திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (4) பகுத்தறிவும் – ஆன்மீகமும் கைகோர்த்தது!

1916 திராவிடர் சங்கத்தின் சாதனைகளில் ஒன்று, டாக்டர் நடேசனார் அவர்களின் பெருமுயற்சியால், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு என அமைக்கப்பட்ட திராவிடர் இல்லம் எனும் விடுதியாகும். வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து பட்டப் படிப்புப் படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்கள் உணவுக்கும் தங்குவதற்கும் விடுதி வசதியின்றி இடையூறுகளுக்கு ஆளாயினர். பார்ப்பன விடுதிகளில் இவர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. எனவே, இவர்களின் நலன் காக்கும் பொருட்டு திராவிடர் இல்லம் எனும் விடுதியானது, ஜூலை மாதத்தில், திருவல்லிக்கேணி அக்பர் சாய்பு தெருவிலுள்ள விசாலமான கட்டடத்தில் நடேசனாரின் திறமையான நிர்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டது. இந்த விடுதியானது வெளியூரிலிருந்து படிக்க வரும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு நல்லதொரு புகலிடமாக அமைந்தது.

பார்ப்பனரல்லாத தலைவர்களான நாயரும், தியாகராயரும் ஒருவருக்கொருவர் மன வேற்றுமைக்கு உட்பட்டிருந்தது வலிமை யுடன் கூடிய பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றுவதற்குத் தடையாக இருந்தது என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் மனக்கசப்புக்கு ஆளானதற்குக் காரணமான, (சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த) பழைய சம்பவம் ஒன்று உண்டு. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் எதிரில் உள்ள தெப்பக்குளம் அசுத்தமாகி, நோய் பரப்பும் இடமாக இருந்து வந்ததால் அதனை மண்கொட்டி மூடி அங்கோர் பூங்காவை நிறுவலாம் என்று நாயர், சென்னை நகராட்சியில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். வைதீக நெறியில் ஆழ்ந்த பற்றுள்ள தியாகராயர் அதிர்ச்சியுடன் வெகுண்டு, நாயரை எதிர்த்துச் சாடியதோடு தீர்மானத்தைத் தோல்வியுறச் செய்தார். பகுத்தறிவுவாதியான நாயரும், தியாகராயரும் அன்று முதல் கீரியும் பாம்புமாக மாறினார்கள்.

பார்ப்பனரல்லாதார்இயக்க நலன் கருதி இவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க நடேசனார் பெரிதும் முயன்று வந்தார். இதற்கிடை யில் பார்ப்பனியத்தின் நயவஞ்சகம், ஆணவம் ஆகியவற்றின் நேரடித் தாக்குதலுக்கு இவ்விரு தலைவர்களும் ஆளாக தேர்ந்த நிகழ்ச்சிகள் அவ்விருவரையும் எதிர்பாரா வகையில் ஒன்று சேர்த்தது! இவ்வாண்டு சென்னை சட்டசபையிலிருந்து ஒருவரை டில்லி சட்டசபைக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் வந்தது. நாயர் வேட்பாளராக நின்றார். பெரும்பான்மையாகவிருந்த பார்ப்பன உறுப்பினர்கள், கடைசி நேரம் வரை நாயரையே ஆதரிப்பதாக நடித்து, தேர்தலின்போது இவரை எதிர்த்து நின்ற வி.எஸ். சீனுவாச சாஸ்திரி என்ற பார்ப்பனரின் பெயரை முன் மொழிந்து தேர்ந்தெடுத்து, நாயரைத் தோற்கடித்தனர். பார்ப்பன சுயசாதிப் பற்றின் ஆழத்தையும் அகலத்தையும் எடைபோட அது ஓர் அரிய வாய்ப்பாக அவருக்கு அமைந்தது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும்விட அதிகத் தொகையாகிய ரூ.10 ஆயிரம் நன்கொடையாக அளித்த தியாகராயரை, கும்பாபிஷேக விழாவுக்குச் சென்றபோது மேடையில் உட்கார வைக்காமல், கீழே உட்கார வைத் தார்கள். இவரின் அலுவலகத்தில் பணி புரியும் சிப்பந்திப் பார்ப்பனர் உட்பட பார்ப்பன ஜட்ஜுகள், அதிகாரிகள் மேடையில் இருக்க, தன்னை அலட்சியப்படுத்திய பார்ப்பன சாதித் திமிரை சகிக்க முடியாத தியாகராயர் அந்த இடத்தை விட்டு அகன்று நேரே நாயரின் பங்களா வுக்குக் காரை விடச் சொன்னார். டிரைவருக்கோ, ஆச்சரியம்! கீரியும் பாம்புமாக இருந்த இருபெரும் மேதைகளும், கட்டித் தழுவினர்! கண்ணீர் வடித்தனர்! பார்ப்பன எத்தர்களின் போக்குக்குச் சாவுமணி அடிப்பதைத் தவிர இனி வேறு பணியில்லை என்று முடிவு செய்தனர். திட்டம் தீட்டினர். நடேசனார் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கலானார்.

(தொடரும்)

கழக வெளியீடான ‘திராவிடர் இயக்க வரலாற்றுச் சுருக்கம்’ நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 29032012 இதழ்

You may also like...