கழகத் தோழர்களை தாக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கிருட்டிணகிரி மாவட்டம் நீலகிரியில் கழகத் தோழர்கள் மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த கழகத் தோழர்கள் ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது மருத்துவமனைக்குள்ளும் நுழைந்து தாக்கினர். இதனால் மருத்துவர்களும் மருத்துவமனை ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

நீலகிரி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ள இராமச்சந்திரா என்பவரின் அண்ணன் வரதராசன் என்பவரே வேன்களில் ஆட்களை அழைத்து வந்து 6 ஆம் தேதி இரவு ஒரு மணிக்கு கழகத்தினர் மீது தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்ட சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் குடும்பத்தினரை எதிர்த்து வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடாத நிலையில் கழகத்தைச் சார்ந்த தோழர் மாருதி, தனது குடும்பத்தவரை வேட்பாளராக நிறுத்தியதால் ஆத்திரமடைந்தனர். ராமச்சந்திரனும் அவரது ஆதரவாளர்களும் பெரியார் திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விடுமாறு கட்டாயப்படுத்தினர்.

தோழர்கள் அதை ஏற்க மறுத்து வருவதால் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. கழகத் தோழர் மாருதி, அவரது தந்தை, தம்பி ஆகியோரை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனின் அண்ணன் வரதராசன் ஒரு கூட்டத்தினருடன் வந்து வீடு புகுந்து தாக்கினார். காப்பாற்ற வந்த கழகத்தினரும் தாக்கப்பட்டார்கள். காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களையும் தாக்கினர். கழகத் தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் தந்தனர். காவல் துறையோ, தாக்கியவர்களை கைது செய்யாமல், கழகத் தோழர்களின் உறவினர்களையே கைது செய்துள்ளது. மாவட்ட காவல் துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...