மத பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள்!

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி)

2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் இஸ்லாமியர் களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. பாபர் மஸ்ஜிதில் பூஜை முடிந்து, சபர்மதி துரித வண்டியில் திரும்பிய கரசேவகர்கள், இரயிலில் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். 56 பயணிகள் கொடூரமாக இறந்தனர். இந்த சதியை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குஜராத் காவல்துறையும் அரசும் குற்றம் சாட்டியது. சிறப்பு நீதிமன்றம்

9 ஆண்டுகளுக்குப் பிறகு 2011இல் அளித்த தீர்ப்பில்

11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட

63 பேரை விடுதலை செய்தது. இரயில் பெட்டியை வெளியிலிருந்து எரிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை; தீ – இரயில் பெட்டிக்குள்ளே இருந்துதான் பரவியது என்று அறிவியல் அடிப்படையில் விசாரணை ஆணையங்கள் நிறுவிய நிலையிலும் குஜராத்தின் மோடி ஆட்சி ஏற்க மறுத்தது. அடுத்த சில மணி  நேரங்களிலேயே இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள், தீ வைப்புகள், அழிப்புகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. காவல்துறை தடுக்க வில்லை. இதனால் 3 இலட்சம் இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த இடங்களைவிட்டு இடம் பெயர்ந்து அகதிகள் ஆனார்கள். ‘ஜன் விகாஸ்’ என்ற அமைப் பின் கணக்கீட்டின்படி எட்டு மாவட்டங்களில்

83 நிவாரண முகாம்களில் 16087 இஸ்லாமியர்கள், இன்று வரை, 15 ஆண்டுகள் அகதிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இக்சான் ஜாஃப்ரி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் குல்பர்க் சொசைட்டி பகுதியில் உயிருக்கு பயந்து தனது வீட்டை நோக்கி பாதுகாப்பு தேடி வந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அடைக்கலம் தந்தார். அவர்களைக் கொல்வதற்கு மதவெறி கும்பல் வந்தது. அந்த வெறி பிடித்த கும்பலிடம் குழந்தை களையும் பெண்களையும் விட்டு விடுங்கள் என்று மன்றாடினார். ஆனாலும், அந்த முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரை வெறி பிடித்த கும்பல் குரூரமாக வெட்டி சாய்த்தது. அவரது மனைவி ஜாக்கியா ஜாஃபிரி, இன்று வரை, கணவரைக் கொன்ற குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரி நீதிமன்றத்தில் தீரத்துடன் போராடி வருகிறார். தீவிரவாதம் – பயங்கரவாதம் – தேசவிரோதம் என்றெல்லாம் மக்களை ஏமாற்றும் பா.ஜ.க.வின் அகராதியில் இதற்குப் பெயர் என்ன?

இராணா ஆயுப்

இராணா ஆயுப் என்ற இளம் பெண் பத்திரிகை யாளர், குஜராத் இனப்படுகொலையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள், பா.ஜ.க. தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் குறித்த தகவல்களை புலனாய்வு முறையில் திரட்டினார். இதற்காக தனது அடையாளத்தையே மாற்றிக் கொண்டார். அமெரிக்காவைச் சார்ந்த படத் தயாரிப்பாளராகக் காட்டிக் கொண்டு மைதிலி தியாகி எனும் பெயரில், ‘தெகல்கா’ பத்திரிகைக்காக 8 மாதங்கள் பல இரகசிய தகவல்களை தொடர்புடை யவர்களிடமிருந்தே திரட்டினார். குஜராத் இனப்படுகொலை நடந்து முடிந்த பிறகும் அங்கே ஏராளமான ‘என்கவுண்டர்’களை காவல்துறையும் அரசு துறைகளும் கைகோர்த்துக் கொண்டு செய்தன. யோகா மாஸ்டர்களாகவும், ஆன்மீகத்தின் உச்சத்துக்கு வந்து நிற்கும் புனிதர்களாகவும் அரிதாரம் பூசிக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சியில்தான் குஜராத்தில் இவ்வளவும் நடந்தன.

இராணா ஆயுப் நடத்திய இந்த புலனாய்வினால் தான் மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக  இருந்த அமீத்ஷா, காவல்துறையோடு இணைந்து நடத்திய ‘என்கவுண்டர்கள்’ வெளிச்சத்துக்கு வந்தன. கையும் களவுமாக சிக்கிய அமித்ஷா கைது செய்யப்பட்டார். ஒரு மாநிலத்தின் உள்துறை அமைச்சரே ‘என்கவுண்டர் சதி’யில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட வரலாறு, குஜராத்தில் தான் நடந்தது. அந்த அமீத்ஷாவுக்கு மோடி வழங்கியுள்ள பரிசு – பா.ஜ.க. தலைவர் பதவி! இராணா ஆயூப் தனது புலனாய்வை தொகுத்து, ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார்.  “ழுரதயசயவ குடைநள: ஹயேவடிஅல டிக ய உடிஎநச ரயீ” என்ற நூலை இப்போது தமிழ் வடிவில் பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் அமித்ஷா சிக்கியது குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“2010இல் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை நான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தேன். மனித உரிமை ஆர்வலர்களும், சில அதிகாரி களும் இதற்காக எனக்கு மிகப் பெரிய உதவிகளை வழங்கினர். ‘என்கவுண்டர்’ கொலைகள் நடந்தபோது உள்துறை அமைச்சர் அமீத்ஷாவுக்கும் உயர் அதிகாரி களுக்குமிடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள் எனக்கு கிடைத்தன. உரையாடலின் கீழ் – இரகசியம் என்ற குறிப்போடு ஒரு வாக்கியம் இடம் பெற்றிருந்தது. அதில், “அமைச்சரின் (அமீத்ஷா) செயல்கள் அனைத்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையால் கண்காணிக்கப் பட்டது. என் கவுண்டர் என்ற பெயரில் அப்பாவிகளைக் கொன்று அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த வேண்டும்” என்று அந்த இரகசிய குறிப்பு கூறியது. அமித்ஷாவை சிக்க வைத்தது – இந்த ஆவணம் தான். அவரை குஜராத் மாநிலத்துக்குள்ளேயே நுழைவதற்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம். இப்போது பா.ஜ.க தலைவராகிவிட்டார். மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு வழக்கிலிருந்தே அவரை விடுவித்துவிட்டனர். இவர்கள்தான் மெரினா கடற்கரையில் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டதாக ஓலமிடுகிறார்கள்.

2013 செப்டம்பரில் உ.பி. மாநிலம் முசாபர் நகரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரம் ஒன்றை இந்த கும்பல் உருவாக்கியது. இதில் 65 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டார்கள். 60,000 இஸ்லாமியர்கள் அகதிகளானார்கள். இப்போதும் அகதிகள் முகாமை விட்டு பலர் வெளியேறவில்லை. 34 பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டப்பட்டார்கள். இதில் இரண்டு பேர் சட்டமன்ற உறுப்பினர்கள். அதே முசாபர் நகரில் இந்த கலவரக்காரர்களுக்கு பாராட்டு விழாவை நடத்தி, பாராட்டு விருதுகளையும் வழங்கியது பா.ஜ.க. அந்த விருதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள் என்ன தெரியுமா?

“இந்திய கலாச்சாரத்தின் பாதுகாப்புக்காக வும் மாநில அரசுக்கு எதிராகவும் நடந்த போராட்டத்தில் கலவரம் – தியாகம் செய்து கைதாகியுள்ளதற்காக இந்தப் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது.”

65 பேரை கொலை செய்த கலவரத்துக்கு காரண மானவர்கள், பா.ஜ.க. அகராதியில் தியாகிகளா?

இவர்கள்தான் தேச பக்தர்களா? இவர்கள் தான் அகிம்சையின் வாரிசுகளா?

அண்மையில் “கீதா பிரஸ்ஸும் இந்து இந்தியா வின் உருவாக்கமும்” என்ற ஒரு நூலை அட்சயமுகுல் என்ற பத்திரிகையாளர் எழுதியிருக்கிறார். இந்நூலாசிரியர் பற்றி நாம் குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த பத்திரிகையாளருக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் ராம்நாத் கோயங்கா விருதுக்கு இவ்வாண்டு இவரும் இவரது நூலும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி, பிரதமர் மோடி இந்த விருதை வழங்க இருந்தார். ஆனால் மோடியின் கரங்களால் இந்த விருதை வாங்க முடியாது என்று மறுத்து விட்டார். “ஒரே புகைப்பட ஃபிரேமில் மோடியுடன் நிற்பது பற்றிய நினைவுடன் என்னால் வாழ முடியாது” என்று முகத்தில் அடிப்பதுபோல் கூறிவிட்டார்.

‘கீதா பிரஸ்’ என்ற பார்ப்பன – வர்ணாஸ்ரம கருத்துகளைப் பரப்பும் பதிப்பகம் நூறாண்டு களுக்குமுன் 1923இல் உ.பி. மாநிலம் கோரக்பூரில், ஜெயதயால் கோபந்த்கா, ஹனுமன் பிரசாத் போதார் எனும் இரண்டு மார்வாடிகளால் தொடங்கப் பட்டது. பகவத் கீதை, இராமாயணம், புராணங்கள், உபநிடதங்கள், பக்திக் கதைகள், பஜனை பாடல்கள் என்று பார்ப்பனியத்தைப் பரப்பும் 58 கோடியே 25 இலட்சம் பிரதிகளை இதுவரை இந்த கீதா பிரஸ் வெளியிட்டிருப்பதோடு, 1926 முதல் ‘கல்யாண்’ என்ற இந்தி மாத இதழையும் நடத்தி வருகிறது. இப்போதும் வெளியீடுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நான்கு வேதங்களை மட்டும் வெளியிடுவது இல்லை. தாங்கள் அச்சேற்றிய நூல்களில் மேற்கோள்களாகக் கூட வேதங்களைக் குறிப்பிடுவது இல்லை. ‘சூத்திரர்கள்’ வேதங்களை கேட்கவோ, படிக்கவோ கூடாது என்ற மனுதர்ம கொள்கைகளை அப்படியே பின்பற்றி வருகிறார்கள். இந்தி – இந்துஸ்தான் – வர்ணாஸ்ரமப் பாதுகாப்பு – இராமன் மற்றும் கிருஷ்ண ஜென்ம பூமி – தாய் மதம் திருப்புதல் போன்ற அத்தனை பார்ப்பனிய இந்துத்துவா சிந்தனைகளையும் வடமாநிலங்களில் பரப்பியதில் இந்த ‘கீதா பிரஸ்’க்கு பெரும்பங்கு உண்டு என்பதை நூலாசிரியர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் இராமன், சீதை சிலைகளைக் கொண்டுவந்து போட்டுவிட்டு, இராமன் பிறந்த இடம் என்று உரிமை கோரிய கபட நாடகம் பற்றி ஒரு தகவலும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. அந்த சிலையை திருட்டுத்தனமாக சுவர் ஏறிக் குதித்து, மசூதிக்குள் வைப்பதற்கு முன்பாக சரயூ நதியில் சிலைகளுக்கு ‘புனித நீராட்டு’ நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது. ‘இந்து மகாசபை’ இந்த ‘நீராட்டு’க்கு தலைமையேற்று நடத்தியவர் ‘கீதா பிரஸ்’ஸை துவக்கிய ஹனுமான் பிரசாத் போதார். இந்துத்துவ பார்ப்பனிய செயல் திட்டங்களுக்கு டால்மியா, திவேதி, பிர்லா, ஜெயின், சதுர்வேதி, முகர்ஜி என்ற பனியா-பார்ப்பன கூட்டு எப்படி கரம் கோர்த்து செயல்பட்டிருக்கின்றன என்பதை நுட்பமாக ஆராய்கிறது இந்த நூல்.

‘சுதந்திர’ இந்தியாவுக்கு இதன் நிறுவனர் போதார் முன் வைத்த திட்டங்கள் எவை தெரியுமா? “இராணுவத்தில்  இந்துக்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்; உயர் பதவிகள் எதிலும் முஸ்லிம்களை சேர்க்கக் கூடாது; பசுவதையை தடை செய்ய வேண்டும்; காவிக் கொடியையே தேசியக் கொடியாக்க வேண்டும்; இந்தியா இந்து தேசமாக வேண்டும்” என்பதையே திட்டமாக முன் வைத்தார்.

கணவனோடு மனைவியை சேர்த்து எரித்து ‘உடன்கட்டை’ ஏற்றும் கொடுமையைக்கூட இன்று வரை நியாயப்படுத்துகிறார்கள். ‘கல்யாண்’ இதழின் தற்போதைய ஆசிரியராக இருக்கும் ராதேஷ்யாம் கேம்கா என்பவர் 2011ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார்:

“இந்த காலத்தில் ‘உடன்கட்டை’ ஏறுவது சாத்தியமில்லை. எனவே கணவனை இழந்து ‘விதவை’யானவர்கள் சாஸ்திரங்களில் கூறப் பட்டுள்ளதை பின்பற்றி, ஒரு சன்னியாசியைப் போல் தனது எஞ்சிய வாழ்வை கழிக்க வேண்டும். விதவை மறுமணம் நமது சாஸ்திரங்களில் ஏற்கப்படாதவை; அதை அனுமதிக்க முடியாது; காரணம் தனது பூர்வஜென்ம பாவங்களின் காரணமாகவே விதவையாகிறார்” என்று கூறியிருக்கிறார்.

‘கீதா பிரஸ்’ வெளியீடான, “இல்லற வாழ்வை எப்படி வாழ வேண்டும்?” என்ற நூலில் சுவாமி ராம் ஷுக்தாஸ் என்பவர் இப்படி எழுதுகிறார்.

“கணவனின் பிணத்தோடு சேர்ந்து மனைவியை எரியூட்டுவது வெறுமனே ஒரு சம்பிரதாயம் அல்ல; அவள் மனதிற்குள் உண்மையும் உணர்ச்சிப் பெருக்கும் நுழையும்போது அவள் நெருப்பின்றியே எரிகிறாள். அவ்வாறு எரியும்போது வலியால் அவள் துன்புறுவதில்லை. அவள் இவ்வாறு செய்ய வேண்டும் என்பது வெறுமனே சம்பிரதாயம் அல்ல; அது அவளின் உண்மை நிலை; கற்பொழுக்கம்; வேதப் பண்பாட்டின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் பாற்பட்டது….” – என்று எழுதுகிறார்.

உயிருடன் மனைவியை நெருப்பில் போட்டு எரிப்பதை தடை செய்யும் சட்டம் வந்த பிறகும்கூட இந்த பயங்கர – மனிதாபிமானமற்ற கொடுமையை கொலையை நியாயப்படுத்தும் இந்த பயங்கரவாதிகள் தான் தேசபக்தர்களா?

இப்படி ஏராளம் எடுத்துக் காட்ட முடியும். இந்த வரலாறுகளை மாணவர்களாகிய நீங்கள் சக இளைஞர்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று கேட்டு நிறைவு செய்கிறேன்.                     (நிறைவு)

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

You may also like...