நாமக்கல் மல்லசமுத்திரம் ஒன்றிய கழக துவக்க விழா
7.5.2012 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணிக்கு நாமக்கல் மாவட்டம் மல்ல சமுத்திரத்தில் ஒன்றிய பெரியார் திராவிடர் கழக துவக்கவிழா மற்றும் பெரியாரியல் விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் தலைமையேற்றார். தோழர்கள் கோபி, சங்கர், தீனா, அன்பழகன், ம.தி.மு.க.வை சார்ந்த வைகோ கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட செயலாளர் சாமிநாதன், இளம்பிள்ளை கோகுல கண்ணன் ஆகியோர் உரைகளை தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். சிற்பிராசன் நிகழ்ச்சியின் துவக்கத்திலும், தோழர் களின் உரைகளுக்கு இடையேயும் ‘மந்திரமா, தந்திரமா’ அறிவியல் விளக்க நிகழ்ச்சிகளை நடத்தினார்.
சில மாதங்களுக்கு முன்பு முதல் கலந்துரையாடல் கூட்டம் கூட்டி, அதில் முடிவு செய்யப்பட்ட தீர்மானத்தின்படி இந்த துவக்க விழா பொதுக் கூட்டத்தை தோழர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பேருந்து நிலையம் முதல் பொதுக் கூட்ட மேடை வரை சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு கொடிகளை கட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாயாவி நன்றி கூறினார். ரமேஷ், மகேஷ், குட்டி, சென்னிமலை, மோகன் ஆகியோருடன் இணைந்து கண்ணன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார். திருச்செங் கோடு, குமாரபாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து தோழர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அதே போல இளம்பிள்ளை, சேலம் நகரம் ஆகிய பகுதிகளில் இருந்தும் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு அசைவ உணவு வழங்கப்பட்டது.
‘குடிஅரசு’ வாசகர் வட்டத்தில் வந்தியதேவன்
13.5.2012 அன்று வடசென்னை பெரம்பூரில் இராஜலட்சுமி அரங்கத்தில் குடிஅரசு வாசகர் வட்டத்தின் சார்பாக ம.தி.மு.க. வெளியிட்டு அணி செயலாளர் ஆ.வந்தியதேவன், ‘நீதிக்கட்சியின் அளப் பரியா சாதனைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு சொற் பொழிவு நிகழ்த்தினார். மா.வேழவேந்தன் தலைமை யேற்க, ஓவியர் கிருபா வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞா குமாரதேவன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிறைவாக சி.பாஸ்கர் நன்றி கூறினார். வாசகர் வட்டத்தின் சார்பாக ம.தி.மு.க. வெளியீட்டு அணி செயலாளருக்கு கேடயமும், பொன்னாடை யும் வழங்கப்பட்டது. பெருமளவில் தோழர்கள் திரண்டிருந்தனர்.
இளம்பிள்ளையில் திராவிடர் இயக்க நூற்றாண்டுவிழா
16.5.2012 புதன் கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே, கழகம் சார்பாக, திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா மற்றும் மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டம் நடை பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப் புரையாற்றினார். புதுகை பூபாளம் கலைக் குழு வினரின் பகுத்தறிவு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பெரியார் முழக்கம் 14062012 இதழ்