள்ளது. உண்மையில், 1944 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சிங்கப்பூரில் வானொலி உரை ஒன்றில், சுபாஷ் சந்திரபோஸ் காந்தியை ‘தேசத் தந்தை’ என்று பேசினார். அதைத் தவிர வேறு எந்த அரசு ஆணையோ, ஆவணமோ, அப்படிப் பிறப்பிக்கப்படவில்லை.                             – ‘இரா’

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...