பார்ப்பன விரத மோசடிகள்

இந்த சதுர்மாஸ்ய விரத காலத்தில் பார்ப்பன மடத் தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் தங்கள் பிரச்சினைகளைக் கூறுவதற்கு சீடர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பது வாடிக்கை. இந்த பார்ப்பன விரதம் பற்றி சிலாகித்து, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் (ஜூலை 18) ஆர். சாமிநாதன் என்ற பார்ப்பனர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முழுமையாக வேதநெறி வாழ்க்கையில் ‘பிராமணனாக’ வாழும் இந்தக் காலத்தில் இந்தப் பார்ப்பனர்களிடம் தங்களின் மனக் குமுறல்களை கொட்டினால், அதை வேதப் பார்ப்பன ‘குருக்கள்’ காதால் கேட்டு தலையாட்டினாலே கூற வந்தவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடுமாம்.

இப்படியெல்லாம் எழுதும் அந்தப் பார்ப்பனர், ‘சதுர்மாஸ்ய விரத காலங்களில்’ பார்ப்பன குருக்களை சந்திப்பதுகூட வியாபாரமாகிவிட்டது என்றும், செல்வாக்குள்ளவர்கள் முக்கிய புள்ளிகள், தட்டு தட்டாக பொருட்களை வாங்கிக் கொண்டு கியூ வரிசையில் நிற்காமல் தனித் தரிசனம் பெற்று விடுகிறார்கள் என்றும் புலம்புகிறார். சங்கராச்சாரிகளையும் பார்ப்பன குருக்களையும் சந்திக்க வரும் கூட்டத்தினர், தங்களின் பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், குடும்பப் பிரச்சினைகளையே கொட்டி தீர்ப்பதாகவும் கட்டுரையாளர் புலம்புகிறார்.

சதுர்மாஸ்ய விரத காலத்தில் சங்கராச்சாரிகள் பழங்களையோ, உலர்ந்த திராட்சைகளையோ, முந்திரி பருப்பையோ, எலுமிச்சை பழங்களையோ சாப்பிடக் கூடாது என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறதாம். ஆனால், ஆசி வாங்க வரும் பார்ப்பனர்கள் இந்த பழங்களையே வாங்கிக் கொண்டு வருவதாகவும், கட்டுரையாளர் புலம்புகிறார்.  ‘மனுதர்ம’ப்படி பார்ப்பனருக்கு மட்டுமே உரியது இந்த விரதம். அதை இன்றைக்கும் பெருமையோடு ஆங்கில ஏடுகளில் பார்ப்பனர்கள் எழுதுகிறார்கள். காலத்துக்குப் பொருந்தி வராத இந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் சீடர்களால் மீறப்பட்டாலும், மனுதர்மத்தைத் தூக்கிப் பிடிக்கவே பார்ப்பனர்கள் விரும்புகிறார்கள்.

இதே சதுர்மாஸ்ய விரத காலத்தில்தான் காஞ்சிமடத்திலிருந்து ஜெயேந்திரன், தண்டத்தை (கைக்குச்சி) போட்டுவிட்டு ரகசியமாக வெளியேறினார் – என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியார் முழக்கம் 02082012 இதழ்

You may also like...