கொள்கை உறவுகளின் நெகிழ்ச்சி சந்திப்பு!

ஈரோட்டில் நடந்த கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்வுகளிலிருந்து ஒரு தொகுப்பு:

  • விடியற்காலை 5 மணியிலிருந்தே தோழர்கள் வருகைத் தொடங்கவே ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபம் களை கட்டத் தொடங்கி விட்டது.
  • காலை 9 மணி முதல் பேருந்திலும், சிற்றூர் களிலும் வரிசை வரிசையாக வரத் தொடங்கினர். கழகத் தோழர்கள், தோழியர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். காலையில் தனிப் பேருந்துகளில் வந்த தோழர்கள், வழியில் பவானி கூடுதுறை ஆற்று நீரில் நீராடி வந்து சேர்ந்தனர்.
  • தன் முனைப்புகளை புறந்தள்ளி, தன்மானக் கிளர்ச்சிக்கு அணியமாகும், தோழர்களே! வாரீர்! வாரீர்! என்று ஈரோடு மாவட்டக் கழகத்தின் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
  • மேடையின் பின்புறத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தில், இணைய வரும் தோழர் களின் சந்திப்பு” என்ற பதாகை, அமைக்கப்பட் டிருந்தது.
  • 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் – தோழர்களுடன் வாகனங்களில் சென்று பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார் சிலைக்கு முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். (படம் மேலே)
  • செல்லாயம்மாள் திருமண மண்டபம், திருமண அரங்கு, அதற்கு அருகே உணவுக் கூடம். வெளியே விருந்தினர் அமரும் இடம். அதற்கு அருகே வாகனங்கள் நிறுத்துமிடம் என்று நான்கு பிரிவுகளாக இருந்தது. இந்த நான்கு பகுதிகளிலும் இருக்கைகள் போடப்பட்டு மண்டபத்துக்கு வெளியே வாயிலில் துணிப் பந்தல் (சாமியானா) போடப்பட்டு, அங்கும் இருக்கைகள் போடப் பட்டிருந்தன. வெளியே ஒலி பெருக்கி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. நிற்க இடமின்றி பலரும் நின்று கொண்டே கேட்டனர்.
  • முதல் அமர்வு பகல் 12 மணி தொடங்கி, 2.30 மணிக்கு முடிவடைந்தது. தோழர்கள் அனைவருக் கும் ஈரோடு மாவட்டக் கழகம் சிறப்பான உணவு ஏற்பாடு செய்திருந்தது. நீண்ட வரிசையில் நின்று தோழர்களும் தோழியர்களும் உணவைப் பெற்றுச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த உணவு வழங்கும் நிகழ்வில் தோழர்கள் அமைதியாக வரிசையில் காத் திருந்தனர்.
  • குறிப்பிடத்தக்க அளவில் பெண்கள் பங்கேற்றனர். மாநில நிர்வாகிகள் பட்டியலிலும் பெண்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • சுயமரியாதை கொள்கையில் ஊறி நிற்கும் மதுரை மருத்துவர் சவுந்தரபாண்டியன் பங்கேற்று, கழகத் தலைவர், பொதுச் செயலாளருக்கு பெரியார் குத்தூசி குருசாமி இணைந்துள்ள படங்களை பரிசாக வழங்கினார். தோல் மருத்துவரான அவர், தோல் தொடர்பான நோய்களுக்கு ஆலோசனை யும், சிகிச்சையும் தருவதற்கு தயாராக வந்திருந்தார். தேவைப்பட்ட தோழர்கள் ஆலோசனை, மருந்துகளைப் பெற்றுச் சென்றனர்.
  • பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய அமர்வில், மாவட்டக் கழகங்களின் சார்பாக தோழர்கள் அனைவரும் ‘ரத்தினச் சுருக்கமாகப்’ பேசினர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெயரை மக்களிடையே கொண்டு அறிமுகப்படுத்து வதற்கும் அடுத்தக் கட்ட இயக்க செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவித்தனர்.
  • சசிக்குமார், மோகன்ராஜ், சண்முகசுந்தரம் ஆகியோரது நிறுவனத்தின் சார்பாகவும், விசு, அர்ச்சுனன் ஆகியோரது நிறுவனத்தின் சார்பாக வும் உணவிற்கு தேவையான பொருளுதவி களைச் செய்தனர். ஜெயராமன், நிவாசு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் ஒலி பெருக்கி அமைத்துக் கொடுத்தனர்.
  • ஈரோடு மாவட்ட செயலாளர் இராம. இளங் கோவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
  • நிகழ்வின் தொடக்கத்தில் சிறுமி மதுமிதா பெரியாரின் பெண்ணுரிமை கடவுள், மத மறுப்பு கருத்துகளை வலியுறுத்தி நிகழ்த்திய உரை அனைவரையும் கவர்ந்தது.
  • பெரியார் காலத்தில் அவரது ‘பாதுகாப்பு’ அரணாக’ நின்று ‘தனி மனித ராணுவமாக’ செயல்பட்ட 75 வயது அகவை நிறைந்த ஆசிட் தியாகராசன் உணர்ச்சியோடு பேசினார். கருஞ் சட்டை அணிந்து அடையாளம் காட்டிக் வழமையாகக் கொள்ளாமல் இருக்கும் ஆசிட் தியாகராசன், இந்த நிகழ்வில் பங்கேற்க, புதிதாக கருஞ்சட்டை வாங்கி அணிந்து வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
  • மூத்த பெரியார் பெருந்தொண்டர் ஈரோடு மாரப்பனார் தனது மகன் உடன் கலந்து கொண்டார். மேலும் ஈரோடு விடுதலை வாசகர் வட்டத் தலைவர் அறிவுக்கன்பன் என்கின்ற குப்புசாமி, சென்னை வழக்கறிஞர் வீ. இளங் கோவன், மாவட்ட பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பல முன்னணி தோழர்கள் என திரளாக திரண்டிருந்தனர்.
  • சேலம் மேற்கு மாவட்டம் சார்பாக, காவலாண்டியூர் விஜயகுமார், சேலம் கேம்ப் அருள்செல்வம், மேட்டூர் (ஆர்.எஸ்.) அரவிந்த், டைகர் பாலன் ஆகியோர் இணைந்து கழகத் தலைவருக்கு அறுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான மடி கணினியை வழங்கினர்.
  • முதல் நாளே வந்திருந்த தோழர்களுக்கு இரவு உணவு, அடுத்த நாள் காலை உணவு, முற்பகலில் தேநீர் ஆகியவைகளை தயாரிக்கும் பொறுப்பு களை தோழர்கள் பிரேமா, சுகுணா, பேபி மோகன் ஆகியோர் ஏற்றுக் கொண்டு சிறப்பாகப் பணியாற்றினர். மதிய உணவு சென்னை தோழர் மோகன் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • ‘தனித்து செயல்படுவதே சிறந்தது’ என்ற நிலைப் பாட்டை கடந்த ஜூலை 7 ஆம் தேதி சென்னை யில் நடந்த ‘பெரியார் திராவிடர் கழக’ மாநில செயற்குழுவில் வலியுறுத்திய தோழர்களுக்கு மட்டுமே இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இதில் உடன்பாடுள்ள தோழர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வேண்டுகோள் விடப்பட் டிருந்தது. எந்தப் பொறுப்பாளர்களையோ தோழர்களையோ தனிப்பட்ட முறையில் கழகத் தலைவரோ, பொதுச் செயலாளரோ, தோழர்களோ, நிகழ்வுக்கு வருகை தர அழைக்க வில்லை. தோழர்களின் முடிவுக்கே விடப் பட்டது. தாமாகவே தோழர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தனர்.
  • 10 ஆண்டுகாலமாக அமைப்புக்குள்ளே சரியான புரிதலிலும், இலக்கு நேக்கிய இலட்சியப் பயணத்திலும் முனைப்பாக இணைந்து நின்ற தோழர்கள், ஒரே இடத்தில் கூடி ஒருமித்த உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டது, இந்த சந்திப்பின் தனிச் சிறப்பாகும். சந்திப்பை கொள்கைக்கான அமைப்பாக்கிக் கொண்டு, தாங்கள் விரும்பும் இலட்சிய அடையாளம் நிறைந்த பெயர் கிடைத்த பூரிப்புடன் செயல்களம் நோக்கி, விடைபெற்றுச் சென்றனர் தோழர்கள்.

– நமது செய்தியாளர்

பெரியார் முழக்கம் 16082012 இதழ்

You may also like...