எல்லை மீட்பு: ராஜகோபாலாச்சாரிக்காக பல்டி அடித்த ம.பொ.சி.!

தேவி குளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டம் தொடர்பாக தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவ ஞானத்துக்கும் பெரியாருக்குமிடையே நடந்த கடிதத் தொடர்புகள் குறித்து பெரியார் நிகழ்த்திய உரை, 5.1.2012 மற்றும் 12.1.2012 இதழ்களில் வெளியிட்டிருந் தோம். தேவிகுளம், பீர்மேடு என்ற பகுதிகளை தமிழகத்தோடு இணைத்துக் கொள்வதையும் தாண்டி, தமிழ் நாட்டின் முழுமையான தன்னாட்சிக் கோரிக்கைகளாக, ராணுவம், வெளி நாடு உறவு நீங்கலாக, ஏனைய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும். இந்தியை தேசிய மொழியாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்; தமிழ்நாட்டின் எல்லைகளை நிர்ணயிப்பதில் எல்லை ஆணையம் செய்துள்ள ஓர வஞ்சனைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். இதை பெரியாரிடம் ஒப்புக் கொண்ட ம.பொ.சி., பிறகு, தனது போக்கை மாற்றிக் கொண்டதை பெரியார், அதில் விரிவாக விளக்கி இருந்தார். தொடர்ந்து பெரியார் உரையின் நிறைவு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்.

“இதையெல்லாம் நான் குறிப்பிடுவது இதற்குப் பின்னால் இனிமேல் ம.பொ.சி.யார் அடிக்கப் போகிற கரணத்தை (பல்டியை) விளக்குவதற்கே

ஆகும்.

இப்படி எல்லாம் முதலில் கடிதம் மூலமாக நேரிலும் பேசி வந்தவர் சட்டென்று மாற்றமடைந்து விட்டார். பிறகு நான் சென்னைக்குச் சென்றவுடன் 26 ஆம் தேதி அன்றைய தினம் எனக்கு ஒரு அச்சடித்த “சர்வ கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம்” என்ற தலைப்பில் அழைப்பிதழ் வந்தது. அதில் தமிழக எல்லைப் பகுதியை மட்டும் குறிப்பிட்டு அதற்கென்று ஆலோசனைக் குழு நடத்தப் போவதாகவும் அக்குழு ஜனவரி 27 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ‘உமா’ பத்திரிகை அலுவலகத்தில் சககட்சித் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் கூடுகிறதென்றும் அதற்கு வர வேண்டும் என்பதாகவும் எழுதி அதில் நண்பர் ம.பொ.சி.யின் கையெழுத்து மட்டும் இருந்தது. முதலில் என்னென்னமோ எழுதினார். முதலில் எழுதிய கடிதம் ஒன்றுடன் இணைத்திருந்த சர்வகட்சி தலைவர்களுக்கு அழைப்பு தகவலில் 5 பேர்களுக்குக் கையெழுத்திட இடம் ஒதுக்கி இருந்தார். அதில் அவர் இரண்டாவதாக கையெழுத்திட்டிருந்தார். அப்படியிருந்தும் இன்றைக்கு திடீர் மாற்றமடைந்துவிட்டாரோ என்று யோசித்தேன். மேலும் முதலில் பேசியபடி எந்தெந்த விஷயங்கள் சம்பந்தமாக கிளர்ச்சி என்பதையும் விட்டு இப்போது ஒன்றுக்கு மட்டும் கிளர்ச்சி என்பதாகவும் மேலும் தனக்கு சவுகரியப்பட்ட ‘உமா’ பத்திரிகை அலுவலகத்தில் கூடுவது என்பதும் அவருடைய முழு மாற்றத்தையும் தெரிவித்தது.

இதற்கிடையில் அப்போது எங்கிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அங்கங்கே தந்திக் கம்பிகளை அறுப்பதும் தண்டவாளங்களை பெயர்ப்பதும் ரயிலை நிறுத்துவதும் சட்டசபை மறியலும் நடந்து கொண்டிருக்கின்றன. இத்தனையும் நடந்து கொண்டிருக்கையில் அரசினரிடம் நடவடிக்கை எடுக்க திட்டம் வகுக்கப்படுகிறதாம்.

இப்படி மக்களை திடீரென்று ஒருவித முன் யோசனையும் இன்றி தூண்டிவிட்டு இத்தனை அக்ரமங்களையும் செய்யச் சொல்லி அதனால் ஒருவித பயனும் இல்லாமல் உள்ளே தள்ளப்பட்டது தான் கண்ட பலனாக இருக்க திடீரென்று அன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானப்படி இப்போது நடத்தப்படும் கிளர்ச்சியை வாபஸ் வாங்கிக் கொண்டு இதன் சம்பந்தமாக கவனிக்க ஒரு கமிஷனை ஏற்படுத்தி அதற்கு தலைவராக சர் பி.டி. ராஜனைத் தேர்ந்தெடுத்து இனி அந்தக் கமிட்டியின்படி ஆலோசிக்கப்படும் என்று கூறி விட்டார்கள்.

நான் எனக்கு வந்த அழைப்பைக் கண்டவுடன் அழைப்பைக் கொண்டுவந்து கொடுத்த தோழர் உமாபதியிடம், “நண்பர் ம.பொ.சி. சொல்லுகிற வார்த்தைக்கு மாறாகத்தான் நடந்து கொள்ளுதல் வழக்கம்போல் இருக்கிறது” என்று கேட்டேன். அதற்கு அவர், “எனக்கு ஒன்றும் தெரியாதே என்னைக் கேட்கிறீர்களே அவரையே கேளுங்கள்” என்று தொலைபேசியில் ம.பொ.சி.யைக் கூப்பிட்டார். நான் அவரிடம், “நீங்கள் என்ன என்னிடம் சொன்னீர்கள் இப்போது என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர் ஒரு காரணம் கூறினார். எனக்கு அவர் எழுதிய 20 ஆம் தேதி கடிதம் 22 ஆம் தேதி கிடைத்ததால் உடனடியாக ஒன்றும் பதில் தெரிவிக்க முடியாமற் போனதால் அதை ஒரு குறையாகக் குறித்து நீங்கள் தான் நான் எழுதுகிற கடிதம் வந்து சேரவில்லையென்று கூறுகிறீர்கள்! நான் என்ன செய்வேன். மேலும் மற்றவர்கள் எல்லாம் நீங்கள் கூறுகிறவைகளின்படி ஏனையவைகளுக்கு சம்மதிக்க மறுக்கிறார்கள். எனவே நீங்கள் இக்குழுவில் கலந்துகொண்டு உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்” என்றார். நான் அங்கு வருவதாகவும் இல்லை உங்கள் தேவையும் அவசியமில்லை என்று கூறி முடித்தேன்.

இப்படி நண்பர் ம.பொ.சி. மாறுவதற்குக் காரணம் இருக்கிறது. ஆச்சாரியார் தட்சிணப் பிரதேசத்தை ஆதரித்துப் பேசி, தட்சிணப் பிதேசம் அமைக்கப்பட வேண்டியது அவசியம்தான் என்று கூறி இருக்கிறார். அன்றைய மறு தினமே  நண்பர் ம.பொ.சி. மாறிவிட்டார். நம்முடன் கலந்தால் அதையெல்லாம் எதிர்க்க வேண்டுமே என்பதற்காக மிகத் தந்திரமாக இப்படி மாறிவிட்டார்.

ஆனால் தட்சிணப்பிரதேசம் அமைக்கப்பட்டால் இவர்கள் அத்தனை பேரும் ஆதரித்தாலும் சரியே. நான் மட்டும் விடப் போவதில்லை. அதை அறிவிக்கும் முயற்சியில் கடுமையாக திட்டமிட்டிருக்கிறேன்.

(29.1.1956 வேலூரில் பெரியார் பேசியது – ‘விடுதலை’ ஏட்டிலிருந்து)

பெரியார் முழக்கம் 09022012 இதழ்

You may also like...