30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படாத அரசு தொடக்கப் பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு என்ற ஊரில் உள்ளாட்சித் துறை நடத்தும் தொடக்கப் பள்ளியில் ஒரு தலித் மாணவர்கூட இல்லை என்ற அதிர்ச்சியான செய்தி வெளி வந்துள்ளது. இது குறித்து ‘இந்து’ நாளேடு (ஏப், 2012) முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பச்சயன்காடு கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டிலிருந்தே தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு குழந்தைகூட படிக்க முன் வரவில்லை. இந்தப் பள்ளி இயங்கும் பகுதியில், பச்சயன்காடு, தெருக்காடு கிராமங்களில் தலித் குடியிருப்புகள் இருக்கின்றன. 1980 ஆம் ஆண்டுக்கு முன் இப்பகுதி  தலித் மக்கள் தங்கள் குழந்தை களை இப்பள்ளியில் சேர்த்து வந்தனர். அதே ஆண்டின் இடைக்காலத்தில் தலித் குழந்தைகள் மீது அவமதிப்பும், பாகுபாடும் திணிக்கப்பட்டதால், தங்கள் குழந்தைகளை அப்பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திக் கொண்டனர்.

இந்த அவமதிப்பை எதிர்த்து இப்படி ஒரு முடிவை எடுத்தவரின் பேரன் பிர்லா தங்கதுரை இந்தத் தகவலைத் தெரிவித்தார். இப்போது அந்தப் பள்ளிக்குள் தேர்தலின்போது வாக்களிப்பதற்கு மட்டுமே காலடியை எடுத்து வைக்கிறோம் என்றார், தங்கதுரை. கொத்தடிமை ஒழிப்புக் குழுவின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் அவர் உள்ளார். இந்தப் பள்ளி உள்ள பகுதியில் 100 தலித் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்களில் தொடக்கப் பள்ளியில் சேரும் நிலையில் 54 குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனாலும், இந்த குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்காமல், பக்கத்து கிராமங்களிலுள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துள்ளனர்.

தலித் குழந்தைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக இப்பள்ளியில் சேர்க்கப்பட வில்லை என்பது உண்மைதான் என்ற ஒப்புக் கொண்ட தலைமை ஆசிரியர் அன்பழகன், வரும் ஆண்டில் குறைந்தது 10 குழந்தைகளையாவது சேர்க்க முயற்சிக்கப் போவதாகக் கூறியுள்ளார். அரசுப் பள்ளி ஒன்றில் 30 ஆண்டு களுக்கு மேலாக ஒரு தலித் குழந்தைகூட சேர்க்கப்படவில்லை என்பது குறித்து எந்த கவலையோ முயற்சியோ எடுக்காத நிர்வாக அமைப்பு நடந்திருக்கிறது.

பெரியார் முழக்கம் 19042012 இதழ்

You may also like...