திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (3) அன்னிபெசன்ட் எடுத்த ‘ஆரிய அவதாரம்’
1915 பார்ப்பனரல்லாத இளைஞர்களின் இன எழுச்சியின் வெளிப்பாடாக திராவிடர் சங்கத்தின் சார்பில் ‘திராவிடப் பெருமக்கள்’ மற்றும் பார்ப்பனரல்லாதார் கடிதங்கள் ஆகிய இரு வெளியீடுகள் வந்தன. பார்ப்பனர் அல்லாதாரின் கல்வியை ஊக்குவித்தும், பார்ப்பனருடன் போட்டியிட்டு முன்னேறும் வகையில் ஒன்று சேர்ந்து உழைக்கும்படி தூண்டும் வகையில் அமைந்த 21 கடிதங்களைக் கொண்டது, ‘பார்ப்பனர் அல்லாதார் கடிதங்கள்’ என்ற நூலாகும். இவ்விரு நூல்களும், எஸ்.கே.என். என்னும் சுருக்கப் பெயர் (முழுப் பெயர் தெரியவில்லை) உள்ளவரால் எழுதப்பட்டு, ‘இந்தியன் பாட்ரியாட்’ எனும் இதழாசிரியர் சி.கருணாகரமேனனால் வெளியிடப்பட்டவை ஆகும்.
செப்டம்பர் 25 இல் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தைத் தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மையார், அதனை முற்றிலும் பார்ப்பனர் நலனுக்கே அர்ப்பணித்தமையினை உணர்ந்த பார்ப்பனரல்லாத தலைவர்கள் மேலும் விழிப்புற்றுக் கிளர்ந்தெழுந்தனர். ஏற்கனவே காங்கிரசில் ஈடுபட்டு உழைத்து வந்த தியாகராயர், நாயர் ஆகியோர், தென்னாட்டுப் பார்ப்பனர்களும் வடநாட்டு ஆதிக்கமும் ஒன்று சேர்ந்து தென்னிந்திய திராவிடர்களுக்கு அநீதி இழைத்து வரும் ஓர் அமைப்பே காங்கிரஸ் என்று உணர்ந்து அதனின்றும் விலகியிருந்தனர். இந்நிலையில் ‘ஹோம் ரூல்’ என்ற புதிய போர்வையில் ‘சுய ஆட்சி’ வேண்டி பார்ப்பனியம் அன்னிபெசன்ட் உருவில் அவதாரம் எடுத்திருப்பதைக் கண்டு வெகுண்டு சுய ஆட்சி என்பது பார்ப்பன ஆட்சியே (ழடிஅந சுரடநள ளை செயாஅin சுரடந) என்று கூறி நாடெங்கும் இதனை அம்பலப்படுத்தினர். காங்கிரசில் உறுப்பினராய்ச் சேர்ந்து அதன் உள்ளே இருந்து கொண்டே ‘ஹோம் ரூல்’ இயக்கத்தை அன்னிபெசன்ட் நடத்தினார். ஸ்மார்த்தப் பார்ப்பனர்களின் ஆதரவினைப் பெற்ற அன்னிபெசன்ட் நால்வருணக் கொள்கையை ஆதரித்து, சமஸ்கிருத வளர்ச்சி, இந்து மதப் பிரச்சாரம் ஆகியவற்றை முன்னின்று நடததினார். ஆரிய கலாச்சாரத்தைக் காக்க வந்த அவதாரமாக தன்னை நினைத்துக் கொண்டு செயல்பட்டார்.
(தொடரும்)
கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து
பெரியார் முழக்கம் 22032012 இதழ்