இது ஜனநாயகமா? சாதிய நாயகமா?
25.3.2012 ‘இந்து’ நாளேட்டில் பேராசிரியர் சுரா தராபுரி – இந்தியாவில் சாதிய தீண்டாமைக் கொடுமைகளை விளக்கி எழுதிய கட்டுரையின் சுருக்கம்:
1949 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்ட வரைவு நகலை முன்மொழிந்த அம்பேத்கர், மனிதர்களை பிளவுபடுத்தும் ஒரு சமூகமாக இந்த நாடு இருக்கிறதே, அதன் விளைவுகள் என்னவாகும் என்று தனது அச்சத்தைத் தெரிவித்தார். நிறுவனமாக்கப் பட்ட சாதிய கட்டமைப்பில் தலித் மக்கள் சந்திக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகள் பற்றிய சரியான புரிதல் அவருக்கு இருந்தது. மேல் கீழ் என்று ஏணிப்படி வரிசை போல் இந்த ஏற்றத் தாழ்வுகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். தீண்டாமைக் கொடுமைகளை அவரே தனது வாழ்க்கையில் சந்தித்தார். சாதிக் கட்டமைப் பின் விளைவான தீண்டாமைக் கொடுமைகள் இப்போதும் தொடருகின்றன.
2012 பிப்.15 அன்று அரியானா மாநிலம் தவுகாத்பூர் கிராமத்தில் ஒரு தலித் இளைஞன் பொது குடிநீர்ப் பானையில் தண்ணீர் குடித்ததற்காக உயர்சாதியினர், அவரது கையை வெட்டினர். உலகின் மிக் பெரும் ஜனநாயக நாட்டில் 21 ஆம் நூற்றாண்டில் இதுதான் நிலை.
- கணக்கெடுப்புகள் வழியாகக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி தருபவை. 27.6 சதவீத தலித் மக்கள் காவல் நிலையங்களுக்குள்ளே நுழைய தடை.
- பொது சுகாதாரத் துறையில் 33 சதவீத பணியாளர்கள் தலித் மக்கள் வீட்டுக்குச் செல்ல மறுக்கிறார்கள்.
- 23.5 சதவீத தலித் மக்களுக்கு அஞ்சல் துறை ஊழியர்கள் கடிதங்களை விநியோகிப்பது இல்லை.
- கூட்டுறவு அமைப்புகள் மற்றும் சுய உதவி குழுக்களின் கூட்டங்களில் 30.8 சதவீத தலித் மக்கள் மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார அனு மதிக்கப்படுவதில்லை. 29.6 சதவீத பஞ்சாயத்து களிலும் இதே நிலைதான்.
- 14.4 சதவீத கிராமங்களில் தலித்துகள் பஞ்சாயத்து அலுவலகங்களுக்குள் நுழைய தடை இருக்கிறது.
- 12 சதவீத கிராமங்களில் வாக்குச் சாவடியில் வாக்களிக்க தடை உள்ளது. அப்படியே வாக்களிக்க அனுமதித்தாலும் அவர்கள் தனியாக ஒரு வரிசையில் நிற்க வேண்டும்.
- 48.4 சதவீத கிராமங்களில் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கத் தடை.
- 35.8 சதவீத கிராமங்களில் ஊர்க் கடைகளில் நுழைய தடை; கடைகளிலிருந்து தூரத்தில் நின்று கொண்டு பொருள் வாங்க காத்திருக்க வேண்டும். கடைகாரர் பொருளைக் கொண்டு வந்து தரையில் வைப்பார்; பணத்தையும் அப்படியே பெற்றுக் கொள்வார்.
- 3 இல் ஒரு பங்கு கிராம தேனீர்க் கடைகளில் தனிக் குவளைகள், தனி இருக்கைகள்.
- 73 சதவீத கிராமங்களில் தலித் அல்லாதவர் வீடுகளுக்குள் நுழைய தடை.
- 70 சதவீத கிராமங்களில் தலித் அல்லாதவர்கள் சேர்ந்து உணவு உண்ண மறுப்பு.
- 47 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்களில் திருமண ஊர்வலங்களில் பங்கேற்க அனுமதி இல்லை.
- 20 சதவீத கிராமங்களில் சுத்தமான நாகரிக ஆடைகளை அணிவதற்கோ, கண்ணாடி அணி வதற்கோ (கூலிங் கிளாஸ்) அனுமதி இல்லை.
- சொந்த சைக்கிள் இருந்தாலும் ஏறிச் செல்லக் கூடாது; குடை பிடிக்கக் கூடாது; பொது சாலைகளில் செருப்பு அணியக் கூடாது; புகை பிடிக்கக் கூடாது; தலையை குனிந்து தான் நிற்க வேண்டும்; நிமிர்ந்து நிற்கக் கூடாது.
- சராசரியாக 64 சதவீத கோயில்களில் தலித் மக்கள் நுழைய தடை நீடிக்கிறது. உ.பி.யில் 47 சதவீத கோயில்களிலும் கருநாடகத்தில் 94 சதவீத கோயில் களிலும் நுழைய தடை போட்டுள்ளார்கள்.
- 25 சதவீத கிராமங்களில் ஒரே வேலை செய்யும் தலித்துகளுக்கு மற்ற தொழிலாளர்களைவிட கூலி குறைவு. கூடுதல் நேரம் உழைக்க வேண்டும். கூலியும், காலம் கடந்து வழங்கப்படும். அடி, உதைக்கு உள்ளாக வேண்டும். உ.பி., பீகார் போன்ற நிலப் பிரபுத்துவ மாநிலங்களில் மட்டுமல்ல, பஞ்சாபில் கூட இந்த நிலைதான். 37 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் வெகுதூரத்துக்கு அப்பால் நின்று, கூலியைப் பெற வேண்டும்.
- 35 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தங்கள் உற்பத்தி பொருள்களை உள்ளூர் சந்தைகளில் விற்பதற்கு தடை உள்ளது. சாதி அடையாளம் தெரியாத ஊர்களுக்குச் சென்றுதான் சந்தைகளில் பொருள்களை விற்க வேண்டியிருக்கிறது. இதனால் பெரும் இழப்புகளை சந்திக்கிறார்கள்.
- ஆட்சி அதிகார நிர்வாக அமைப்புகளில் பெரும் பான்மையினர் தலித் அல்லாதவர்கள் என்பதால் போராடினாலும் நீதி கிடைப்பது இல்லை.
- உயர்பதவிகளை நெருங்கி வரும் வாய்ப்புகள் கிடைத்தால் தலித் பிரிவினர், குறுக்கு வழிகளில் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். 1950லிருந்து 2000 வரை 47 சதவீத தலைமை நீதிபதிகளும், 40 சதவீத நீதிபதிகளும் பார்ப்பனர்களாகவே இருந்துள்ளனர் என்ற தகவலை நாடாளுமன்ற குழு அறிக்கை தெரிவிக்கிறது.
- பிரிட்டிஷ் ஆட்சி பிரித்து ஆளும் சூழ்ச்சியை மேற்கொண்டதாக கூறப்பட்டது. இப்போது சுதந்திர இந்தியாவில் சொந்த நாடே சொந்த மக்களை பிரித்தாளுகிறது.
ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடும் சாதிய அமைப்பில் நிலவும் இந்த சமூகச் சூழலில் நேர்மை, ஒழுங்கு, ஜனநாயக மதிப்பீடுகள் குழி தோண்டி புதைக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை மேலும் செயல்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அடிமனதில் தோன்றுவதில்லை. ஏணிப்படி வரிசை யில் அமைந்த சாதி ஏற்றத்தாழ்வு மட்டுமே செல் வாக்குடன் ஆட்டிப் படைக்கிறது. அதுவே உயர்சாதி யினரின் தனி உரிமையாக கருதப்படுகிறது. இந்த நிலையில் சமத்துவம் என்ற சிந்தனையே மேலோங்க முடியாமல் தடைபட்டு நிற்கிறது, சாதி – சமூ கத்தைப் பிளவுபடுத்துகிறது. இந்த ‘பிளவு’ அன்னிய ஆட்சி என்ற உணர்வையே தலித் மக்களிடம் உருவாக்கு கிறது. சொந்த நாடு, சொந்த மதத்தைச் சார்ந்த மக்களையே வேறுபடுத்துவதும் அதில் ஆழ்மனப் பெருமை அடைவதுமே நீடிக்கிறது.
பெரியார் முழக்கம் 05042012 இதழ்