அமெரிக்காவில் மரண தண்டனையில் நடந்த ஆள் மாறாட்டம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு கார்லோஸ் டெலுனா என்ற அப்பாவி இளைஞர் செய்யாத கொலை குற்றத்துக்காக மரண தண்டனைக்கு உள்ளானார். உண்மையில் அந்தக் கொலையை செய்தவர் கார்லோஸ் ஹெர்னான்டஸ் என்ற மற்றொரு இளைஞர். கார்லோஸ் என்ற பெயர் ஒற்றுமையும் உருவ ஒற்றுமையும் இருவருக்கும் ஒன்றாகவே இருந்தது. மரண தண்டனைக்குள்ளான இளைஞர் இறுதி வரை இந்தக் கொலையைத் தான் செய்யவில்லை என்றும், கொலை செய்த உண்மையான குற்றவாளியின் பெயரைக் கூறியும்கூட அரசு வழக்கறிஞர்கள் அதை ஏற்கவில்லை. கார்லோஸ் ஹெர்னாண்டஸ் என்ற பெயரில் ஒரு ஆளே கிடையாது என்று அரசு வழக்கறிஞர்கள் அடித்துக் கூறினார். மரண தண்டனைக்குள்ளாகும் இறுதி நேரத்தில்கூட ‘நான் அப்பாவி, குற்றமற்றவன்’ என்று கூறிக் கொண்டே அவன் மரண தண்டனையை சந்தித்தான். கொலம்பியா சட்டக் கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவர்கள் குழு ஒன்று இதுபற்றி 2004 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். 8 ஆண்டு ஆய்வுக்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அப்பாவி என்பதை உறுதி செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கொலை வழக்கில் அரசு தரப்பில் சேகரிக்கப்பட்ட சான்று ஆவணங்கள் மற்றும் சாட்சி விசாரணைகள், தடய ஆய்வுகளில் நடந்துள்ள முறைகேடுகளை இந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மரண தண்டனை தேவையா என்ற வாதம் டெக்சாஸ் மாநிலத்தில் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே பல வழக்குகளில் இப்படி அப்பாவிகள் பலிகடாவாக்கப்பட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பேனிக் அமெரிக்கர்கள் என்ற சிறுபான்மை சமூகத்தினரே ஆவர். கடந்த 20 ஆண்டுகளில் இப்படி முறையற்ற மரண தணடனைகள் விதிக்கப்பட்டுள்ளதை மிக்சிகன் மற்றும் வடமேற்கு பல்கலைக்கழக ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 17 மாநிலங்கள் மரண தண்டனை விதிக்கும் சட்டப் பிரிவுகளை பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளன. 5 மாநிலங்கள் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டதாகவே தனியாக சட்டம் இயற்றி விட்டன. கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் கன்னக்டிக்கட் மாநிலம் மரண தண்டனையை ஒழித்து சட்டமியற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா தூக்குத்தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்றாவிட்டாலும் நிறுத்தி வைத்துள்ளது. சீனாவில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் கடைசியாக 2004 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பெரியார் முழக்கம் 07062012 இதழ்

You may also like...