அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் தனியார் மின் உற்பத்தியை அரசுடைமையாக்குக!
அணுஉலை எதிர்ப்பு இயக்க மாநாட்டில் மக்கள் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- மனித குலத்திற்கு எதிரான அணுசக்தி எனும் பேராபத்திற்கு எதிராக கூடங்குளம் திட்டம் அறிவிக்கப்பட்ட 1988 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை இம்மாநாடு உயர்த்திப் பிடிக்கிறது. கூடங்குளம் அணுஉலையைத் திறக்க விடாமல் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைத்து இயக்கங்களும் உறுதியாகத் துணை நிற்கும். இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, பொய்ப் பிரச்சாரத்திற்கு பலியாகாமல் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்து அணி திரள வேண்டும் என தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
- நிலவி வரும் கடும் மின்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு பொது மக்களின் அளவற்ற சுமையைக் குறைக்கத்தக்க வகையில் மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரத்தை தமிழக அரசு கோரிப் பெற வேண்டும் எனவும், நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்கி கூடுதல் மின்சாரத்தைப் பெறவும் தமிழக அரசை இம்மாநாடு வேண்டுகிறது.
- அதிகரித்து வரும் மின் தேவையை நீக்க சூரிய ஒளி, காற்றாலை, சிறிய மின்னுற்பத்தித் திட்டங்கள் மற்றும் இயற்கை வளம் சார்ந்து ஆபத்தில்லா மின்சாரம் தயாரிக்கும் வழிமுறைகள் இருந்தும் அணு வல்லரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து தமிழக மக்களை பலிகொடுக்க துணிந்த மத்திய காங்கிரஸ் அரசை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- சமரசமற்ற கூடங்குளம் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து தொய்வின்றி ஆதரித்துவரும் அரசியல் கட்சிகளுக்கும் பல்வேறு அமைப்பு களுக்கும் இம்மாநாடு உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பிற கட்சி களும் அணுஉலையை எதிர்த்து நிற்கும் கொள்கையைத் தங்களது செயல் திட்டத்தில் இணைத்து மக்களை ஒருங்கிணைக்குமாறு இம்மாநாடு கோருகிறது.
- தமிழகத்தில் மின்உற்பத்தி போதுமான அளவு இருந்தும், தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை உருவாக்கி கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மக்களின் மனப்போக்கை தந்திரமாக திசை திருப்பும் காங்கிரசு மற்றும் இந்துத்துவ சக்திகளை வன்மையாகக் கண்டிப்ப தோடு உண்மைகளையும் ஆதாரங்களையும் மக்கள் மன்றத்தில் முன் வைத்து இச்சதியினை முறியடிக்கவும் இம்மாநாடு சபதமேற்கிறது.
- தற்பொழுது தனியாரிடம் விடப்பட்டுள்ள மின் உற்பத்தி, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கி வருவதால், மக்களின் அடிப்படை சேவை எனும் கோட்பாட்டிற்கேற்ப மின் உற்பத்தியை முழுமையாக அரசுடைமை ஆக்க வேண்டும். அதன் மூலம் மக்களுக்கு மிகுந்த பலன் ஏற்படும். எடுத்துக்காட்டாக காற்றாலை மின் உற்பத்தியை தனியாரிடமிருந்து அரசுடைமை ஆக்கினால் கூடங்குளம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தைவிட பனிரெண்டு மடங்கிற்கும் அதிகமான மின்சாரத்தைப் பெற முடியும். எனவே மின் உற்பத்தியாளர் தனியார் ஆதிக்கத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தமிழக அரசு, தமிழக மக்களின் வாழ்வுக்கும் வளாச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் மின் உற்பத்தி மற்றும் வினியோக உரிமையை மாநில உரிமையாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசை வேண்டுகிறது. மேலும தமிழகத்திலிருந்து மத்திய மின் தொகுப்பிற்கு அளிக்கப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் குறைவான மின்சாரமே மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படு வதால் தமிழகத்திலுள்ள மத்திய மின்உற்பத்தி நிலையங்கள் தமிழகத்தின் உடைமை ஆக்கப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- தனியார் பெரு நிறுவனங்களுக்கு அளித்துவரும் தடையற்ற மின்சாரத்தை தடுத்து, பொது மக்கள், சிறு/குறு தொழிற்கூடங்கள், விவசாயம், பள்ளி, மருத்துவமனை போன்ற மக்கள் தேவை களுக்காக மின்சாரத்தை அதிக அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் சிறு, குறு உற்பத்தி யாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஜெனரேட் டருக்கான டீசலையும், சூரிய ஒளி மின் உற்பத்தி சாதனங்களையும் குறைவான மானிய விலையில் தமிழக அரசு வழங்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- 1994 திருத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூடங்குளத்தின் முதல் மற்றும் இரண்டாம் அணுஉலை அமைப்பது குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மத்திய, மாநில அரசுகளின் குழுக்கள், கூடங்குளம் மக்களையும் போராட்ட குழுவினரின வல்லுநர் குழுவையும் சந்தித்து அவர்களின் கருத்தைக் கேட்காமல், தன்னிச்சை யாக அறிக்கை சமர்ப்பிப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- கூடங்குளம் அணுஉலை குறித்து தற்பொழுது ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக் குழு, மக்கள் விரோதப் போக்கோடு செயல்படுவதோடு, மக்களின் கேள் விகளை எதிர்கொண்டு அவர்களது அச்சத்தைப் போக்காமல், அரசுக்குத் தவறான வழிகாட்டுதல் கொடுப்பதால் இக்குழுவை உடனடியாக கலைத்திட ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என இம்மாநாடு வேண்டு கிறது.
- கூடங்குளம் அணுஉலை குறித்த 3, 4, 5, 6 ஆகிய ஆலோசனைக் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் அணுஉலை கூடவே கூடாது என வலியுறுத்திய பிறகும், அங்குள்ள கிராம சபைகள் அணு உலைக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக கூடங்குளத்தை இயக்க மத்திய அரசு தீர்மானித் திருப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- போராட்டக் குழுக்களின் மீது உண்மைக்குப் புறம்பாக போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும் போராடும் மக்களுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரம், ஆதாரமற்ற குற்றச்சாட்டு மற்றும் உண்மைக்குப் புறம்பான அரசு விளம் பரங்கள் ஆகியவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- மத்திய அரசின் பாதுகாப்புப் படைகள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கான பாதுகாப்புப் படை ஆகியவற்றைப் பயன்படுத்தி போராடும் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தக் கூடாது என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
- கல்பாக்கம் அணுஉலைப் பகுதியில் அம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நேர்மையான, வெளிப்படையான மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது
பெரியார் முழக்கம் 01032012 இதழ்