திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (2)

1913  சென்னை அய்க்கிய சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடேசனார் மருத்துவமனைத் தோட்டத்திலேயே சிறப்பாக நடைபெற்றது. ஓரிருவரைத் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஆண்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டதானது பார்ப்பனர் தம் ஆதிக்கம் ஏனையோரை எந்த அளவுக்கு பாதிப்புக்குள்ளாக்கியிருந்தது என்பதைக் காட்டியதுடன், பார்ப்பனரல்லாதார் எனும் உணர்வின் ஒருமித்த வலிவையும் உணர்த்தியது. “சென்னை அய்க்கிய சங்கம்” என்ற பெயர் இச்சங்கத்தின் நோக்கத்தையும், ஆற்றும் பணியையும் குறிக்கும் வகையில் இல்லாமல், பொருத்தமற்றதாகக் காணப்படுவதால் ‘பார்ப்பனர் அல்லாதார் சங்கம்’ என்ற பெயர் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டது. பார்ப்பனரல்லாதார் என்று ஏன் எதிர்மறைப் பெயரால் குறிக்க வேண்டும்? திராவிடர் சங்கம் என்றே பெயரிடலாம் என்ற கருத்து பெரும்பான்மையோரால் முன்மொழியப்படவே சென்னை அய்க்கிய சங்கம் என்ற பெயரானது, ‘திராவிடர் சங்கம்’ என்று பெயர் மாற்றம் பெற்றது. சென்னைக்கு வருகை தந்த ராயல் கமிஷனின் முன் அன்றைய அரசுத் தலைமைச் செயலாளராயிருந்த அலெக்ஸாண்டர் கார்டியூ சென்னை மாகாணத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் ஆதிக்கம் பற்றி புள்ளி விவரத்துடன் எடுத்துக் கூறினார்.

1914  திராவிடர் சங்கத்தின் புகழ் நாடெங்கும் பரவியது. இச்சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்தது. இச்சங்கத்தைத் ‘திராவிடத் தந்தை’ என்று புகழப்பட்ட நடேசனார் சிறப்புற நடத்திச் சென்றார். திராவிடர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி மாடியில் உள்ள கூடத்தில் நிகழ்ந்தது. பார்ப்பனரல்லாத பட்டதாரிகளுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும், இவ்விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க இருந்த வெங்கடகிரி மகாராஜா உடல்நிலை சரியில்லாமல் வர இயலாமற் போகவே, நீதிபதி சி.கிருஷ்ணன் தலைமையேற்று சிந்தனையைத் தூண்டும் அறிவுரை ஆற்றினார். இவ்விழாவில் டாக்டர் டி.எம்.நாயர் (தரவாத் மாதவன் நாயர்) ஆற்றிய உரை பார்ப்பனரல்லாதாரை வீறு கொள்ளச் செய்யும் வகையில் எழுச்சி மிக்கதாக அமைந்தது. தனது உரையின் முடிவில் பார்ப்பனரல்லாத இளைஞர்களை நோக்கி, ‘விழி! எழு! இன்றேல் என்றென்றும் வீழ்ந்துபடுவாய்!’ என எழுச்சிக் குரல் எழுப்பினார்.

‘திராவிடர் சங்கம்’ இன எழுச்சியைத் தூண்டும் வண்ணம் அடிக்கடி கூட்டங்களை நடத்தி வந்ததோடு இலக்கியக் கூட்டங்களையும் நடத்தி வந்தது. இக்கூட்டங்கள் அனைத்தும் நடேசனார் மருத்துவமனைத் தோட்டத்திலேயே நடைபெற்றன. உதாரணமாக, மே 15 இல் ‘நமது சமுதாயத்திற்கு இன்றைய தேவை’ என்ற பொருளில் மா.சிங்காரவேலு அவர்களும், ஜூலை 25 இல் ‘இந்திய இதிகாசங்களின் சரித்திரப் பின்னணி’ என்ற தலைப்பில் ஜி.ரங்கநாத (முதலியாரும்), ஆகஸ்ட் 22 இல் ‘பரோபகாரம்’ என்ற பொருளில் ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச சாமிகளும், செப்டம்பர் 5 இல் ‘திராவிடரின் தற்கால நிலை’ என்ற பொருள் குறித்து அலமேலு மங்கம்மாள் அவர்களும், அக்டோபர் 3 இல் ‘அப்பர் திருமுறை’ என்ற பொருளில் இ.என்.தணிகாசல (முதலியாரும்) சொற்பொழிவு ஆற்றினர். மேலும், இது போன்ற கூட்டங்களில் திரு.வி.க., நாயர், தியாகராயர், எல்.டி. சாமிக்கண்ணுப் பிள்ளை போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்கள் சொற்பொழிவு ஆற்றினர்.

இக்கூட்டங்களில் எல்லாம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுவது, ஆண்டுதோறும், கல்லூரிப் பட்டம் பெற்ற திராவிட மாணவப் பட்டதாரிகளுக்கு வரவேற்பும், விருந்தும் அளித்து புகழுரையும், நல்லுரையும் புகன்று ஊக்கமும் உற்சாகமும் அளித்து பாராட்டு வழங்கும் விழாக்களேயாகும். இந்த ஆண்டு விழாக் கூட்டங்களில் கூடும் பட்டதாரி மாணவர்களுக்கு, திராவிட உணர்ச்சியையும் வீரத்தையும் ஊட்டி, பார்ப்பனர்களோடு போட்டியிட்டு முன்னுக்கு வரும்படி ஊக்குவித்து, அவர்களிடையே சுயமரியாதை உணர்வு பொங்கி எழும்படி தலைவர்கள் எழுச்சியுரை ஆற்றினர். எஸ்.ஜி.ரங்கராமானுஜ (முதலியார்), எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் (பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்), எஸ்.சடகோப (முதலியார்), ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) பின்னாளில் இந்திய அரசு நிதி அமைச்சர் போன்ற பெருமக்கள் எல்லாம் இச்சங்கத்தில் உறுப்பினராக இருந்து பிறகு உலகுக்கு அறிமுகமானவர்களே ஆவர். திராவிடர் சங்கமான பொதுவாக, பார்ப்பனர் அல்லாதாருக்குத் தலைமைப் பாதுகாவல் இடம் போன்று இயங்கியது என்றால் மிகையாகாது. இத் திராவிடர்  சங்கத்தின் வியக்கத்தக்கப் பணியால் ஈர்க்கப்பட்ட முதுபெருந் தலைவர்களான தியாகராயரும், நாயரும், இதைவிட வன்மையும் ஆற்றலும் வாய்ந்த நாடு தழுவிய ஓர் இயக்கத்தின் தேவையை உணரத் தலைப்பட்டனர்.

(தொடரும்)

கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 15032012 இதழ்

You may also like...