சைவ மடங்களையும் ஆட்டிப் படைக்கும் மனுதர்மம்

மதுரை ஆதினம், நித்யானந்தாவை தனது வாரிசாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்து மத கட்சிகளே நித்யானந்தா நியமனத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களையும், தாக்குதல்களை யும் நடத்தி வருகின்றன. கருநாடக பா.ஜ.க. ஆட்சி நித்யானந்தாவை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டின் சைவ மடங்கள் 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன. புத்த மதம், சமண மதம் வேகமாகப் பரவியதால் உருவான நெருக்கடிகளை எதிர்கொள்ளவே இந்த மடங்கள் உருவாயின. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்ற சைவத் ‘திருமேனிகள்’ ஊர் தோறும் கோயில் கோயிலாகச் சென்று பதிகம் பாடினர்.

சைவத்திலும் மனுதர்மமான பார்ப்பனியம் புகுந்து சைவக் கடவுள்களை பார்ப்பனமாக்கியது. சைவக் கடவுளான சிவன், பார்ப்பன ஊடுருவலால் ‘உருத்திரன்’ ஆனான். பார்ப்பன யாகங்களை நடத்தி, ‘உருத்திரனை’ப் போற்றி ‘மகாதேவன்’ என்று மாற்றினார்கள். தமிழ்க் கடவுள் என்று கூறப்பட்ட முருகன், பார்ப்பன ‘மனுதர்ம’ ஊடுருவலால் கந்தனாகவும், சுப்ரமணியனாகவும் மாற்றப்பட்டான். வீரத்தின் கடவுளாக கருதப்பட்ட கொற்றவை, ‘மனுதர்ம பார்ப்பன’ ஊடுருவலால் ‘துர்க்கை’ ஆனாள். சைவக் கடவுள் சிவனுக்கு குடும்பத்தை உருவாக்கி, பார்வதி, கணேசன், சுப்ரமணியன் (முருகன்) போன்ற உறவுகளை உருவாக்கினர். பார்ப்பன மயமாக்கினர். சைவத்தில் பார்ப்பனியம் நுழைந்தவுடன் மயோச்சுரர், கபாலிகர் என்ற இதற்கு எதிரான பிரிவுகள் வந்தன. இவர்கள் சைவ வழிபாட்டு முறைகளுக்கு நேர்மாறான  வழிபாட்டைப் பின்பற்றினர். நரபலி, இறந்தோரின் இறைச்சியைப் பலியிடுதல் என்ற வழிபாட்டு முறைகளைப் பின்பற்றினர். கபாலிகர் என்ற பிரிவினர் சக்தி வழிபாடுகளை மேற்கொண்டனர். சாதி வேறுபாடுகளை மறுத்தனர். ஏனைய ஆரிய வழிபட்ட சைவர்கள் சாதி பாகுபாடுகளைப் போற்றி தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக நடத்தினர்.

இப்போதும் சைவ மடங்களில் ‘தம்பிரான்களாக’ சைவத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் தான் வர முடியும். மதுரை ஆதினத்துக்கு ‘சைவப் பிள்ளை’ சாதிக்கு பதிலாக, ‘சைவ முதலியார்’ சாதியைச் சேர்ந்த நித்தியானந்தாவை எப்படி வாரிசாக்கலாம் என்ற அடிப்படையிலேயே ஏனைய சைவ மடங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதே இந்த மடங்களின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மடங்களின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் சமஸ்கிருதம்தான் வழிபாட்டு மொழி.

1929 பிப்ரவரியில் செங்கல்பட்டில் பெரியார் நடத்திய வரலாற்றுப் புகழ் மிக்க முதலாவது சுயமரியாதை மாநாடு, தீண்டாமை, சாதி ஒழிப்பு, பார்ப்பன புரோகிதரை விலக்குதல், பெண்ணுரிமை முதலானவை பற்றிய தீர்மானங்களோடு, சாதிப் பட்டங்களை துறக்க வேண்டும். சமயச் சின்னங் களை அணியக்கூடாது என்று தீர்மானித்தது. ‘மந்திர மாவது நீறு’ என்று திருநீற்றுப் பதிகம் பாடிய சைவர்கள் கூட்டத்துக்கு இவை பேரிடியாய் விழுந்தன.

அவசர அவசரமாக சைவர்கள், அடுத்த மாதமே 1929 மார்ச் 20, 30, 31 தேதிகளில் தனிக் கூட்டத்தைக் கூட்டி, சைவர்களை மட்டுமே அழைத்து விவாதித் தனர். சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகக் கட்டிடத் தில் ஆலோசனைக் கூட்டமும், கணபதி விலாச நாடக சாலையில் பொதுக் கூட்டமும் நடைபெற்றன.  சுயமரியாதை இயக்கம் தந்த நெருக்கடியால், கோயிலில் வழிபடும் மக்களுக்குள் உயர்வு தாழ்வு காட்டக் கூடாது என்றும், கோயிலுக்குள் நிலவிய ‘தேவதாசி’ முறையை (பொட்டுக் கட்டுதல்) ஒழிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஆனால், ‘தூய்மை’யை கடைப்பிடிப் போருக்கு மட்டுமே கோயிலில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, ‘தீண்டாமை’யை மறைமுகமாக திணித்தார்கள். ஆனால், சைவர்களின் வார இதழான ‘சிவநேசன்’, “தீண்டாமை என்பது சிவபெருமானால் வகுக்கப் பட்டது” என்றும், கோயிலை நிறுவிய பெரியோர் களின் கருத்துக்கு மாறாக எல்லா வகுப்பினைரையும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் வெளிப்படையாக எழுதியது. (‘சிவநேசன்’ 1929, மே)

வடமொழி சமஸ்கிருதத்தையும், பார்ப்பனர் களையும் எதிர்த்து, தனித் தமிழ் இயக்கத்தை நடத்திய மறைமலை அடிகளே தனது மகள் திருமணத்தை பார்ப்பனரை வைத்து ‘புரோகித’ முறையில்தான் நடத்தினார். எனவே பார்ப்பனரல்லாத மடம் என்பதற்காக சைவத்தின் பார்ப்பனியத்தை ஏற்க முடியாது. (மறைந்த குன்றக்குடி அடிகளார் மட்டுமே பார்ப்பன எதிர்ப்புப் பார்வையுடன் பெரியாருடன் தோழமை பாராட்டினார்)

தமிழ்நாட்டில் சிறியதும் பெரியதுமாக 18 சைவ மடங்கள் இருந்தும், 5 மடங்கள் மட்டுமே வசதி படைத்தவை.

1)            மதுரை ஆதீனம் 1500 ஆண்டுகள் பழமையானது. இதன் கட்டுப்பாட்டில் 5 கோயில்களும், 1200 ஏக்கர் நிலமும், மதுரையில் பல வணிக வளாகங் களும் உள்ளன. – தலைவர் அருணகிரிநாத தேசிகர்.

2)            மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ஆதினம் – 7 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 27 கோயில்களும், 16000 ஏக்கர் நிலங்களும், கல்வி நிறுவனங்களும், வணிக வளாகங்களும் உள்ளன. தலைவர்: சண்முக தேசிகன்.

3)            குடந்தை அருகே உள்ள திருப்பனந்தாள் ஆதினம் – 17 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் கோயில் ஏதும் இல்லை.

7 கிராமங்களில் 2000 ஏக்கர் நிலமும், பள்ளிகள்,

2 கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளன. தலைவர் : முத்துக்குமாரசாமி தம்பிரான்.

4)            திருவாவடுதுறை  ஆதினம் – நாகை மாவட்டம் குடந்தை அருகே உள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 28 கோயில்களும், 20000 ஏக்கர் நிலங்களும் பள்ளிக் கூடங்களும் உள்ளன. தலைவர்: சிவப்பிரகாச தேசிகர்.

5)            குன்றக்குடி ஆதினம் – சிவகங்கை மாவட்டத் திலுள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் நிறுவப் பட்டது. இதன் கட்டுப்பாட்டில் 5 கோயில்களும், 1000 ஏக்கர் நிலமும், கட்டிடங்களும் உள்ன. தலைவர்: பொன்னம்பல அடிகளார்.

குன்றக்குடி மடங்கள் போன்ற விதிவிலக்குகள் இருந்தாலும், சைவம், பார்ப்பனியமாகி விட்டது என்பதே உண்மை. மனுதர்மத்தின் ‘சூத்திர’த் தீண்டாமையையே இப்போதும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் கொலைக் குற்றங்களுக்கு உள்ளாகி நிற்கும் பார்ப்பன மடமான காஞ்சி மடத்தைத்தான் இன்னமும் ‘புனித’ மடமாக உயர்த்திப் பிடிப்பதோடு, சில காலம் ஒதுங்கி நின்ற கொலைக் குற்றவாளி ஜெயேந்திரன், இப்போது வெளிப்படையாக மீண்டும் ‘ஆசி’ வழங்கத் தொடங்கி விட்டார்.    ட

பெரியார் முழக்கம் 05072012 இதழ்

You may also like...