இராயப்பேட்டையில் எழுச்சியுடன் நடந்த தமிழ்ப் புத்தாண்டு-தமிழர் திருநாள்

சென்னையில் கழகக் கோட்டையான இராயப்பேட்டையில் வழக்கம்போல் தமிழர் திருநாள் பொங்கல் விழா பெரும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. 13.1.2012 அன்று வி.எம். தெரு பெரியார் சிலை அருகில் எழில் குலுங்க அமைக்கப் பெற்ற மிகப் பெரும் மேடையில் வீரமங்கை செங்கொடி பறையுடன் நிற்கும் படம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இதே பொங்கல் விழா மேடையில் தனது பறை முழக்கத்தை நடத்தியவர் தோழர் செங்கொடி. பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளோடு உற்சாகமாக விழா தொடங்கிற்று. தொடர்ந்து ஆதித் தமிழர் கலைக் குழுவினர் பறை இசை மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். பெரியார் அம்பேத்கர், பிரபாகரன் கொள்கை போற்றும் எழுச்சிப் பாடல்களைப் பாடினர்.

கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடந்த வாழ்த்துரையில் கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன், இயக்குனர் கவுதமன், அற்புதம்மாள், கழகத் துணைத் தலைவர் ஆனூர் ஜெகதீசன, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். அன்பு. தனசேகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். டிங்கர் க. குமரன் தலைமையேற்க சித்தார்த்தன், கோ. சீனு முன்னிலை வகிக்க, மு. இராசா நன்றி கூறினார்.

தொடர்ந்து ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் தலைமையில் திரையிசைப் பாடல்கள் ‘சமுதாயத்தை சீர்திருத்துகிறதா? சீரழிக்கிறதா’ என்ற தலைப்பில் நகைச்சுவை இன்னிசைப் பேருரை, 3 மணி  நேரம் நடந்தது. நள்ளிரவு 12.30 மணி வரை நடந்த இந்த சுவையான கருத்துச் செறிவு மிக்க நிகழ்வை நடுங்கும் குளிரிலும் பொது மக்கள் பெருமளவில் திரண்டு கேட்டனர்.

தென்சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழக செயல்வீரர்கள் இரா. உமாபதி, ஆ. தமிழ்ச் செல்வம், டிங்கர் குமரன், சு. ஆனந்தன், பா. செல்வக்குமார், சுகுமார், சரவணன், தம்பிதுரை உள்ளிட்ட தோழர்கள் கடும் உழைப்பை நல்கி விழா வெற்றிக்கு உழைத்தனர்.

 

பெரியார் முழக்கம் 23022012 இதழ்

You may also like...