‘திராவிடர் விடுதலைக் கழகம்’கழகத்தின் புதிய பெயர்
‘திராவிடர் விடுதலைக் கழகம்’ என்ற பெயருடன் இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்திட கழகத் தோழர்கள் ஈரோட்டில் நடந்த சந்திப்பில் முடிவெடுத்தனர்.
பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை யினர் 51 பேர் ஈரோட்டுக்கு வந்த நிலையிலும் ‘நீக்கல் – விலக்கல்’ ஏதுமின்றி நாமாகவே தனி அமைப்பை உருவாக்கிடும் அறிவிப்பை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார்.
12.08.2012 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், ‘இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்கள் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் முன்னிலை யிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாகச் சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். நேரில் வர இயலாத குமரி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சதா, நெல்லை மாவட்ட அமைப்பாளர் காசிராசன், கடலூர் மாவட்டத் தலைவர் வடலூர் வெங்கடேசன் ஆகியோர் தொலைபேசி வழியாக தங்கள் ஆதரவை கழகத் தலைவரிடம் கூறியிருந்தனர். 1500க்கு மேற்பட்ட தோழர்கள் – பங்கேற்ற இந்த நிகழ்வு உணர்ச்சி மயமாக இருந்தது.
கோவை மாவட்டத்தில் இருந்து மூன்று தனிப் பேருந்துகள் மற்றும் மகிழுந்துகள், தனித்தனியாக தொடர்வண்டி, பேருந்து ஆகியவைகள் மூலமாக சுமார் 350 தோழர்கள் கலந்து கொண்டனர். அதேபோல சென்னையில் இருந்து இரண்டு தனி பேருந்துகள், புதுவையில் இருந்து இரண்டு தனிப் பேருந்துகள் மூலமாகவும் தோழர்கள் வந்திருந்தனர். பல்லடம், திருப்பூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் இருந்து தனி சிற்றுந்துகள் மூலமாக வந்திருந்தனர்.
கோபி இராம. இளங்கோவன், கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்பைக் கூற தோழர்கள் அதை எழுச்சியோடு வழிமொழிந்து முழக்கமிட்டனர். ஈரோடு இரத்தினசாமி வரவேற்புரையாற்றினார். புதுவை லோகு அய்யப்பன் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து, நாம் ஏன் பெரியார் திராவிடர் கழகத்தை விட்டுவிட்டு வேறு பெயரில் இயங்குகிறோம் என்று விளக்கிப் பேசிய விடுதலை
க. இராசேந்திரன், நமது கழகத்தின் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு விரிவாக பதில் அளித்தார். முதலில் 200 பேர் கூடுவோம் என்று எதிர்பார்த்து, பின்னர் நாட்கள் நெருங்க நெருங்க 500 பேர் வருவார்கள் என்று உறுதி செய்து தான் இந்த மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இன்று இவ்வளவு பேர் வந்திருப்பது நாம் சென்றுக் கொண்டிருக்கிற பாதை மிகச் சரியானது என்பதை உறுதிச் செய்கிறது என்று குறிப்பிட்ட போது தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பினர்.
தொடர்ந்து பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “இங்கே விடுதலை இராசேந்திரன் விளக்கிப் பேசிய செய்திகளின் உண்மைகளை நீங்கள் ஆய்ந்து பார்க்க வேண்டும். இவை உங்களிடம் இதுவரை இங்கே சொல்லப்பட்ட செய்திகள் உங்களுக்காக மட்டும் சொல்லப்பட்டதே தவிர பரப்புவதற்கு அல்ல. தேவைப்படும்போது நமது தோழர்களோடு விவாதம் செய்து கொள்ளலாமே தவிர, இது பத்திரிகைக்கான செய்தியும் அல்ல. விமர்சனம் என்ற பெயரில் நமது தோழர்களுக்கு ஏராளமாக அனுப்பப்பட்டுள்ள அவதூறு அறிக்கைகள், கடிதங்கள் பற்றி, நமது தோழர்கள் விளக்கம் பெற வேண்டியது அவசியம் என்பதற்காகவே, இந்த விளக்கங்களை தந்துள்ளோம். இனி நமது கொள்கைப் பணிகள் தொடரும். எனவே ஏடுகளில் யாரும் வெளியிடக் கூடாது என்று முதலில் வேண்டுகோளாக வைக்கிறேன் என்று தனது உரையை தொடங்கினார். பொதுக் குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு நமக்கு இருந்தும் புதிய பெயரில் இயங்க வேண்டிய காரணததையும், அவசியத்தையும் விளக்கிப் பேசினார். மேலும் தனது உரையில் :
புதிய பெயர், புதிய கொடி, புதிய செய்தி ஏடு ஆகியவைகளோடு இயங்கலாம் என்று தான் முதலில் முடிவு செய்தோம். பெரியார் முழக்கம் ஏடு வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இதுவரை பயன்படுத்தி வந்த கொடியை (தூத்துக்குடி பெரியார் பாசறையின் கொடி என்பதால்) நீங்களே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். எனவே நாம் அமைப்பிற்கு புதிய பெயர் தான் வைக்க வேண்டும்.
பெரியாரின் கொள்கைகள் சுயமரியாதையும், சமதர்மமும் ஆகும். பன்னாட்டு சுரண்டல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் நாம் அதற்கு எதிராக போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே, “சுயமரியாதை சமதர்மக் கழகம்” என்பதுதான் பொருத்தமான பெயராக இருக்கும் எனக் கருதினோம். ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல் தான் தமிழர் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது என்று பலரும் பேசி வருகிற இந்த சூழலில் நாம் திராவிடர் என்ற சொல்லை கைவிடுவது, போதிய புரிதலின்றி இதுவரை திராவிடர் என்று வைத்திருந்ததை இப்போதாவது தவறை உணர்ந்து சரி செய்து கொண்டதைப் பாராட்டுகிறோம் என்று சிலர் எழுதுவதற்குப் பயன்படலாமே தவிர பெரும்பாலான உழைக்கும் மக்களை கேவலப்படுத்தி பிரித்து வைத்திருக்கிற ஆரியத்துக்கெதிரான பண்பாட்டுப் புரட்சிக்குப் பயன்படாது என்பதால் நம்மை அடிமைகளாய் வைத்திருக்கும் ஆரியத்துக்கு எதிரான குறிச்சொல்லான ‘திராவிடர்’ என்ற சொல் அமைப்பின் பெயரில் அவசியம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். (கைதட்டல்) எனவே ‘திராவிடர் சுயமரியாதை சமதர்மக் கழகம்’ என்று வைக்கலாமா, ‘திராவிடர் சுயமரியாதைக் கழகம்’ என்று வைக்கலாமா என்று ஆலோசித்தோம். இதில் சுயமரியாதை என்ற சொல் வடமொழி என்பதால் தன் மதிப்பு என்று தமிழ்ப் படுத்தி, ‘திராவிடர் தன்மதிப்புக் கழகம்’ என்று வைக்கலாமா என்றும் கருதினோம். ஆனால், சுயமரியாதை என்ற சொல்லில் இருக்கும் வீரியம் தன்மதிப்பு என்பதில் இல்லை. எனவே இதுவும் கைவிடப்பட்டது. சமூக விடுதலை இல்லாமல் பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டிருக்கிறோம். அரசியலில் விடுதலை இல்லாமல் இந்திய தேசியத்திற்கு அடிமைப்பட்டிருக் கிறோம். பொருளாதாரத்தில் பன்னாட்டிற்கு அடிமையாக இருக்கிறோம். எனவே நமக்கு இப்போது தேவையாக இருப்பது பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டு சுரண்டலில் இருந்து விடுதலையே. எனவே ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ என்று முடிவு செய்தோம். இது புதிய பெயரல்ல. புதிய முன்னெடுப்பு என்றும் அறிவித்தார். தோழர்கள் தொடர்ந்து கரவொலி எழுப்பி, புதிய பெயரை வரவேற்றனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் நிகழ்ச்சியின் துவக்கமாக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி (ம.தி.மு.க.) வாழ்த்துரை வழங்கினார். ம.தி.மு.க. நகர செயலாளர் பூங்கொடி சாமிநாதன் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தார். முதுபெரும் பெரியார் தொண்டர் ஆசிட் தியாகராசன் அமைப்பைப் பாராட்டிப் பேசினார். மாவட்டத்திற்கு ஒருவராக கீழ்க்கண்ட தோழர்கள் உரையாற்றினர்.
திருப்பூர் துரைசாமி, கோவை பன்னீர்செல்வம், சேலம் (மேற்கு) முல்லை வேந்தன், நாமக்கல் சாமிநாதன், காஞ்சி டேவிட் பெரியார், மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், திண்டுக்கல் நல்லதம்பி, தூத்துக்குடி அம்புரோசு, சென்னை உமாபதி, கிருஷ்ணகிரி குமார், திருச்சி புதியவன், கன்னியாகுமரி சூசை, வடலூர் கலியமூர்த்தி, கரூர் காமராசு, சேலம் (கிழக்கு) டேவிட், பெரம்பலூர் தாமோதரன், விழுப்புரம் வெற்றிவேல், திருநெல்வேலி அன்பரசு, பொள்ளாச்சி விஜயராகவன், தஞ்சை பாரி, நாகை மகேஷ், வேலூர் திலீபன், சேலம் (மாநகரம்) பாலு ஆகியோர் பேசினர்.
இறுதியாக மாநில வெளியீட்டுச் செயலாளர் சூலூர் தமிழ்ச்செல்வி, மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தலைவர் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில பொறுப்பாளர் சிவக்குமார் நன்றியுரையாற்றினார்.
பெரியார் முழக்கம் 16082012 இதழ்