மனித உரிமைச் சட்டங்கள் : அய்.நா.வை ஏமாற்றுகிறது இந்தியப் பார்ப்பன ஆட்சி
நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சான்றாக வந்து கொண்டிருக்கும் செய்திகளின் தொகுப்பு:
அய்.நா. மனித உரிமைகளைக் காப்பாற்று தற்கும், சித்திரவதைகளைத் தடுப்பதற்கும் இனப் பாகு பாடுகளை ஒழிப்பதற்கும் சர்வதேச சட்டங்களை யும், நெறிமுறைகளையும் வகுத்துள்ளது. உலகின் பல நாடுகள் இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட் டுள்ளன. தொடர்ந்து இந்த உரிமை மீறல்களைத் தடுத்து, மக்களைப் பாதுகாக்க உரிய சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. ஆனால், உலகிலே பெரிய நாடுகளில் ஒன்றாக பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் என்ன நிலை? மனித உரிமை மீறல் களுக்கும், சித்திரவதைகளுக்கும் உள்ளாகிறவர்கள் “சூத்திரர்களும்”, பஞ்சமர்களும்தானே தவிர, “பிராமணர்கள்” அல்ல. இந்த நாட்டில் பார்ப்பனர்கள் ‘பிராமணர்’களாகி விடுவதால், அவர்கள் மனிதர்களைவிட மேலானவர்கள். தங்களின் பிரதிநிதியாகவே கடவுளால் படைக்கப் பட்டதாக பார்ப்பனர்கள் கூறுவதை அரசாங்கமும் அங்கீகரித்துவிட்டது. அதனால்தான் ஆகமங்கள் தீண்டாமையை வலியுறுத்தியபோதும் அரசும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிடுகிறது. நீதிமன்றங் களும் இந்த ‘ஆகமத் தீண்டாமை’களை ஏற்று, தீர்ப்புகளை வழங்குகின்றன. யாகம் நடத்த வேண்டுமா? கூப்பிடு “வேதப் பிராமணர்களை”; கும்பாபிஷேகமா? வேதப் பிராமணர்கள்தான் நடத்த வேண்டும்; அர்ச்சனையா? அதை செய்வதற்கு அவாளுக்கு மட்டுமே உரிமை! அவாள்கள் “பூ தேவர்கள்” மனிதர்களைவிட மேலானவர்கள் என்கிற போது, மனித உரிமை மீறல்கள் இவர்களிடம் எப்படி நெருங்கிட முடியும்?
ஆனால், சித்திரவதைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உள்ளாகும் ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’கள் பற்றி ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இதில் அய்.நா.வை இந்தியா எப்படி ஏமாற்றுகிறது என்பதை விளக்கி ‘டைம்ஸ்ஆப் இந்தியா’ நாளேடு (ஜன் 3) ஒரு செய்தி கட்டுரை வெளியிட்டுள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான அய்.நா.வின் சர்வதேச உடன்பாட்டை ஏற்றுக் கொள்வதாக இந்தியா கையெழுத்திட்டுள்ளது. உடனே இந்தியா வில் அதற்கான சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால், சித்திரவதைக்கு எதிரான சட்டம் இதுவரை இந்தியாவில் நிறைவேற்றப்படவில்லை. 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சித்திரவதைக்கு எதிரான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட முடியாமல், தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. மசோதாவில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தேர்வுக் குழு 2011 டிசம்பரில் பரிந்துரைகளை வழங்கிய பிறகும், மசோதாவில் உரிய திருத்தங்கள் கொண்டு வந்து சட்டமாக்க இந்திய அரசு முனைப்பு காட்டாமல் கிடப்பில் போட்டு விட்டது. உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் ‘பரிசீலனையில் இருக்கிறது’ என்ற வழமையான பதில்களே வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல காவலில் இருப்போர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோர், கொலை செய்யப்படு கிறார்கள். பிறகு ‘காணாமல் போய் விடுகிறார்கள்’ என்று அரசு சமாதானம் கூறுவதுதான் வழக்கம். இதைத் தடுப்பதற்கு “கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்படுவோரை” தடுப்பதற்கு அய்.நா. சர்வதேச பிரகடனத்தை உருவாக்கியுள்ளது. உலகத்தின் கண்களை ஏமாற்ற, அய்.நா.வில், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட இந்தியா, அதற்கான சட்டத்தையும் நாடாளுமன்றத்தில் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இனப்பாகுபாடுகள் காட்டுவதை அய்.நா. முழுமையாக தடை செய்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவில் ‘தீண்டாமை’யும், இனப்பாகுபாடுதான் என்பதை முதலில் ஏற்க மறுத்த இந்தியா, பிறகு, அய்.நா. அழுத்தத்தின் காரணமாக ஒப்புக் கொள்ள நேரிட்டது. இதன்படி இந்தியாவில் சாதி- சாதிபாகுபாடுகள் தொடர்பான விவரங்களை புள்ளி விவரங்களுடன் ஒவ்வொரு ஆண்டு அய்.நா. மனித உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்தியா இதிலும் துரோகம் செய்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் பற்றிய புள்ளி விவரங்கள் தயாராக இருக்கிறது என்று கூறுகிறது இந்திய அரசு. ஆனால், இவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக் கும் வன்கொடுமைகள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதே இல்லை. இது இந்திய அரசே சட்டத்தை மீறுவதாகும். காரணம், இந்தியாவில் நடைமுறை யிலுள்ள தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டமே ஒவ்வொரு ஆண்டும், இத்தகவல் களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தகவல்கள் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப் படவில்லை. அய்.நா.வுக்கும் அனுப்பப்படவில்லை. தீண்டாமை தடுப்புச் சட்டத்தை இந்திய அரசு இப்படித்தான் அலட்சியப்படுத்துகிறது.
அதேபோல், குழந்தைகளுக்கான வயது வரம்பு 18 என்று சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட் டிருந்தாலும் இந்தியாவில் 14 என்ற நிலையே உள்ளது. அதனால்தான் கட்டாயக் கல்விச் சட்டத்தில் குழந்தைகளுக்கான வயதை 14 என்றே நிர்ணயித் துள்ளனர். இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான தாகும். 14 வயதிலிருந்து 18 வயது வரை குழந்தைகளின் உரிமைகளை சட்ட ரீதியாக உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் தொழிலாளர்களாக உழைப்புச் சந்தையில் தள்ளப்படுகிறார்கள். இந்தியாவின் சமூக பொருளாதார நிலை இன்னும் உயரவில்லை என்று இதற்கு இந்திய அரசு சமாதானம் கூறுகிறது.
அதேபோல், “மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம்” செயல்படும் முறைகள் குறித்து மனித உரிமைக் குழுக்கள் போன்ற சிவில் சமூகத்தின் கண்காணிப்புக்கும் தணிக்கைக்கும் உட்படுத்தி அறிக்கைகள் சமர்ப்பிப்பதாக ஜெனிவா வில் நடந்த அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இந்தியா உறுதியளித்தது. ஆந்திர மாநிலத்தைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய ‘சமூக தணிக்கைகள்’ நிகழ்வதில்லை. அதற்கான சட்டமும் இல்லை. ஆனால், 91 சதவீத கிராம பஞ் சாயத்துகளில் சமூக தணிக்கை நடத்தி, 24,400 அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக இணைய தளத்தில் பொய்யான தகவல்களை ஏற்றி அய்.நா.வுக்கு அதை அனுப்பி வைத்திருக்கிறது இந்திய அரசு.
மேற்குறிப்பிட்ட அத்தனை பிரச்சினைகளும் ‘சூத்திரர்- பஞ்சமர்’ தொடர்பானவை. சித்திர வதைக்கோ, கட்டாய வேலை வாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்வதற்கோ, வன்கொடுமைக்கோ, காவலில் அடித்துக் கொலை செய்யப்படுவதற்கோ, குழந்தைத் தொழிலாளியாக உழைப்பதற்கோ – பார்ப்பனர்களோ, உயர்சாதிக் கூட்டமோ முன் வருவது இல்லை. வேத ‘பிராமணர்களுக்கு’ பூ தேவர்கள் என்ற உயர் மதிப்பு. சூத்திரர் பஞ்ச மருக்கோ மனிதர் என்ற அங்கீகாரம் கூட இல்லாமல் சட்டத்தையும் சர்வதேச நெறி முறைகளையும் தூக்கி எறிந்துவிட்டு செயல்படும் போக்கு இது ‘மனுதர்மம்’ அல்லவா?
பெரியார் முழக்கம் 21062012 இதழ்