‘தலித்’ தலைவர் ‘சுதந்திர’ கொடி ஏற்ற எதிர்ப்பு: கழகத்தினர் முறியடிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்குற்பட்ட நெடுமானூரி லுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் வரும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின்போதும் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் கொடியேற்றி வைப்பார். ஆனால், இந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அது தனி ஊராட்சி என்பதால் தாழ்த்தப்பட்டவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எனவே சுதந்திர நாளன்று இந்து ஆதிக்கசாதியினர் ஒன்று கூடி தற்பொழுது தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்பதால் தலைமை ஆசிரியரே கொடியேற்றட்டும் என்று கூறினர்.

இந்த செய்தியறிந்த நெடுமானூரைச் சார்ந்த கழகத் தோழர் இளையராஜா தலைமையில் ஒன்று திரண்டு சுதந்திரக் கொடியை தலைமை ஆசிரியர் ஏற்றுவதில் எங்களுக்கு கவலையில்லை. ஆனால், இத்தனை ஆண்டுகள் உயர்சாதி தலைவர் என்பதால் அவரே கொடியேற்றி வந்தார். ஆனால் இந்த முறை தாழ்த்தப்பட்டவர் தலைவர் என்பதால் இந்த முறையை மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று கூறினார். மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த தலைவர் ராசேந்திரன் தான் கொடியேற்ற வேண்டும். இல்லையெனில் சுதந்திர நாளை எதிர்த்து கருப்புக் கொடி ஏற்றுவோம் என்றும் கூறினர். காவல் துறையினரிடமும தகவல் தரப்பட்டது. பலகட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு தலைவர் கொடியேற்றினார்.

 

பெரியார் முழக்கம் 23082012 இதழ்

You may also like...