தலையங்கம் அய்.நா. தீர்மானத்துக்குப் பிறகு….

அய்.நா. மனித உரிமைக் குழுவில் அமெரிக்கா-இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானம், மார்ச் 22 ஆம் தேதி ஓட்டெடுப்பு வழியாக நிறைவேறிவிட்டது. தீர்மானத்தை ஆதரித்து 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்து நடுநிலை வகித்தன. இறுதிக் கடடத்தில் தீர்மானத்தை ஆதரிக்க முன்வந்த இந்தியா தீர்மானத்தின் நகலை திருத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதன்படி தீர்மானத்தில் இலங்கை மீது சர்வதேசப் பிடிக்கு ஓரளவு வழிகுத்த வாசகங்கள் அகற்றப்பட்டன. இலங்கை அரசு தமிழர் பிரச்சனை தீர்வுக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மனித உரிமைக் கவுன்சிலுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்; இலங்கை அரசே நியமித்த பாடம் கற்றல் மற்றும் நல்லிணக்க விசாரணை அறிக்கையின் போதாமையை சரி செய்து முழுமையான அறிக்கையாக்குவதற்கு அய்.நா.வின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இலங்கைப் பெற வேண்டும் என்ற வாசகங்கள் தீர்மானத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இந்தப் பிரச்சனைகளில் இலங்கை அரசின் சம்மதம், விருப்பம் இருந்தால் மட்டுமே, ய்.நா. தலையிட முடியும் என்று தீர்மான வாசகங்கள் மாற்றப்பட்டுவிட்டன. இதைக்கூட ஏற்க மறுத்த இலங்கை அரசு, தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு “சாபம்” விடுவதுபோல் கருத்து தெரிவித்தது. உடனடியாக இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதி, தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

“அய். நா. கூட்டத்தில் (இலங்கைக்கு) சாதகமான வழிகாட்டும் முறைகளைப் பின்பற்றுமாறு, தங்களின் (ராஜபக்சே) கடிதம் கிடைத்த பிறகு, நான் (மன்மோகன்) அய்.நா. இந்திய பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன். அப்படி சாதகமான வழியைப் பின்பற்றும் எந்த வாய்ப்பையும் இந்தியா தவறவிடவில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். அதன்படி, தீர்மானங்களில் இரு பக்கத்துக்கும் சமநிலையான தன்மையை புகுத்தியதை தாங்கள் அறிவீர்கள்” என்று எழுதி தீர்மானத்தை மாற்றியமைத்ததற்கு இந்தியாவே காரணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் அத் தீர்மானத்தை இந்தியா எதிர்த்ததால் இலங்கையுடன் கொண்டுள்ள உறவு பாதிக்காது என்றும், போருக்குப் பிறகு தமிழர் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது என்றும், இலங்கை அரசுக்கு நற்சான்றிதழும்  வழங்கி விட்டார். இப்படியெல்லாம் சுற்றி வளைத்து வார்த்தைகளைத் தேடி அலைவதைவிட ‘தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தமைக்கு இந்தியாவின் மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்’ என்றே மன்மோகன் சிங் வெளிப்படையாக எழுதியிருக்கலாம்.

உலகின் மனசாட்சியையே உலுக்கிவிடும் இனப்படுகொலைகளையும்,  போர்க்குற்றங்களையும் செய்து முடித்த கொடுமைகளைவிட இலங்கையின் நல்லுறவு பாதித்துவிடக் கூடாதே என்ற கவலைதான் பிரதமருக்கு மேலோங்கி நிற்கிறது. தமது ஆட்சியின் கீழ் ஒரு தேசிய இனமாக உள்ள தமிழர்களின் ஒருமித்த குரலை உணர்வைக்கூட மதிக்காமல், இராஜபக்சேயை ‘தாஜா’ செய்ய இந்தியாவின் பிரதமர் துடிப்பது, இந்தியாவின் மாண்புக்கு (அப்படி ஒன்று இருந்தால்) பெரும் அவமானமாகும். இந்தியாவின் தீர்மான ஆதரவு வெறும் கண் துடைப்புதான் என்று மன்மோகன் சிங் கூறுகிறாரா என்று கேட்க விரும்புகிறோம்.

தீர்மானத்துக்குப் பிறகு அமெரிக்க செனட்டில் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் விவாதிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் நகல் வலுவற்றதாக இருந்தாலும் அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் சர்வதேச கவனத்துக்கு வந்து விட்டன என்பதுதான் இதில் முக்கியம். இலங்கை அரசு என்னதான் குற்றங்களை மறைக்க முயன்றாலும்  சர்வதேச தலையீட்டை இனியும் தடுத்து நிறுத்த முடியாது என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசு மட்டுமல்ல, இந்தியாவும் தொடர்ந்து இலங்கையைக் காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டால், அதன் விளைவுகள் மோசமாகிவிடும். ஏதோ தமிழகத்தில் உருவான அழுத்தம் காரணமாக ஆதரவாக வாக்களித்தோம்; அத்துடன் முடிந்துவிட்டது என்று மன்மோகன் ஆட்சி கருதிடக் கூடாது. இந்த அழுத்தத்தின் பின்னால் உள்ள உணர்வுகளை புறந்தள்ளுவது தமிழக உணர்வுகளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கிறோம்.

முதலில், தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் ஆட்சியை விலக்கிக் கொள்வதற்கு இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். அம்மக்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்தின் பிடியில் உழல்வதிலிருந்து விடுவிக்க வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட 90000 பெண்கள், கணவர்களை இழந்து விட்டார்கள். இவர்களில் பெரும்பாலோர் இளம் பெண்கள். இந்த சூழ்நிலையில் தமிழர் பகுதியில் நிர்வகத்தையே இராணுவம் நடத்துவதால், இந்தப்பெண்கள் கடும் நெருக்கடிகளை பாலுறவு வன்முறைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. போருக்குப் பிறகு சட்டவிரோத கைதுகள் சித்திரவதைகள் தொடருவதை சர்வதேச மனித உரிமைகள் கழகம் (ஆம்னஸ்டிஇன்டர் நேஷனல்) கடந்த 13 ஆம் தேதி அய்.நா.வில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் விரிவாகப் பதிவு செய்துள்ளது.

இலங்கை அரசு தமிழர்கள் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன் வராவிட்டால் இத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த நாடுகள் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்வது கட்டாயமாகிவிடும். இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்ததால் ஆசிய நாடுகளின் “நெருப்பு வளையத்துக்குள்” இருப்பதாகவும் ஆசிய நாடுகள் அனைத்தும் இலங்கையைத்தான் ஆதரிக்கின்றன என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்தியா இத் தீர்மானத்தை ஆதரிப்பதில் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்திருக்குமானால், ஆசிய நாடுகளின் ஆதரவைத் திரட்டியிருக்கலாம். அப்போது பல ஆசிய நாடுகள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருக்கும் என்பது சர்வதேச அரசியலை குறிப்பாக ஆசிய புவிசார் அரசியலை அவதானிக்கும் அனைருக்குமே தெரியும். சொந்த நாட்டில் ஒரு தேசிய இனமாக உள்ள தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளைவிட ஆசியப் பகுதி அரசியலுக்கே இந்தியா முன்னுரிமை தருவது முக்கியம் என்றால் அப்படிப்பட்ட ஒரு இந்தியாவின் கீழ் தமிழர்கள் ஏன் ஒரு தேசிய இனமாக உழன்று கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்விதான் வெடித்துக் கிளம்பும். ப. சிதம்பரம் உள்துறை அமைச்சர் பதவி அதிகாரத்தில் கொலு வீற்றிருப்பதற்குக் காரணம் தமிழர்களே தவிர, இந்தியாவுக்கான ஆசிய அரசியல் மய்யம் அல்ல என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். பிரிட்டனிலே சீக்கியர் தலைப்பாகைக்கு தடை என்றால், கண்டனம் தெரிவிக்கும் மன்மோகன் சிங், தமிழர்களின் உரிமைக்கான உணர்வுகளை இப்படி எல்லாம் அலட்சியப்படுத்துவதை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 

பெரியார் முழக்கம் 29032012 இதழ்

You may also like...