திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல் 13 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!

‘சேவ் தமிழ்’ அமைப்பின் சார்பில் சிறையில்நீண்ட காலம் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நியாயமான விடுதலைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும், செப்டம்பர் முதல் தேதி சென்னை லயோலா கல்லூரி ‘பிஎட்’ அரங்கில் நடந்த கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார்.

“தமிழ்நாட்டில் பெரியாரின் திராவிடர் இயக்கம், திராவிடர் என்ற குடையின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளான பார்ப்பனரல்லாதார், இஸ்லாமியர்கள், தலித் மக்கள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒடுக்கும் சக்தியான பார்ப்பனர்களை தனிமைப்படுத்தி, இந்த மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான இயக்கத்தை முன்னெடுத்தார். அதன் விளைவாக ஏனைய வடமாநிலங்களில் மிக மோசமாக கட்டமைக்கப்பட்டதைப் போன்ற குறுகிய இஸ்லாமிய வெறுப்பு தமிழகத்தில், முளை விடும் வாய்ப்புகள் தடுக்கப்பட்டன. மதத்தால் வேறுபட்ட இஸ்லாமியர்களை திராவிடர்களாக, சகோதரர் களாக தமிழகம் அரவணைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய இந்த ஒற்றுமையைக் குலைக்க பார்ப்பனிய இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு மேற்கொள்ளும் முயற்சிகள், சூழ்ச்சிகள் இப்போது, இஸ்லாமிய சகோதரர் களைத் தனிமைப்படுத்துவதில் வெற்றிப் பெற்று வருகிறது. ஆனால், ‘திராவிடர்’ அடையாளத்தில் தான் சரியான சமூக விடுதலை தங்கியுள்ளது என்ற உறுதியான கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மையான பெரியாரியல்வாதிகள், இஸ்லாமியர் களின் நியாயமான உரிமைக் குரலுக்கு என்றும் குரல் கொடுப்போம்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:

கோவையில் 1998 இல் நடந்த குண்டுவெடிப்பு வன்முறைகளை நாம் ஏற்கவில்லை. அது கண்டிக்கத்தக்கது. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதுதான். ஆனால், குண்டுவெடிப்புக்கான காரணம் எங்கேயிருந்து தோன்றியது? 1997 இல் செல்வராசு என்ற போலீசார், தனிப்பட்ட பிரச்சினையில் ஒரு இஸ்லாமியரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையே அதை ஒட்டுமொத்த இஸ்லாமியருக்கு எதிரான குற்றமாக மாற்றியது. கோவையில் 19 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லீம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள் உடைமைகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டு அளவில் நாசமாக்கப்பட்டன. இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் உடனே பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். ஒருவர்கூட இந்த வழக்கில் தண்டிக்கப்படவில்லை.

ஆனால், குண்டுவெடிப்பு வழக்கில் கண்மூடித் தனமாக இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப் பட்டனர். 166 முஸ்லீம் சிறைவாசிகள், விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது. 9 ஆண்டுகாலம் சிறை வாசத்துக்குப் பிறகு, 8 பேர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப் பட்டனர். 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. 15 பேருக்கு 13 வருட தண்டனை வழங்கப் பட்டது.

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக நிறுவனர் குன்னங்குடி அனிபா, சுமார் 16 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு இப்போது நிரபராதி என்று நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குன்னங் குடி அனிபாவின் மகள் திருமண நிகழ்வின் போது திருமண வீட்டுக்குள் நுழைந்து, காவல்துறை அவரை கைது செய்தது. 16 ஆண்டு சிறை வாசத்துக்குப் பிறகு நீதிமன்றம் விடுதலை செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு, அனிபாவின் தந்தை மரண மடைந்தார். அந்த நிகழ்வில் பங்கேற்க அனுமதி கேட்டபோதும்கூட அதற்கு அனுமதிக்கப்படவில்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அண்ணாவின் நூற்றாண்டையொட்டி 7 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் மிகச் சிறப்பான மனித உரிமைக் கண்ணோட்டத்திலான, அண்ணாவுக்கு உண்மை யான சிறப்பு செய்யக் கூடிய முடிவை எடுத்தது. அதன்படி 1405 கைதிகள் விடுதலை செய்யப் பட்டனர். ஆனால், இதில் ஒருவர்கூட இஸ்லாமியர் கைதி இல்லை.

கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட மசானி, 13 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். கடுமையான சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட தால் கால் துண்டிக்கப்பட்ட அவர், சிறையில் முறையான சிகிச்சை வழங்கப்படாததால் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டார். அவரது எடை 40 கிலோ குறைந்தது. அவருக்கு உடனடியாக சிகிச்சை தர வேண்டிய நிலை வந்தபோது, சிறைக்குள்ளே சிகிச்சை தரப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்ற நெருக்கடியில் சிகிச்சைக்கு அனுமதிக்கலாமா என்று சிறைத் துறை அதிகாரிகள், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்டனர். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மைச் செயலாளராக இருந்த முனிர்கோதா எனும் அய்.ஏ.எஸ். அதிகாரி, முதல்வரைத் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் அவசரமாக மருத்துவத் துறை, காவல்துறை உயர் அதிகாரிகளோடு கலந்து பேசி, அனைவருமே சேர்ந்து, மருத்துவ வசதி யளிக்கலாம் என்று முடிவெடுத்தனர். அதன் காரணமாக அந்த அய்.ஏ.எஸ். அதிகாரியை பணி நீக்கம் செய்து, முதல்வர் ஜெயலலிதா தண்டித்த தோடு, அந்த அதிகாரியை ‘தேச விரோதி’ என்று குற்றம் சாட்டினார்.

இந்த கசப்பான வலிகளை எல்லாம் ஏற்றுக் கொண்டுள்ள இஸ்லாமியர்கள் தற்போது சிறையில் குண்டு வெடிப்பு வழக்குகளிலோ, மதக் கலவர வழக்குகளிலோ தொடர்பில்லாத இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள 20 சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரு கின்றனர். இவர்கள் 13 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்த நாளில் கைதிகளை விடுதலை செய்வது எனும் தி.மு.க. ஆட்சியில் பின்பற்றிய நடைமுறையை தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பின்பற்றி, இஸ்லாமிய கைதிகளுக்கு அநீதியாக அவர்களை வேற்றுமைப் படுத்தி இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு ஏற்று செயல்பட வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களோடு இணைந்து போராடும்.

பெரியார் முழக்கம் 06092012 இதழ்

You may also like...