எங்கெங்கும் பார்ப்பன ‘மனுதர்மம்’
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு:
மனுதர்மக் காவலருக்கு புகழாரம்!
காஞ்சிபுரம் மடத்தின் சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி, மனுதர்மத்தையும் வர்ணபேதத்தையும் வெளிப்படையாக ஆதரித்தவர். அதை தெய்வத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாக அச்சிட்டு வெளியிட்டு இன்று வரை பரப்பி வருகிறார்கள். அவரது ஜெயந்தியை (அதாவது பிறந்த நாள்) முன்னிட்டு ‘இந்து’ நாளேட் டில் பார்ப்பனர் ஒருவர் ‘மகா சுவாமி’ புகழ் பாடும் கட்டுரை ஒன்றை (ஜூன் 1, 2012) எழுதியிருக்கிறார். அக் கட்டுரையில் சீனியர் சங்கராச்சாரியின் கருத்து ஒன்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. நாடு ‘சுதந்திரம்’ பெற்ற காலத்தில் இவ்வாறு கூறினாராம்.
ஆட்சியாளர்களுக்கு அரசியல் சட்டமே உயர்வான தர்ம நூல். ஆனால், ஆட்சியாளர், உழைக்கும் மக்கள், வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியது தர்ம சாஸ்திரங்களே என்று ‘மகா பெரியவர்’ கூறியதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். “மகா பெரியவர்” கூறும் தர்ம சாஸ்திரம் எது? சங்கராச்சாரியே கூறுகிறார்:
“நம் மதத்தில் பிராமணர் க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக் கின்றன. வாஸ்தவத்தில் ஜாதி வேறு; வர்ணங்கள் வேறு. நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ணங் களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும், ஆச்சாரங்களையும் விதித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரு மதத் தாரிடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. ஒருவர் சமைத்ததை இன்னொருத்தர் சாப்பிடக் கூடாது; ஒருத்தரோடு ஒருத்தர் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது; ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக் கூடாது என்று இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன”. (ஆதாரம்: “தெய்வத்தின் குரல்” நூல்)
– இப்படிப் பச்சையாக வர்ணாஸ்ரமத்தை ஆதரிப்பதுதான் – சங்கராச்சாரி கூறும் தர்மம்! கட்டுரை எழுதும் பார்ப்பனர்கள் இந்த உண்மை களை அப்படியே மூடி மறைத்துவிட்டு, தர்ம சாஸ்திரம், ஆன்மீகம், அருள்வாக்கு, தசோபதேசம் என்ற சொற்றொடர்களுக்குள் இந்த வர்ணாஸ்ரம கருத்துகளை புதைத்து விடுகிறார்கள். உலகப் புரட்சி, மனித உரிமை என்றெல்லாம் எழுதும் இதே ‘இந்து’ ஏடு தான், சாதி வர்ணபேத்தை உயர்த்திப் பிடித்த, இந்த சங்கராச்சாரிகளின் புகழ் பாடும் கட்டுரை களை பிறந்த நாள் நினைவாக இப்போதும் வெளி யிட்டு வருகிறது. இதற்குப் பெயர் மனுதர்ம சிந்தனை தானே?
சீதையின் மற்றொரு முகம்
“மாதர் (பெண்கள்) இளமைப் பருவத்தில் பிதாவினாலும் (தந்தை), திருமண காலத்தில் கணவனாலும், மூப்பில் (முதுமையில்) மைந்தனாலும், காக்கத்தக்கவராகையால், எக்காலத்திலும் மாதர் சுவாதீனமுடையவரல்லர். (சுதந்திரமாக வாழத் தகுதியற்றவர்) – மனு அத்.9; சுலோகம் – 3
பம்பாய் மாநில உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில், “இந்திய மனைவியர் சீதையைப் போல் வாழ வேண்டும். எல்லாவற்றையும் துறந்து விட்டு, பகவான் இராமனுடன், காட்டுக்குச் சென்று 14 ஆண்டுகள் காட்டில் கணவருக்காக வாழ்ந்த சீதையே இந்திய மனைவியர்களுக்கு முன்னு தாரணம்” என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டி யுள்ளனர். கணவர் மாற்றலாகிப் போகுமிட மெல்லாம் பின் தொடர முடியாததை எதிர்த்து, ஒரு பெண் தொடர்ந்த வழக்கில், வழங்கிய தீர்ப்பில் நீதிபதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
ஒரு பெண், வாழ்நாள் முழுதும் பெற்றோருக்கும் கணவனுக்கும் மகனுக்கும் அடிமைப்பட்டே வாழ வேண்டும் என்ற மனுதர்மதே இப்போது நீதிபதிகளின் தீர்ப்பாக வந்திருக்கிறது. இத்தீர்ப்பை கடுமையாக விமர்சித்து வினிதா தர்வா நஞ்சினா என்ற பெண், ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதி யுள்ளார். நீதிபதிகள் கூறும் – சீதைக்கு, மற்றொரு முகம் உண்டு என்கிறார், இந்த எழுத்தாளர். ‘என்னுடன் காட்டுக்கு வர வேண்டாம்’ என்று ராமன் கூறியதை மறுத்து காட்டுக்குப் போனாள். இராவணன் தூக்கிச் சென்றபோது இராவணன் ஆசைக்கு இணங்க மறுத்தாள். இலட்சுமணன் கிழித்த கோட்டையும் அவள்தான் தாண்டினாள்; இறுதியில் ராமன் தனது கற்பை சந்தேகித்தபோது அவனுடன் சேர்ந்து வாழ்வதைவிட உலகத்தை விட்டே போவது சிறந்தது என்று இறப்பதற்கு முடிவெடுத்தாள். இத்தகைய சீதையாக சுய முடிவு எடுத்து செயல்படவே இளம் பெண்கள் விரும்புகிறார்களே தவிர நீதிபதிகள் கூறும் கணவன் சொல் தட்டாத சீதைகளைப்போல் அல்ல. எந்த ஒரு பெண்ணுக்கும் எவராவது முன் மாதிரியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வியை எழுப்புகிறார், வினிதா. நீதிபதிகள் மனுதர்ம சிந்தனையை முன் வைத்தாலும் அதை இளைய தலைமுறை ஏற்கத் தயாராக இல்லை!
ஆகமம் வந்தபோதே நாங்களும் வந்தோம்
“கல்வி – தவம், இவைகளுக்கு உரியவர்களாக இருக்கிற பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட தானங்கள், அக்னியில் (நெருப்பில்) செய்த ஓமம் போல (மந்திரங்கள் போல்) பிரகாசிக்கின்றன. அதுமட்டுமல்ல, இந்த ஜென்மத்தில் வியாதி, அரசு போய்விடுமோ என்ற பயத்திலிருந்தும் காப் பாற்றுவதோடு வறுமையிலிருந்தும், நரகத்திலிருந்தும் காப்பாற்றுகின்றன.” – மனு 3வது அத். சுலோகம் 98
பார்ப்பானுக்கு தானம் செய்தால், செய்தவனுக்கு நோய் பயம் வராதாம். அரசனுக்கு பதவி போய்விடும் என்று பயப்பட வேண்டாமாம்! தானம் செய்த வனுக்கு வறுமை வராதாம். நரகத்துக்கும் போக வேண்டியிருக்காதாம். இப்படியெல்லாம் ‘இத்தகம்’ பேசி மிரட்டியே பார்ப்பனர்கள் இப்போதும் ‘தானம்’ வாங்குகிறார்கள். பெரும் தொழிலதிபர் களும் மக்களை கொள்ளையடித்து கோடி கோடி யாக கருப்புப் பணத்தை வைத்திருக்கும் அரசியல் வாதிகளும் பார்ப்பனர்களை அழைத்து, யாகம் நடத்தி, வாரி வாரி கொட்டுகிறார்கள். பம்பாயி லுள்ள தொழிலதிபர்களுக்காக விசேட பூஜைகள் நடத்த பிரபலமான ‘ஏழுமலையான்’ தலைமை அர்ச்சகர்கள் விமானத்தில் பறக்கிறார்கள். லட்சம் லட்சமாக ‘தானம் பெறுகிறார்கள்.
மனுதர்மம் வழங்கிய உரிமையைப் பயன்படுத்தி பார்ப்பனர்கள் நடத்தும் இந்த மிரட்டலுக்கு நீதி மன்றங்களும் பணிந்து போகின்றன. தமிழக சட்ட மன்றத்தில் அர்ச்சராகும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமல்ல அனைத்து சாதியினருக்கும் உண்டு என்று 1970 இல் ஒருமித்து நிறைவேற்றிய சட்டத்தை எதிர்த்து, பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் போனார்கள். உச்சநீதிமன்றம் ஆகம விதிகளை மீறாமல் சட்டத்தை நிறைவேற்றலாம் என்றுதான் தீர்ப்பளித்தது. பார்ப்பான் மட்டுமே அர்ச்சகராக இருந்த கோயில்களில் அந்த ஆகம நடைமுறைகளை மீறக்கூடாது என்பதுதான் இத் தீர்ப்பின் சாரம். ஆக, உச்சநீதிமன்றம், பார்ப்பானிடம் பயந்து நின்றது. மீண்டும் 2006 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள், 1970 ஆம் ஆண்டு சட்டமன்றத் தீர்மானத்தை அவசர சட்டமாக தி.மு.க. ஆட்சி பிறப்பித்தது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சிவாச்சாரி பார்ப்பனர்கள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார்கள். நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் இவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“ஆதி காலத்தில் சிவபெருமான் சைவ சமயத்துக் குரிய 28 ஆகமங்களை உருவாக்கினான். அப்படி ஆகமங்களை உருவாக்கியபோதே அதை பின் பற்றுவதற்காக சிவாச்சாரியாராகிய எங்களை யும் படைத்து விட்டார். அதனால்தான் மீனாட்சி யம்மன் கோயில் கட்டப்பட்ட காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக நாங்கள்தான் பூஜை செய்து வருகிறோம். எங்களை நீக்கி விட்டு வேறு சாதிக்காரர்களை அர்ச்சகராக நியமிப்பது ஆகமத்துக்கும் சிவபெருமானுக்கும் எதிரானது” என்று மனு போட்டார்கள். உச்சநீதிமன்றம் மிரண்டது. மனுதர்ம நீதியில் குறுக்கிட மறுத்து, அவசர சட்டத்துக்கு தடைபோட்டுவிட்டது. ஒவ்வொரு ஆகமக் கோயில்களிலும் பார்ப்பான் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்ற ‘மனுதர்ம நீதி’ இன்று வரை நீடிக்கிறது. சூத்திரன் என்ற பார்ப்பானின் தேவடியாள் மகள் (மனுநீதி அப்படித்தான் கூறுகிறது) கர்ப்பகிரகத்தில் நுழைந்தால், சாமி தீட்டாகிவிடும் என்ற நிலையே நீடிக்கிறது. மானமுள்ள ஒருவன் இந்த மனுதர்மத்தை மலம் துடைக்கும் காகிதமாகப் பயன்படுத்த வேண்டுமா? வேண்டாமா?
பார்ப்பான் செருப்புத் தொழில் செய்யலாமா?
“மாட்டு மூலமாக ஜீவிக்கிறவர்களாகவும், வர்த்தகம் செய்கிறவர்களாகவும், வட்டி வாங்கி பிழைக்கிறவர்களாகவும் இருக்கிற பிராமணர்களை சூத்திரரைப்போல் எண்ண வேண்டும்.”
– மனுதர்மம் அத்.9; சுலோகம் 102.
மனுதர்மம் விதித்த கட்டுப்பாடுகளை பார்ப்பான் மீறிவிட்டான்; அதற்கு ஏராளமான சான்றுகளைக் காட்ட முடியும். ஆனால், “சூத்திரர்களுக்கு” ‘மனு’ விதித்த இழிவுகள் அப்படியே தொடர வேண்டும் என்று சமுதாயத்தின் பொதுப் புத்தியில் பார்ப்பான் ஏற்றி விட்டான். அதுதான் சமூகத்தின் ‘மனுதர்ம சிந்தனை’.
மாடு – தோல் தொடர்பான தொழில்களில் பிராமணன் ஈடுபடுவதை மனுதர்மம் தடை செய்துள்ளது. ஆனால், செருப்பு தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பார்ப்பன மேலாளர் இப்போது மிகப் பெரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள செய்தி வந்திருக்கிறது. ‘ரீ போக்’ என்பது விலை உயர்ந்த காலணிகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனம், ரூ.5000-த்துக்கு குறைந்து இங்கே செருப்பு வாங்க முடியாது.
இந்நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் களாக இருந்தவர் விஷ்ணு பகவத், கவுந்தர்சிங் பிரேம் என்ற பார்ப்பனர்கள். இவர்கள் இருவர் மீதும் ‘ரீ போக்’ நிறுவனம் ரூ.870 கோடியை சுருட்டி விட்டதாக நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது. மும்பையில் தங்களுக்கு முன் ஜாமின் கேட்டு இவர்கள் மனு செய்துள்ளதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ‘சத்யம் கணினி மோசடி வழக்கிற்குப் பிறகு, இதுவே பெரும் பணம் சுருட்டிய ஊழல் என்றும், ‘ரீ போக்’ நிர்வாகத்தின் வழக்கறிஞர் வாதாடியுள்ளார். பார்ப்பானுக்கு ‘மனுதர்மம்’ தடையில்லை; ‘சூத்திரனுக்கு’ மட்டும் தீண்டாமை இழிவுத் தொழில், தனிக் குடியிருப்பு – என்று மனுதர்மம் விதித்த வாழ்க்கை முறை! இது என்ன நீதி?
பெரியார் முழக்கம் 07062012 இதழ்