ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஆதரித்த ம.பொ.சி.!
- காங்கிரசுக்குள்ளேயே இருந்து கொண்டு 1946 ஆம் ஆண்டு ‘தமிழரசுக் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்கிய ம.பொ.சி., முதலில் ‘சுதந்திர தமிழரசு’ அமைப்பதே இதன் லட்சியம் என்று அறிவித்தார். பிறகு 1953 இல் வெளியார் சுரண்டல் இல்லாத தமிழகம் அமைந்தாலே போதும் என்று தனது கொள்கையை சுருக்கிக் கொண்டார்.
- மாநிலங்களை சுதந்திரமான உறுப்பு நாடுகளாக பிரிட்டிஷ் அரசே அங்கீகரித்ததால் தான், ‘சுதந்திரத் தமிழகம்’ என்ற கோரிக்கையை தாம் முன் வைத்ததாகவும், இந்தியாவிலிருந்து, தமிழகம் தனியே பிரிந்து நிற்கிறது என்று பொருளில் கூறவில்லை என்றும் பிறகு சுய விளக்கம் அளித்தார்.
- ‘இந்து’ பார்ப்பன நாளேட்டுக்கு ம.பொ.சி. எழுதிய ஒரு கடிதத்தில் , “என் ஆயுளில், இது வரை சுதந்திர தமிழ்க் குடியரசு தேவை என்று பேசியதே இல்லை; (தனிநாடு கேட்கும்) இந்த மாதிரியான பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற் காகவே தமிழரசு கழகம் தொடங்கப்பட்டது” என்று, தான் தனிநாடு கேட்பதாக ‘இந்து’ வெளியிட்ட செய்தியை மறுத்தார். இதை குத்தூசி குருசாமி கிண்டலடித்து ‘விடுதலை’யில் எழுதினார்.
- ம.பொ.சி. – ராஜகோபாலாச்சாரி பார்ப்பனரின் ‘கைத்தடி’யாக செயல்பட்டு காமராசரை கடுமையாக எதிர்த்தவர். காமராசர் எதிர்ப்புக்கு ராஜகோபாலாச்சாரி – ம.பொ.சி.யை பயன் படுத்திக் கொண்டார். இதை ராஜகோபாலாச் சாரியாரே மதுரை கூட்டம் ஒன்றில் பேசும்போது கூறினார்:
“என் தலைமையை எதிர்ப்பவர்கள் என்னைவிட அதிகமாக (ம.பொ.சிவஞானம்) கிராமணி யாரையே தாக்குகிறார்கள். அதற்குக் காரணம் உண்டு. கிராமணியார் ‘வீர அபிமன்யு’ போன்றவர். என்னால் உடைக்க முடியாத எதிரிகளின் வியூ கத்தை உடைத்து அவர் என்னை உள்ளே அழைத் துச் செல்கிறார்” – என்று பேசினார். (ஆதாரம்: ம.பொ.சி. எழுதிய ‘எனது போராட்டம்’ நூல்)
- பார்ப்பனியத்தையும் இந்திய தேசியத்தையும் தமிழினத்தின் முதன்மையான பகைவர்களாக முன் வைத்துப் பெரியார் போராடினார். ஆனால், ம.பொ.சி. முதலில் ‘தனியரசு’ பேசி, பிறகு இந்திய தேசியத்துக்கு உள்ளிட்ட தமிழ்த் தேசியம் என்ற நிலைக்கு வந்து, அதன் பிறகு இந்திய ஒற்றுமைக்கு பங்கம் வராத மாகாண சுயாட்சி’ என்று கூறி, பிறகு மொழி வழி தேசியத்தையும் கைவிட்டு பெரியார் கொள்கைக்கு நேர் எதிரான மதவழி தேசியத்தை தூக்கிப் பிடித்தார்.
- “தேசிய ஒருமைப்பாட்டைக் கருதியேனும் ‘இந்து’க்கள், குறிப்பாகத் தமிழகத்தார் இந்து மதத்தை உறுதியாகக் கடைப்பிடித்து வர வேண்டியிருக்கிறது” என்று பேசினார். (26.8.1984 – ‘சமஸ்கிருத தின’ப் பேச்சு) “இந்தியாவின் ஆதி மதமான இந்து மதம் தான் இந்திய ஒருமைப் பாட்டின் ஆணி வேராக இருந்து வருகிறது”. ‘தமிழ் மொழி எனது தாய்மொழி; ஆனால் இந்தியன் என்ற முறையிலே, இந்து என்ற வகையிலே சமஸ்கிருதம் எனது கலாச்சார மொழி’ என்கிறார். (ஆதாரம்: ம.பொ.சி. எழுதிய ‘தமிழும் சமஸ்கிருதமும்’ நூல்)
- திருமணங்களில் இனமானத்தோடு புரோகித மறுப்பு சுயமரியாதை திருமணங்களை பெரியார் அறிமுகப்படுத்தினார். ம.பொ.சி.யோ “சமஸ்கிருத மொழியைப் பிழையறப் பயின்று வைத்துப் புரோகித தொழில் புரிவோர் இருப்பார்களாயின், அந்தப் புரோகிதர்களைக் கொண்டு, தமிழர் தங்கள் வீட்டுத் திருமணங்களைச் செய்வதை ஏற்கலாம்” என்றார். (ஆதாரம்: மேற்குறிப்பிட்ட அதே நூல்)
- தனது மணி விழா உட்பட தமது இல்ல நிகழ்ச் சிகள் அனைத்தும் ‘வைதிகச் சடங்கு களுடனேயே’ நிகழ்ந்தது என்று கூறும் ம.பொ.சி., சுயமரியாதை திருமணங்களை வெறுத்தார். திருமண வீடுகளில் சொற்பொழிவு நிகழ்த்துவது தேவையற்றது என்றார்.
- அப்பன் குலத் தொழிலை – பிள்ளை செய்ய வேண்டும் என்று தொடக்கப் பள்ளிகளில், ஆச்சாரியார் அறிமுகப்படுத்திய குலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து பெரியார், போர்க்கொடி உயர்த்தியபோது, அத் திட்டத்தை ஆதரித்து தமிழரசு கழக செயற்குழுவில் தீர்மானம் நிறை வேற்றினார், ம.பொ.சி. ராஜகோபாலாச்சாரியின் குலக் கல்வித் திட்டத்தை ஆதரித்து, நாடெங்கும், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் நடத்த முன் வந்தார். 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி மாயவரத்தில் (மயிலாடுதுறை) குலக் கல்வி திட்டத்தை ஆதரித்துப் பேசியதற்காக ம.பொ.சி. தாக்கப்பட்டார்.
- நாடு முழுதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியவர் ம.பொ.சி. அதில் பேசிய விபூதி வீரமுத்து, அணுகுண்டு அய்யாவு போன்ற பேச்சாளர்கள் மிகவும் தரம் தாழ்ந்து பெரியாரையும், அவரது கொள்கைகளையும் ‘சாக்கடை’ மொழியில் – ம.பொ.சி. முன்பாகவே பேசி வந்தனர்.
- இரயில் நிலையங்களில் பெயர்ப் பலகையிலுள்ள இந்தி எழுத்துகளை தார்பூசி அழிக்கும் போராட்டத்தை பெரியார் நடத்தியபோது, பெரியார் இயக்கத்தினர் அடித்த தார் மீது, மண்ணெண்ணெய் பூசி, தாரை அழித்து, ‘இந்தி’ ஆதரவை வெளிப்படுத்தியவர் ம.பொ.சி.
ம.பொ.சி. – பெரியாரின் பார்ப்பனிய – இந்திய தேசிய எதிர்ப்பை மடை மாற்றிட வந்த பார்ப்பன ஆச்சரியாரின் கைத்தடி; ராஜகோபாலாச் சாரிக்காகவே தட்சிண பிரதேச எதிர்ப்பைக் கைவிட்டவர்; ‘திராவிட’ இயக்கங்களை எதிர்க்கக் கிளம்பிய இவர், பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சிகளிலேயே பதவிச் கங்களை அனுபவித்தவர்; தி.மு.க. ஆட்சியில் மேலவை துணைத் தலைவராகவும், அ.தி.மு.க. ஆட்சியில் மேலவைத் தலைவராகவும் பதவி பெற்றவர்.
(ஆதாரங்கள்: கவிஞர் கருணானந்தம் எழுதிய ‘தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு’; சுப. வீர பாண்டியன் எழுதிய ‘இடதுசாரி தமிழ் தேசியம்’)
பெரியார் முழக்கம் 05012012 இதழ்