வழக்கறிஞர் துரைசாமி வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கம்: தமிழனை தலைநிமிரச் செய்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரை:

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தன்னுடைய இந்திய வரலாற்று நூலில் சொல்லுகிறார்: 4000 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளை நிறமுள்ள ஆரியர்கள் சிந்து சமவெளி பள்ளத்தாக்கில் நுழைந்து, காஷ்மீர் முதல் ராஜபுத்னா வரை ஆக்ரமித்துக் கொண்டனர். கருப்பு நிற திராவிடர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான வம்சா வழியினர். ஆரிய திராவிட கலப்பில் ஏற்பட்டது வங்காளி மற்றும் ஒரியா இனம். மங்கோலியர் திராவிடர் இனக் கலப்பில் ஏற்பட்டது. பூட்டான், சிக்கிம் மற்றும் நேப்பாள் இனம் ஆரியர் மொழியான சமஸ்கிருதம் மேற்கத்திய மொழிகளோடு ஒத்துப் போவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட இனத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர்கள் சிந்துவெளி கலாச்சாரத்திற்கு முற்பட்டவர்கள். திராவிட  இனத்தைப் பற்றிய முழு ஆய்வு தனியாக மேற்கொள்ள வேண்டும். சங்ககால இலக்கியங்கள் மட்டுமே தற்போது ஆய்வுக்கு கிடைத்துள்ளது என்று கூறிவிட்டு ‘ரிக்’ வேதம் தான் முதலில் தோன்றியது. வேதங்களின்படி இரண்டு இனங்கள் காணப்படு கின்றன. அதாவது பிராமணர் மற்றும் சூத்திரர் என்று கூறிவிட்டு பிராமணர்கள் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர் என்று கூறுகிறார். இந்த ஆதிக்கம்தான் வழிவழியாக திராவிடர் இயக்கம் தோன்றும் வரை நீடித்தது. திராவிட இன மக்கள் மத நம்பிக்கையில் கட்டுண்டு கிடந்ததால் இதனை தட்டிக் கேட்க ராசாதி ராசாக்களுக்குக்கூட துணிவு இல்லை. அடிமைத்தனம் தொன்று தொட்டு தொடர்ந்து வந்தது. திராவிடர் இயக்கம் தோன்றாவிட்டால் அதே நிலைதான் இன்றைக்கும் தொடர்ந்து இருக்கும்.

கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து 1858 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு இந்திய அரசை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டது. அதுவரை ஆட்சியாளர்களுக்கு துதிபாடிக் கொண்டிருந்தவர்கள் பாதை மாறி ஆங்கிலேய அரசுக்கு அடிவருடிகளாக மாறினர். அதன் பலன் அதிகார பலம் பார்ப்பனர் கையில் கிடைத்தது. அன்றைய சமூக நிலைக்கு சில உதாரணம் 1. நாடார் இனப் பெண்கள் நகை அணியக் கூடாது.  2. ரவிக்கை அணியக் கூடாது.  3. தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடக்கக் கூடாது. 1814 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு உத்தரவுப்படி கீழ்சாதிக்காரர்களுக்கு அரசு வேலைக்கு சம்பளம் கிடையாது. உணவு மட்டும் வழங்கப்படும். நாடார் இன மக்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையக் கூடாது என நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியது. நடைபாதைக் கோவில்கள் தவிர பாடற்பெற்ற திருக்கோயில்களில் பர்ப்பனர் தவிர மற்றவர்கள் பூசை செய்ய அனுமதி இல்லை. விதிவிலக்காக இருந்த பழனிக் கோவிலுள்ளும் திருமலைநாயக்கன் உத்திரவால் தமிழன் வெளியேற்றப்பட்டான்.

பஞ்சமர்களுக்கு பஸ்சில் இடம் கிடையாது. நாடகக் கொட்டகையில்கூட பஞ்சமர் அனுமதி கிடையாது. திராவிடர் சங்கம் 10.11.1912 இல் தொடங்கப்பட்டது. தென்னிந்தியர் நல உரிமை சங்கம் 20.11.1916 இல் தொடங்கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்:

தமிழ்ப் பார்ப்பனர் 17.88 சதவிகிதம். தெலுங்கு பார்ப்பனர் 10.84 சதவிகிதம். இந்தியக் கிருஸ்துவர் 2.72 சதவிகிதம். நாயர் 1.54 சதவிகிதம், பலிஜா நாயுடு 0.98 சதவிகிதம், வேளாளர் 0.19 சதவிகிதம், செட்டியார் 0.15 சதவிகிதம், கவரா நாயுடு 0.06 சதவிகிதம், நாடார் 0.05 சதவிகிதம், ரெட்டி 0.04 சதவிகிதம், கம்மா 0.03 சதவிகிதம்.

காங்கிரஸ் கட்சி 1885 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டில் சாதிவாரியாக அரசு வேலைகளில் இருந்தோர். மக்கள் தொகையில் 3.6 சதவிகிதமாக இருந்த பார்ப்பனர்கள் 42.2 சதவிகிதம், 87.9 சதவிகிதமாக இருந்த பார்ப்பனர் அல்லாதார் 36.5 சதவிகிதம் தான் அரசு வேலையில் இருந்தனர். அதுவும் கீழ்மட்ட உத்தியோகத்தில்தான் 6.2 சதவிகிதம் இருந்த முஸ்லீம்கள் 5.5 சதவிகிதமும், 2.2 சதவிகிதம் இருந்த இந்திய கிறிஸ்தவர்கள் 4.9 சதவிகிதமும், 0.1 சதவிகிதம் இருந்த ஐரோப்பியரும் ஆங்கிலோ இந்தியரும் 10.9  சதவிகிதமும் அரசு பணிகளில் இருந்தனர்.

திராவிடர் சங்கம் ஆரம்பமாவதற்கு 10-15 ஆண்டுகளுக்கு முன் மாநில சிவில் சர்வீசுக்கு நடந்த தேர்வில் வெற்றிப் பெற்ற 16 பேரில் 15 பேர் பார்ப்பனர்கள். அசிஸ்டென்ட் இன்ஜீனியர் வேலைக்கு நடந்த தேர்வில் வெற்றிப் பெற்ற 21 பேரில் 14 பேர் பார்ப்பனர்கள்.

துணை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பதவியில் இருந்த 140 பேரில் பார்ப்பனர்கள் 77 பேர். பார்ப்பனரல்லாதோர் 30 பேர். முஸ்லீம்கள் 15 பேர். இந்தியக் கிறிஸ்துவர்கள் 7 பேர். ஐரோப்பியரும் ஆங்கிலோ இந்தியரும் 11 பேர்.

துணை நீதிபதிகள் பதவியில் இருந்த 18 பேரில் பார்ப்பனர்கள் 15 பேர். பார்ப்பனரல்லாதார் 3 பேர்.

மாவட்ட நீதிபதிகள் பதவியில் இருந்த 128 பேரில் பார்ப்பனர்கள் 93 பேர். பார்ப்பனரல்லாதார் 25 பேர். முஸ்லீம்கள் 2 பேர். இந்தியக் கிறிஸ்துவர்கள் 5 பேர். ஐரோப்பியரும், ஆங்கிலோ இந்தியரும் 3 பேர்.

1907 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரி களுக்கு சட்டசபையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பேரில் 11 பேர் பார்ப்பனர்கள்.

சற்று விழிப்புணர்வு ஏற்பட்ட பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1918 ஆம் ஆண்டு:

கலை, அறிவியலில் பி.ஏ. பட்டம் பெற்றோர் மொத்தம் 15,230. பார்ப்பனர்-3213. பார்ப்பனரல்லாதார் 10,269. மற்றவர்கள் 1748 பேர். கலை, அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றோர் மொத்தம் 509 பேர். பார்ப்பனர்-65. பார்ப்பனரல்லாதார் 389. மற்றவர்கள் 55 பேர்.

ஆசிரியர் பயிற்சிப் பெற்றவர்கள் மொத்தம் – 1498. அதில் பார்ப்பனர்கள் 163. பார்ப்பனரல்லாதார் 1094. மற்றவர்கள் 241.

சட்டத்தில் பட்டம் பெற்றவர்கள் மொத்தம் 54. பார்ப் பனர்கள் – 4; பார்ப்பனரல்லாதார் – 48; மற்றவர்கள் 2 பேர்.

சிவில் என்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் மொத்தம் 159. பார்ப்பனர்கள்-15; பார்ப்பனரல்லாதார் 121; மற்றவர்கள் 23 பேர்.

இந்த மாற்றத்தினை 1914 ஆம் ஆண்டின் புள்ளி விவரத்தைப் பார்த்தால் புரியும். அந்த ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் மொத்த எண்ணிக்கை 950 பேர். அதில் 452 பார்ப்பனர்கள். 124 பார்ப்பனரல்லாதார். 74 பேர் மற்ற சமூகத்தார்கள்.

1912 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் திராவிடர்களின் நிலை எப்படி இருந்தது என்றால், சென்னை மாகாண அரசின் பொதுப் பணித் துறையில் பணியாற்றிய 635 பேர்களில் 398 பேர் பார்ப்பனர்கள். 125 பேர் பார்ப்பனரல்லாதார். 12 பேர் மற்றவர்கள்.

வருவாய்த் துறையில் 800 முக்கிய பதவிகளில் பணியாற்றியவர்கள் 638 பார்ப்பனர்கள். 130-பார்ப்பனரல்லாதார். 32-மற்றவர்கள்.

நீதித் துறையில் பணியாற்றிய 216 பேரில் பார்ப்பனர்கள் 143. பார்ப்பனரல்லதார் 56. மற்றவர்கள் 17.

கல்வித் துறையில் பணியாற்றிய 390 பேர்களில் 310 பார்ப்பனர்கள்; 29-பார்ப்பனரல்லாதார்.

பார்ப்பனரின் வர்ணாஸ்ரம மனுதர்ம வெறிக்கு சில உதாரணம்:

1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரகாரத்துக்குக் கக்கூஸ் எடுக்க தாழ்த்தப் பட்டவர்களை நியமிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மலம் எடுக்க சூத்திரர்களை நியமிக்க வேண்டுமென பார்ப்பனர்கள் வலியுறுத்தினர்.

1938 ஆம் ஆண்டு நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் மூன்று ஆதி திராவிடத் தோழர்கள் சரிசமமாக உட்கார்ந்து விருந்து சாப்பிட்டனர் என்பதற்காக அவர்களை மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இரண்டு பார்ப்பனர்கள் விவசாய வேலை செய்தனர் என்பதற்காக அவர்கள் சாதி நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த சங்கராச்சாரி அந்தப் பகுதிக்கு சுற்றுப் பயணம் வந்தபோது அந்த இரு பார்ப்பனர்களும் வழங்கிய காணிக்கையை ஏற்க மறுத்து தன் சாதி வெறியை வெளிப்படுத்தினார்.

1940 ஆம் ஆண்டுகளில் சென்னை வில்லிவாக் கத்தில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளில் வசித்தவர் களுக்கு வந்த கடிதங்களை, அஞ்சல்காரர்கள் ஊர் எல்லையிலேயே உள்ள ஒரு கோயிலிலே வீசி எறிந்துவிட்டுப் போனார்கள்.

1943 இல் கும்பகோணம் அரசினர் கல்லூரியில், பார்ப்பன மாணவர்களுக்குத் தனியாகவும், பார்ப்பன ரல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் தண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தது.

1939 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தியவுடன் கோவிலை விட்டு மீனாட்சியே ஓடிப் போய் விட்டாள் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து கோவிலுக்குப் பூட்டும் போட்டு விட்டார்கள்.

இரயில்வே துறை நடத்திய சிற்றுண்டி விடுதிகளிலும் பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித் தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ் பாட்டுப் பாடினார் என்பதற்காக, மேடை தீட்டாகிவிட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தனர்.

1936-37 இல் ஆட்சிக்கு வந்த இராஜகோபாலாச் சாரியார் போதிய நிதி வசதியில்லை என்று காரணங் கூறி கிராமப் புறங்களில் இருந்த 2200 துவக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். அதே நேரத்தில் ரூ.12 இலட்சம் செலவில் பார்ப்பனர்களுக்காக வேத பாடசாலைகளைத் துவக்கினார்.

(தொடரும்)

பெரியார் முழக்கம் 05072012 இதழ்

You may also like...