இந்தியாவில் இனவாதம்
இந்தியாவிலும் இனப் பாகுபாடு இன வெறி இருக்கிறது என்றும், இங்கே இனவெறி இல்லை என்று நடிக்க வேண்டாம் என்றும், ‘இந்து’ ஏட்டில் (மே 29) ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார். இந்தியா வின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா போன்ற மாநிலத்தவர்களை இந்தியாவின் பிற மாநிலங்களில் வெறுப்புக்குரியவர்களாகவே அவர்களிடம் பாகுபாடு பார்க்கிறார்கள் என்று அந்தக் கட்டுரை கூறியது. அது உண்மைதான் என்றா லும், மேல் கீழ் அடுக்கு வரிசையில் சாதியமைப்பு சமூகத்தைக் கூறு போட்டு காலங்காலமாய் மக்களை ஒதுக்கி வைத்திருப்பதை இக்கட்டுரையாளர் கண்டு கொள்ளவே இல்லை. அறிவாளிகள் என்று கூறப் படும் பிரிவினரும், நடுத்தர வர்க்கமும், சாதியமைப் பால் நிலைநாட்டப்பட்டுள்ள ‘இன ஒதுக்கலை’ப் பற்றி கள்ள மவுனம் சாதிப்பதால் இந்தக் கொடூர மான அமைப்பு தேசத்தின் பிரச்சினையாக்கப் படாமல், காப்பாற்றப்பட்டு வருகிறது இந்த உண்மையை ஜூன் 1 ஆம் தேதி அதே நாளேட்டில் இனியன் இளங்கோ எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். சாதி தீண்டாமை என்பதையும் இன வேறுபாடாகக் கருத வேண்டும் என்று 2001 இல் டர்பனில் நடந்த இனவெறிக்கு எதிரான சர்வதேச மாநாட்டிலேயே வலியுறுத்தபபட்டது. ஆனாலும், ‘மனுதர்ம’ப் பார்வையில் ஊறிக் கிடக்கும் சமூகம், உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத ‘தீண்டாமை’ எனும் கொடுமையை இன வேறுபாடாகவோ, இன வெறுபபாகவோ, பேசுவதற்கோ, எழுதுவதற்கோ கூட தயாராக இல்லை.
“கணவன் துராசாரமுள்ளவனாகவிருந்தாலும் அந்நிய ஸ்திரீலோனாயிருந்தாலும் நற்குணம் இல்லாதவனாக இருந்தாலும் பதிவிரதையான ஸ்திரீயானவள் அவனைத் தெய்வத்தைப் போற் பூசிக்க வேண்டியது.” – மனு அத் 5; சுலோகம் 154.
ஒரு பெண் திருமணத்துக்குப் பிறகு ‘பதிவிரதை யாக’ இருப்பதற்கான இலக்கணம் இது. இதுவே மனு விதித்த கட்டளை. பெரியார் கேட்டார், ‘பதிவிரதை’ என்று பெண்ணுக்கு கூறப்படும் இலக்கணம் ஆணுக்கு உண்டா? ஏன் ‘பதி விரதன் என்ற சொல் தமிழில் இல்லை? – இது பெரியார் கேட்ட கேள்வி! தமிழிலே கணவனை இழந்தப் பெண்ணுக்கு ‘விதவை’ என்ற சொல் இருக்கிறது. அதேபோல் மனைவியை இழந்த கணவனைக் குறிக்க ‘விதவன்’ என்ற சொல் ஏன் இல்லாமல் போனது? இதுவும் பெரியார் கேட்ட கேள்விதான். மனு எழுதி வைத்த ‘பெண்ண டிமைக்கு எதிராக பல சட்டங்கள் வந்துவிட்டன. ஆனாலும், சமூகத்தை ‘மனு தர்மமே’ இன்னும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. உதாரணமாக கிருட்டிணகிரி மாவட்டத்திலிருந்து அண்மையில் வெளி வந்துள்ள செய்தியைப் பார்ப்போம்.
மே 30 ஆம் தேதி ஏடுகளில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த மாவட்டத்தில் 2010-11 ஆம் ஆண்டில் 14 குழந்தை திருமணங்களும், 2011-12 இல் 62 குழந்தை திருமணங்களும் 2012 ஏப்ரல், மே மாதங்களில் 12 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, 80 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த செய்தி கூறுகிறது.
- 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு விடுவதால் அரசுப் பள்ளிகளில் இந்த பருவத்தில் மாணவியர் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்துவது அதிகரித்து வருகிறது.
- இதற்காகவே மாவட்ட ஆட்சித் தலைவர் சி.என். மகேசுவரன் ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவ மாணவியர் குழந்தைத் திருமணத்துக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற நடை முறையை அமுல்படுத்தினார். குழந்தைத் திரு மணம் நடப்பதாகத் தெரிந்தால், உடனே மாவட்ட ஆட்சித் தவைலருக்கு தெரிவிக்க வேண்டிய தொடர்பு எண்களும் விளம்பரப் படுத்தப்பட்டன. இப்படி வந்த புகார்களின் அடிப்படையில் 89 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
- திருமணத்தை விரும்பாத மாணவிகளே நேரடி யாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவகத்தோடு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கிறார்கள்.
- மே மாத துவக்கத்தில் ஓசூரில் ஆடம்பரமாக ஒரு திருமண மண்டபத்தில் குழந்தை திருமணம் நடக்க இருந்த நேரத்தில் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரே களத்தில் இறங்கி அதிகாரி களை மிரட்டி திருமணத்தை நடத்த மேற் கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
(இதே சட்டமன்ற உறுப்பினர்தான் அண்மையில் கழகத் தோழர்களை தனது சகோதரர் மூலமாகக் கொடுமையாக தாக்குவதற்கு ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஏற்கனவே ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் செய்தி வெளி வந்துள்ளது.)
- “காது குத்துப் போன்ற பெயரில் வேறு சடங்குகளை நடத்தப் போவதாக உறவினர்களை அழைத்து அங்கே குழந்தைத் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. வெளியூர்களில் குடும்பத் தினருடன் சென்று வேலை பார்ப்போர் ஊர்த் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து குழந்தைத் திருமணங்களை திடீரென்று நடத்தி விடுகின்றனர்” – என்று அநத் செய்தி கூறுகிறது.
ஏழ்மையில் உழலும் பின் தங்கிய சமூகத்தினர் மனுவின் பார்ப்பனியத்தை பிடிவாதமாக இறுக்கிப் பிடித்துக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த பல்ய விவாகக் கொடுமைகளை சமூகத்தில் திணித்த பார்ப்பனர்களோ தங்களின் முன்னேற்றத்துக்காக கைவிட்டுவிட்டனர்.
பெரியார் முழக்கம் 14062012 இதழ்