2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொள்ளாச்சியில் கழகம் முன்னெடுத்த தொடர் களப்பணிகள்
செப்.17 – பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் பெரியார் படத் திறப்பு, கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அன்று மதியம் காகபுதூர் கிராமத்தில் சாதிமத வெறியர்களுக்கு சாவல் விடும் மாட்டுக்கறி விருந்து சிறப்பாக நடத்தப்பட்டது.
அக்டோபர் – உள்ளாட்சித் தேர்தலின்போது, கழகத்தின் செயல்பாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த ம.தி.மு.க., அ.தி.மு.க. தோழர்கள் போட்டியிட்ட நகரமன்ற பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கழகத்தின் ஆதரவை அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து வேண்டிக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தோழர்கள் வெள்ளிங்கிரி, காசு. நாகராசன் ஆகியோர் பரப்புரை நடத்தினர். தமிழீழ விடுதலைப் போராட்டம், மூன்று தமிழர் உயிர்காப்பு, தமிழக மீனவர் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, சாதிமத எதிர்ப்புக் கருத்துகளை முன் வைத்து தோழர்கள் நிகழ்த்திய பரப்புரை மக்களிடையே பெரும் வரவேற்பை கொடுத்தது.
அக்டோபர் 22 – கிணத்து:க கடவு ஒன்றிய செயலாளர் நிர்மல் குமார் மீது சாதி வெறியர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கழகப் பொதுச் செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்ம் நடத்தப்பட்டது. ஒரே நாள் இடைவெளியில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை-திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண் டனர். கழகத்தின் எதிர் நடவடிக்கையைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய சாதி வெறி யர்கள் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டத் தொகை செலுத்தினார்கள்.
நவம்பர் 22 – ஆனைமலை ஒன்யிம் காகபுதூh கிராம சுகாதார செவிலியர் வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம் சாதித் தீண்டாமை கடைப்பிடிக்கிறார் என பொது மக்கள் எழுப்பிய குற்றச்சாட்டினையொட்டி கழக ஒன்றிய செயலாளர் மு.சம்பத் தலைமையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகையிடப்பட்டது. கழகத்தின் போராட்டத்தைத் தொடர்ந்து மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் அடங்கிய குழு விசாரணையை மேற்கொண்டது. பிறகு சம்பந்தப்பட்ட செவிலியர் இட மாற்றம் செய்யப்பட்டதோடு அரசின் உதவித் தொகை கிடைக்கப் பெறாத தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உடனடியாக உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.
நவம்பர் 26 – சாதி ஒழிப்பிற்கான சட்ட எரிப்புப் போராளிகள் மாவீரர் நாளும், நவம்பர் 27 தமிழீழ மாவீரர் நாளும் ஆனைமலை ஒன்றியக் கழகம் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. காகபுதூரில் உளள சாதி ஒழிப்பு மாவீரர் நாள் 50 ஆவது ஆண்டு நினைவுத் தூண் முன்பு நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் கழகத் தோழர்களும் பங்கேற்றனர்.
டிசம்பர் 8 – “முல்லைப் பெரியாறு அணை நீரை 152 அடியாக உயர்த்து! கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” என்கிற முழக்கங்களோடு பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு நகர கழக செயலாளர் வே. வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். கழகத் தோழர்களும் தோழமை இயக்கத்தவர்களுமாக 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். கோவை மலையாள நிறுவனர் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி பாஸ்டல் சிறையில் வைக்கப்பட்டிருந்த 14 கல்லூரி மாணவர்களின் விடுதலை கோரி டிசம்பர் 12, 13, 14 மூன்று நாட்களும் துண்டறிக்கைப் பிரச்சாரம் நடத்தப்பட்டன.
டிசம்பர் 14 – கழக மாவட்ட செயலாளர் காசு. நாகராசன் தலைமையில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கான கலந்துரையாடல் கூட்டம் ம.தி.மு.க. அலுவலகத்தில் நடத்தப்பட்டது. கூட்டத்தில் தொடர் போராட்டங்கள் திட்டமிடப்பட்டன.
டிசம்பர் 16 – முல்லைப் பெரியாறு அணைப் போராட்டத்தில் சிறைப்படுத்தப் பட்டுள்ள தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் மற்றும் பிற இயக்கத் தோழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழர் உரிமைப் போராட்டங்களை தமிழர் அல்லாத பிற மாநில அதிகாரிகள் குறிப்பாக மலையாளிகள் கையாளக் கூடாது. தமிழக காவல்துறை, ஆட்சித்துறைகளிலுள்ள மலையாளிகளை உடனே மாற்ற வேண்டும் என்கிற முழக்கங்களை முன் வைத்து பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கழகத் தோழர்கள் தோழமை இயக்கத்தின் முந்நூறு பேர் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 17, 18 – முல்லைப் பெரியாறு அணை நீரை 152 அடியாக உயர்த்து! கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு! என்கிற முழக்கங்களோடு இரண்டு நாள் பரப்புரைப் பயணம், கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. கிணத்துக்கடவு ஒன்றியம், முத்துக்கவுண்டன்புதூர், கேரளா எல்லையில் தொடங்கி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், வளந்தாயபுரம் என 15 எல்லையோர கிராமங்களிலும் பொள்ளாச்சி நகரிலும் நடைபெற்ற பரப்புரைப் பயணம் ஆனைமலையில் பொதுக் கூட்டத்துடன் நிறைவடைந்தது. இப்பயணத்திலும், பொதுக் கூட்டத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினார்கள். தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அரசியல் இயக்கத்தினர் பங்கேற்றுப் பேசினர். டிசம்பர் 21-ல் நடைபெறும் கேரள சாலைகள் முற்றுகைப் போராட்டத்திற்கு பொது மக்கள் வர வேண்டும் என்றும், அன்று முழு அடைப்பு நடத்த வேண்டும் என்றும் கழகப் பொதுச் செயலாளர் அழைப்பு விடுத்தார்.
டிசம்பர் 21 – கேரள சாலைகள் முற்றுகைப் போராட்டம் பொள்ளாச்சிப் பகுதியில் இரண்டு எல்லைகளில் நடைபெற்றது. கோபாலபுரம் சோதனைச் சாவடிக்கு பொள்ளாச்சி நகர செயலாளர் வெள்ளிங்கிரி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர். வளந்தாயமரம் சோதனைச் சாவடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கழகத்தின் பரப்புரைப் பயணத்தின் விளைவாக பொது மக்கள், தொழிலாளர் என சுமார் 500 பேர் 9 கிலோ மீட்டர் தூரம் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கழகப் பொறுப்பாளர்கள் காசு. நாகராசன், மு.சம்பத், வே.அரிதாசு, கோ. மணிமொழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் பேரணியை வழிநடத்திச் சென்றனர். வளந்தாய மரம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டோரிடம் மாணவர்கள் வழக்கு நிதியாக வசூலிக்கப்பட்ட தொகை ரூ.20 ஆயிரத்தை ம.தி.மு.க. தோழர் தம்பு, கா.சு.நாகராசனிடம் வழங்கினார்.
டிசம்பர் 22 – சிறைப்பட்டிருந்த தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்களுக்கான பிணைத் தொகை ரூ.2 இலட்சத்தை மாவட்ட கழகத் தோழர்களின் உதவியோடு கழகப் பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் நீதிமன்றத்தில் செலுத்தினார். மாணவர் கழக அமைப்பாளர் ந. பன்னீர்செல்வம், மாணவர்கள் விடுதலைக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தார்.
டிசம்பர் 23 – தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் 20 பேருக்கும் பொள்ளாச்சி சிறை வாயிலில் மாணவர் கழக அமைப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், தோழமை இயக்கத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறையிலிருந்து ம.தி.மு.க. அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். ம.தி.மு.க அலுவலகத்தில் பாராட்டு விழா நடத்தி, மதிய விருந்துக்குப் பின் மாணவர்கள் தனி வாகனத்தில் கோவை அனுப்பி வைக்கப்பட்டனர். பொள்ளாச்சியை அடுத்து கிணத்துக்கடவிலும் மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பும் தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது. மாணவர்கள் சிறைப்படுத்தப்பட்டதில் மன வருத்தம் அடைந்திருந்த பெற்றோர்கள் சிலர், வரவேற்பு மரியாதையையும் பிணைத் தொகை முழுவதையும் கழகமே பொறுப்பெடுத்துக் கட்டியதையும் அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
டிசம்பர் மாதம் முழுவதும் பொள்ளாச்சிப் பகுதியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்த கழகத் தோழர்கள் அனைத்திலும் பங்கேற்று உரையாற்றினர். கழகத்தின் பணிகளை பல்வேறு இயக்கத்தவர்களும், பொது மக்களும் வெளிப்படையாகவே பாராட்டினர்.
செய்தி: கா.சு. நாகராசன்
பெரியார் முழக்கம் 09022012 இதழ்