மக்கள் பிரதிநிதியும் மனுதர்மத்தின் அடிமையே!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரானாலும் ‘மனுதர்ம’த்துக்குத்தான் அவர் கட்டுப்பட வேண்டும் என்பதே நடைமுறை! ‘மனுதர்மம்’ கட்டளை யிட்டுள்ள மனித ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பதற்குத் தான் ஊராட்சிகளில் ‘ரிசர்வ்’ தொகுதி முறை கொண்டு வரப்பட்டது. சட்டம் ‘தலித்’ தொகுதியை வரையறுத்து, ‘தலித்’ வேட்பாளரைத் தேர்வு செய்தா லும், சட்டம், ‘மனு’வின் பார்ப்பன கூட்டத்தின் முன் மண்டியிட்டு வருகிறது. இதுவே இப்போதும் நீடிக்கிறது.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொட்டாங்கச்சியேந்தல் பஞ்சாயத்தின் தலைவன் வி.கருப்பன், தலித் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் கடந்த 7 மாதங்களாக பஞ்சாயத்து கூட்டங்களில் அவர் நாற்காலியில் அமரும் உரிமை கிடையாது. தரையில் தான் உட்கார வேண்டும. ஏனைய தலித் அல்லாத உறுப்பினர்கள் மட்டும்நாற்காலியில் அமர்ந்திருப்பார்கள். ஊராட்சி துணைத் தலைவர் ஆறு தொகுதி உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாயத்து ஊழியர் கூடிப் பேசி முடிவுகளை எடுப்பார்கள். நீட்டிய இடத்தில் பஞ்சாயத்து தலைவர் கையெழுத்திட்டாக வேண்டும். மாநில காவல்துறை இயக்குனருக்கு தன் மீது இழைக்கப்படும் தீணடாமைக் கொடுமைகளை விளக்கி, பஞ்சாயத்து தலைவர் புகார் செய்துள்ளார். இந்த பஞ்சாயத்திலும் மதுரை மாவட்டத்திலுள்ள பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துகளிலும் ‘தலித்’ பஞ்சாயத்து தலைவரை சாதி வெறியர்கள் ஏற்க மறுத்ததால், 20 ஆண்டுகளாக தேர்தலே நடக்க வில்லை. 2006 ஆம் ஆண்டில் தான் தீவிர முயற்சிக்குப் பிறகு இந்த பஞ்சாயத்துகளில் தேர்தலையே நடத்த முடிந்தது. இப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து பஞ்சாயத்து செயலாளரை மட்டும் பதவி நீக்கம் செய்துள்ளார். ‘தீண்டாமை’ யைத் திணித்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீது தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘மனுதர்டத்தின்’ அதிகாரத்தின் முன் உள்ளாட்சி சட்டங்களும் வன்கொடுமை சட்டங்களும் மண்டியிட்டுத்தான் தீர வேண்டும் என்றால் இதற்குப் பெயர் ‘மனுதர்ம’ ஆட்சி தானே?

பெரியார் முழக்கம் 14062012 இதழ்

You may also like...