திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (5)

அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கப் பணிகள் செப்டம்பரில் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் பார்ப்பன ரல்லாத இனத்திற்கு பெரும் பாதிப்பு நிகழக் கூடும் என்கிற நியாயமான அச்சம், பார்ப்பனரல்லாதார் பெரிய அளவில் ஒன்றுபட்டு ஒரு இயக்கமாக இணைந்து இயங்க வேண்டியதின் இன்றியமையாமை யினை உணர்த்திற்று.

இந்த முயற்சியின் விளைவாக, நவம்பர் 20 இல் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டி.எத்திராஜ் (முதலியார்) வீட்டில் நடேசனார், தியாகராயர், நாயர் உட்பட ஏறத்தாழ 30 பார்ப்பனரல்லாத பிரமுகர்கள், நாடெங்கிலும் இருந்து வந்து கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். (“விக்டோரியா பப்ளிக் ஹாலில்” கூடியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது) அவர்களுள் பனகல் அரசர், நாகை பக்கிரிசாமி, சர்.எ.ராமசாமி (முதலியார்), சேலம் எல்லப்பன், தஞ்சை அப்பாசாமி (வாண்டையார்), கரந்தை உமா மகேஸ்வரன் (பிள்ளை), மதுரை எம்.டி. சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இக்கூட்டத்தில் “தென்னிந்திய மக்கள் சங்கம்” என்ற பெயரில் ஒரு ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி துவக்குவது என்றும், அதன் சார்பில், பார்ப்பனரல்லாதார் நலனுக்காக வாதாடும் நோக்குடன் நாளிதழ் வெளியிடுவது என்றும், அதன் சார்பில்,  பார்ப்பனரல்லாதார் நலன்களைப் பேணிக் காப்பதற்கென்று ஓர் அரசியல் கட்சியைத் துவக்குவது என்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி முதல் கட்டமாக “தென்னிந்திய மக்கள் சங்கம்” என்ற பெயரில் ஜாயிண்ட் ஸ்டாக் கம்பெனி ஒன்று சென்னையில், ஒரு பங்கு ரூ.100 வீதம் 1000 பங்குகளைக் கொண்ட மூலதனத்துடன் ஆரம்பமானது. இதற்கெனச் சொந்தக் கட்டடம் ஒன்றும் வாங்கப்பட்டது. (சென்னையில்  பிளாசா தியேட்டர் இருந்த இடம்) உபரிச் செலவுகளுக்கு ராஜா ரங்கராவ் பகதூர் என்ற டேலாப்பூர் ஜமீன்தார் கடன் கொடுத்து உதவினார். இக்காலகட்டத்தில் தியாகராயர் “நான் பிராமின்” என்ற ஆங்கில இதழுக்கு ஆசிரியராகவும், நாயர் “ஆண்டி செப்டிக்” என்ற மருத்துவ இதழுக்கு ஆசிரியராகவும் விளங்கி வந்தனர்.

தென்னிந்திய மக்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் சர்.பி.தியாகராயர் கையொப்பமுடன் டிசம்பர் 20 இல்   ‘பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை’ வெளியிடப் பட்டது. வரலாற்று புகழ்மிக்க அவ்வறிக்கையில் பார்ப்பனர் அல்லாதாரின் நிலைமை, பார்ப்பனர் எவ்வாறு பல்வேறு துறைகளிலும் விகிதாச்சாரத்துக்கும் கூடுதலாக ஆக்ரமித்துக் கொண்டுள்ளார்கள் என்ற விளக்கம், பார்ப்பனரல்லாதார் இனி என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரை ஆகியவை இடம் பெற்றிருந்தன. இவ்வறிக்கை, அலெக்சாண்டர் கார்டியூ (1913) ராயல் கமிஷனின் முன் அளித்த பார்ப்பனரல்லாதார் நிலை குறித்த தகவல்களையும் விரிவாக எடுத்துக்காட்டி விளக்கியது. ‘சுய ஆட்சி’ என்பதைப் பார்ப்பனர் அல்லாதார் ஆதரிக்க வில்லை என்பதையும் அவ்வறிக்கை தெளிவாக்கியது.

(தொடரும்)

கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 05042012 இதழ்

You may also like...