மதுரைப் பகுதியில் சட்டவிரோத ‘பால்ய’ திருமணங்கள்

மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுமிகளுக்குத் திருமண வயது வரும் முன்பே ‘பால்ய விவாகம்’ நடத்தும் கொடுமை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சாதிப் பிரிவைச் சார்ந்தவர்கள், பள்ளிப் படிப்பு படிக்கும் போதே, பெண்கள் ‘காதலில்’ சிக்கி விடுவார்கள் என்று அஞ்சியும் அதனால் தங்களின் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்றும், அதைத் தவிர்க்கவே இளம் வயதில் திருமணம் செய்து வைத்து விடுவதாகவும் கூறுகிறார்கள்.

உசிலம்பட்டி அருகே வி.கல்லுப்பட்டியைச் சார்ந்த 8வது படிக்கும் 13 வயது சிறுமிக்கு அவரைவிட 17 வயது அதிகமுள்ள மணமகனுக்கு அடுத்த சில வாரங்களில் திருமணம் நடைபெற உள்ளது. இது தங்களின் சாதி வழக்கமாகத் தொடர்ந்து வருகிறது என்கிறார்கள். பெண்ணின் தாய்க்கு 11 வயதிலும், பெண்ணின் மூத்த சகோதரிக்கு 12 வயதிலும் திருமணம் நடந்ததாம். ‘எங்களுக்கு குடும்ப கவுரவமும் உறவுகளுமே முக்கியம்’ என்கிறார், 70 வயது மூதாட்டி கருப்பாயி. தாய்மாமனுக்கு பெண் கேட்க முழு உரிமை உண்டு. “எனக்கு பெண் குழந்தை பிறந்தவுடன், அவள்தான் என் மூத்த மருமகள் என்று என் அண்ணன் கூறிவிட்டார்” என்கிறார் பழனியம்மாள்.

“கடந்த வாரம் என் வீட்டுக்கு வந்த அண்ணன், என்னுடைய மகனுக்குத்தான் உன் மகள்” என்று மீண்டும் உறுதிப்படுத்தினார். “அப்படியே நான் மறுத்தால் வேறு எந்த உறவுக்காரரும் திருமணம் செய்து விடாமல், என் அண்ணன் தடுத்து விடுவார்” என்கிறார் பழனியம்மாள். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மதுரை புறநகர் காவல்துறை மூன்று சட்டவிரோத சிறுமிகள் திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளது. “எனது மகள் திருமணத்தை அப்படி போலீஸ் தடுத்தால், எனது மகளை காவல் நிலையத்திலேயே விட்டுவிடுவேன். சட்டபூர்வ வயது வந்த பிறகு, போலீசே மணமகன் பார்த்து திருமணம் செய்யட்டும் என்று கூறி விடுவேன்” என்கிறார் பழனியம்மாள்.

தமிழ்நாட்டில் சிறுமிகள் சட்டவிரோத திருமணங்கள் சாதிய வழக்கமாக மாறி நிற்கிறது. சாதியம் பெண்ணடிமையையும், மூடநம்பிக்கை களையும், வலிமைப்படுத்தி வருகிறது என்பதற்கு இந்தச் செய்திகள் சாட்சியங்களாகும். ‘மகளிர் நாள்’ நிகழ்ச்சிகள் நடத்தும் இயக்கங்கள், தொண்டு அமைப்புகள், இந்த சமூகச் சீர்கேடுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு (மார்ச் 5) இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

 

பெரியார் முழக்கம் 08032012 இதழ்

You may also like...