தலித் பத்திரிகையாளர்கள் இல்லாத ஊடகங்கள்
இந்தியாவின் செய்தி ஏடுகளின் அறைகளிலும், தொலைக்காட்சி நிறுவனங்களின் ‘கேமரா’ அறைகளிலும் பட்டியல் இனப்பிரிவினரையோ பழங்குடியினரையோ காண முடியவில்லை. இவர்களின் பங்கேற்பு இல்லாமலே ஊடகத் துறைகள் செயல்படுகின்றன என்று, இத்துறையில் நீண்டகாலமாக கவனம் செலுத்திவரும் பேராசிரியர் ஜெஃபிரே, புதுடில்லி பத்திரிகை ஆசிரியர் சங்கத்தில் நிகழ்த்திய உரையில் குறிப்பிட்டார். தேசிய ஊடகங்களில் இந்தப் பிரிவினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தியிருந்தால், இந்த அநீதியை நீக்கியிருக்க முடியும் என்றார். அமெரிக்க ஊடகங்களில் கறுப்பின மைனாரிட்டியினர் பங்கேற்பு இல்லாமல் இருந்ததைக் கண்டறிந்து அந்நாட்டு பத்திரிகையாளர் கழகம் கறுப்பின மைனாரிட்டியினரின் பங்கேற்பை ஒரு காலக்கெடு நிர்ணயித்து உறுதிப்படுத்தியது. அதுபோன்ற சமூகத் தணிக்கை இங்கே கொண்டுவரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பட்டியல் இன பழங்குடியினரின் பிரச்சனைகளுக்காக தரமான பத்திரிகை கொண்டு வருவதற்கு தனியாக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கலாம் என்ற யோசனையையும் அவர் முன் வைத்தார். மார்ச் 31 ஆம் தேதி பத்திரிகையாளர் கழகம் ஏற்பாடு செய்த அறக்கட்டளை சொற்பொழிவில் அவர் உரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 05042012 இதழ்