பள்ளிக் குழந்தைகள் முடியை வெட்டும் மனுதர்ம வெறி
சூத்திரனுக்குகல்வியைத் தரக் கூடாது என்று மனுதர்மம் கூறுவதற்கு எதிராக வந்ததுதான் கட்டாயக் கல்வி சட்டம் என்று திருப்பூரில் நடந்த சாதி ஒழிப்பு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. 6 வயது முதல் 14 வயது வரை அனைவருக்கும் கல்வியை கட்டாயமாக்கும் இந்தச் சட்டம், தனியார் பள்ளிகள் 25 சதவீதம் ஏழைக் குழந்தைகளை கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பிரிவைக் கடுமையாக எதிர்க்கின்றன. பெங்களூரிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி அதிர்ச்சி யளிக்கிறது.
பெங்களூரில், ‘நந்தினி லே அவுட்’ பகுதியிலுள்ள ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட இந்த ஏழைக் குழந்தைகள், மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட, அவர்களின் தலைமுடியை வெட்டியுள்ளனர். வகுப்பறையிலும் அவர்களுக்கு கடைசி இடத்தில்தான் இடம். அவர்கள் கொண்டு வரப்படுகிற உணவு டப்பாக்கள், பள்ளி நுழைவு வாயிலில் சோதனையிடப்படுகின்றன. பள்ளி வருகைப் பதிவேட்டிலேயே இவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை. கட்டணம் செலுத்திப் படிக்காத ஏழை ஒடுக்கப்பட்ட குழந்தைகள் தானே அவர்கள் எப்படிப் போனால் என்ன என்ற பார்ப்பனிய சிந்தனையே இதற்குக் காரணம்.
இது ஏதோ, இந்த ஒரு பள்ளியில் மட்டுமல்ல; பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இதுதான் நிலை. தங்கள் பள்ளிகளில் படிக்க வரும் வசதிப் படைத்த உயர்குடிப் பிறப்புக் குழந்தைகளோடு இந்த எழை ஒடுக்கப்பட்ட குழந்தைகளும் எப்படி ஒன்றாக படிப்பது? அது சமுதாயத் தகுதிக்கும், கல்வித் தகுதிக்கும் உகந்தது தானா? என்ற மனு தர்மப் பார்வைதான் இதற்கான அடிப்படைக் காரணம். ‘தலித் சம்ராஜ்ய ஸ்தாவன சமிதி’ என்ற தலித் அமைப்பு, இந்த ‘மனுவெறி’ நடவடிக்கையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த 25 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றம் வரை போய் எதிர்த்து தோல்வியே கண்டார்கள்.
இந்தக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே மான்யமாக வழங்க முன் வந்துள்ளபோதும், சேரிக் குழந்தைகளும், ஏழைக் குழந்தைகளும், அடுக்குமாடி அக்கிரகாரக் குழந்தைகளுடன் எப்படி சமமாக ஒரே வகுப்பில் படிக்க முடியும் என்ற மனுதர்ம சிந்தனையே 2012 இல் அரசு சட்டத்தை மீறியும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை புறந் தள்ளியும் பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ‘மனுதர்ம’ சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க வேண்டுமா? வேண்டாமா?
பெரியார் முழக்கம் 26072012 இதழ்