வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

2015ஆம் ஆண்டு அய்.நா.வில் இலங்கை அரசே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது நினைவுகூர வேண்டும். காமன்வெல்த் நாடுகள், பன்னாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு கலப்பு விசாரணை, தீர்ப்பாயத்தை அமைப்போம் என்பதே அத்தீர்மானம். மனித உரிமை ஆணையத்தில் இடம் பெற்றிருந்த 47 நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இப்போது பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இலங்கை.

தமிழர்கள் பிரச்சினைக்கு அந்த அரசு மேற் கொள்ள வேண்டிய விசாரணை ஆணையம் நியமித்தல், இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அய்.நா. காலஅவகாசம் தந்தது. இப்போது பிப்.24 முதல் மார்ச் 27 வரை நடைபெறவிருக்கும் அய்.நா. கூட்டத்தில் அப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமல், மேலும் தங்களுக்கு கால அவகாசம் கேட்கிறது இலங்கை. தமிழர் பிரச்சினையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்பதே இதில் அடங்கியுள்ள சூழ்ச்சி.

அய்.நா. மனித உரிமை ஆணையர் சயத்ராத் அல்உசேன், கடந்த மார்ச் 3ஆம் தேதி சமர்ப்பித்துள்ள அறிக்கை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. “போர் முடிந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் போர்க் குற்ற விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக்கு வந்த அதிபர் மைத்ரி பால சிறீசேனா. போர்க் குற்றம் குறித்த முழுமையான விசாரணைக்கும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கும் அளித்த உறுதி மொழியில் எந்த செயல்திட்டமும் நிகழ வில்லை. மக்கள் துன்புறுத்தலுக்கும் (யரௌநள), சித்திரவதைக்கும் (கூடிசவரசந) உள்ளாகும் செய்திகள் பரவலாக வந்து கொண்டே இருக்கின்றன. கடந்தகால கொடுமைகளுக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டாக வேண்டும்” என்று கடுமையான வார்த்தைகளோடு மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வெளி வந்திருக்கிறது. “இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியார் நிலங்களை திருப்பி ஒப்படைக்கவும், பன்னாட்டு பார்வையாளர் களடங்கிய கலப்பு விசாரணைக்கான தீர்ப்பாயத்தை உருவாக்குவதிலும், இலங்கையில் மனித உரிமை ஆணையத்தின் நேரடி கண்காணிப்புக்கு உரிய ஏற்பாடுகளை உருவாக்குவதிலும் இலங்கை அரசு முன்னுரிமை தந்து செயல்படவேண்டும்” என்று மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை வலியுறுத்து கிறது. “இலங்கை அரசு தனது ஆளும் கூட்டணிக்குள் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் கவனம் செலுத்துகிறதே தவிர, பொறுப்பேற்க வேண்டிய சிக்கலான இனப் பிரச்சினைகளை புறந்தள்ளுகிறது” என்றும் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தம் தலைமை யிலான தமிழ் தேசிய விடுதலை கூட்டணி, இலங்கை ஆளும் கட்சியில் இடம் பெற்றிருந்தாலும் இப்போது, 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து விட்டனர். பன்னாட்டு விசாரணை தீர்ப்பாயத்தை இலங்கை அரசு நியமிக்க வற்புறுத்து மாறு அய்.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சம்பந்தம், சுமந்திரன் உள்ளிட்ட 5 தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மட்டும் தனித்து நிற்கிறார்கள்.  மீண்டும் ராஜபக்சே பதவிக்கு வந்துவிடாமல்  தடுக்க சிங்கள பேரினவாதிகளை திருப்திப்படுத்தி அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்வதே இலங்கை அரசின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

தமிழர் பகுதியில் 68000 ஏக்கர் நிலம், இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பில்தான் இருக்கிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் கேப்பலப்பிலவு எனும் ஒரு ஊரில் மட்டும், இராணுவப் பிடிக்குள் இருக்கும் 42 ஏக்கர் நிலத்தை மீட்க, 84 குடும்பங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. காணாமல் போனவர்களின் கதி என்ன என்ற கேள்விகளோடு தமிழீழப் பகுதிகளில் மக்கள் போராட்டம் வெடித்து வருகிறது. ஜே.ஆர். ஜெய வர்த்தனா கொண்டு வந்த ‘பயங்கரவாத தடைச் சட்டம்’ இப்போதும் அப்படியே நீடிக்கிறது. காணாமல் போன 21,000 தமிழர்கள் கொல்லப்பட் டார்களா அல்லது சிறையில் வாடுகிறார்களா என்ற கேள்விக்கு, ‘அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப் பில்லை’ என்று வெளிப்படையாகவே கூறுகிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.

இலங்கை அரசு பொது மன்னிப்பு வழங்கி யிருப்பது இராஜபக்சேயை எதிர்த்த முன்னாள் இராணுவ தளபதியும், இனப்படுகொலையாளரு மான சரத்பொன்சேகாவுக்கு மட்டும்தான். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் வழங்கி, ‘பீல்ட் மார்ஷல்’ என்ற உயர் கவுரவத்தையும் வழங்கியிருக்கிறது இலங்கை அரசு.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிடுவதோடு தனது கடமையை முடித்துக் கொள்ளப் போகிறதா என்பது இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி. மனித உரிமை ஆணையம் இந்தப் பிரச்சினையை அய்.நா. பொதுச் சபைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலகம் முழுதும் தமிழர்கள் வலியுறுத்துகிறார்கள். அய்.நா. பொதுச் சபை, மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, அதை பாதுகாப்புக் குழுவுக்கு அனுப்ப, அய்.நா. விதிகளில் இடம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்போது இலங்கை மீது நேரடி நடவடிக்கை எடுக்கும் நிலை அய்.நா.வுக்கு உருவாகும். பாது காப்புக் குழுவில் நிரந்தர உறுப்பு நாடுகள் தங்களின் ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையை காப்பாற்ற முன் வரலாம். ஆனாலும், ஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையிலேயே இருப்பதை சர்வதேச நாடுகளிடம் நிச்சயமாக அது கொண்டு செல்லும். இந்திய தேசிய பார்ப்பனிய ஆட்சி, அப் போதும் இதே ‘இலங்கை ஆதரவு’ப் போக்கையே மேற்கொள்ளுமா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

அய்.நா. வழியாகவே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா என்ற கேள்விக்கு, அய்.நா.வையும் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே நமது கருத்தாகும். இனப்படுகொலை அங்கே நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்தும், அய்.நா. தனது கடமையை செய்யாது குற்றம் இழைத்தது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. பான்கிமூன் இதற்கு முழு பொறுப்பு.

அய்.நா.வின் சாசனங்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலையைத் தடுக்காமல் அய்.நா.வின் உள் கட்டமைப்புகளே இனப் படுகொலைக்கு துணை போயின என்ற உண்மைகள் ஆதாரங்களுடன் வெளி வந்திருக்கின்றன. இறுதி யுத்தத்தில் அய்.நா.வின் மனித உரிமை ஆணையமும், பாதுகாப்புக் குழுவும், அய்.நா. உள்ளக அமைப்புகளும் தோல்வி அடைந்து நின்றன என்று அய்.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜேன் எலிசன் வெளிப்படையாகவே அறிவித்தார். அய்.நா.வின் துரோகங்களை அம்பலப்படுத்துதல்; அதே அய்.நாவுக்கு நீதி கேட்டு அழுத்தம் தருதல் என்ற இரட்டை முனைகளில் தமிழர்களின் அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். வரலாற்றில் முதல் முறையாக அய்.நா.வின் மீதே கெயிட்டி இன மக்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு வழக்கு தொடுத்திருக்கும் தகவலை பிரான்ஸ் நாட்டின் தமிழ் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். அப்படி வழக்கு தொடரும் உரிமை இல்லை என்று அய்.நா. வாதிட்டாலும், அய்.நா.வை அம்பலப் படுத்துவதற்கான ஒரு போராட்ட வடிவமாக அந்த ஆய்வாளர் அதைப் பார்க்கிறார்.

அய்.நா.வின் எதிர்ப்பு, அய்.நாவைப் பயன்படுத்துதல் என்ற அணுகுமுறையைப் போலவே இந்தியாவுக்கு அழுத்தம் தரும் போராட்ட முறை களும் அவசியமாகிறது. காங்கிரஸ் ஆட்சியானாலும், பா.ஜ.க. ஆட்சியானாலும் வெளியுறவுத் துறைகளை கையாளும் அதிகாரம் பெற்ற பார்ப்பன அதிகார வர்க்கம், ஈழத் தமிழர் பிரச்சினையில் எதிர்ப்பு நிலைகளையே எடுத்து வருகிறது. மோடி ஆட்சியை ஆதரவு நிலை எடுக்க வைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் மதவாத தேசியத்தை முன் வைத்து ஈழத் தமிழர் போராட்டத்தை ‘இந்துக்கள்’ போராட்டமாக மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. இது ஆபத்தானது. தேசிய இனப் போராட்டத்தை மதவாதப் போராட்ட சிமிழுக்குள் அடைப்பது விடுதலைப் போராட் டத்தின் நோக்கத்தையே வீழ்த்துவதோடு பவுத்த சிங்கள பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கும் நியாயம் சேர்ப்பதில் போய் முடிந்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த நிலையில், தமிழர்களின் கோரிக்கை உலகம் முழுதும் ஒரே குரலில் ஒலிக்க வேண்டும்.

  • அய்.நா.வே; மீண்டும் இலங்கைக்கு காலக்கெடு வழங்காதே!
  • மனித உரிமை ஆணையமே; ஈழப் பிரச்சினையை அய்.நா. பொது அவைக்கு பரிந்துரை செய்!
  • இந்திய அரசே! கலப்பு விசாரணை நியமிப்போம் என்று இலங்கை அரசே கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசே மறுப்பதைக் கண்டித்து இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடு!

அய்.நா.வையும் இந்தியாவையும் நோக்கி இந்த முழக்கங்கள் வெடிக்க வேண்டும்.

 

பெரியார் முழக்கம் 09032017 இதழ்

You may also like...