உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பு கோயில்களுக்கும் தகவல் உரிமை பெறும் சட்டம் பொருந்தும்
இந்து கோயில்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரக்கூடியவையே என்றும் இது தொடர்பாக இந்து அறநிலையத் துறை பிறப்பித்த சுற்றறிக்கை செல்லத்தக்கதே என்றும் உயர்நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு மற்றொரு சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளார். “கோயில்களில் நடக்கும் செயல்பாடுகளை ரகசியமாக்கிவிட்டால்,கோயில் நிர்வாகம் சீரழிந்துவிடும். கோயிலில் நடக்கும் செயல்பாடுகள் தனி நபர் தொடர்புடையது என்று கருதிட முடியாது. கோயில் ஒரு பொது நிறுவனம். பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் மட்டுமே கோயில் பொது நிறுவனம் இல்லை என்றாகிவிடாது. கோயில்கள் அனைத்தும் அறநிலையத் துறையின் கீழ் திட்டவட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு அரசுப் பணமும் ஒதுக்கப்படுகிறது. கோயில் சடங்குகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொது மக்களிட மிருந்து நன்கொடைகள் திரட்டப்படுகின்றன. இந்த நிலையில் கோயில்களும் தகவல் உரிமை சட்டத்துக்குக் கட்டுப்பட்டவையே” என்று நீதிபதி கே.சந்துரு தீர்ப்பில் கூறியுள்ளார்.
சென்னை வடபழனியிலுள்ள வெங்கீசுவரர் அழகர் பெருமாள் மற்றும் நாகாத்தம்மாள் கோயில் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக உள்ள பிரேம் ஆனந்த் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். இந்து அறநிலையத் துறை கோயிலுக்கு தகவல் தரும் அதிகாரி நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இது. கோயில்கள் ஒரு நிர்வாக அமைப்போ அல்லது பொது நிறுவனமோ அல்ல என்று அவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.
நமது கருத்து:
“தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ரா தீணம்து தெய்வதம்
தன்மந்த்ரம் பிராமண தீனம்
பிராமணோ மம தேவதாவநா’
– என்று ரிக்வேதம் 62வது பிரிவு 10வது சுலோகம்
இதன் பொருள்: “இந்த உலகம் முழுதும் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங் களுக்குக் கட்டுப்பட்டது. மந்திரம் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது” என்பதாகும்.
இப்படி மந்திரங்களுக்கும் ‘பிராமணர்’களுக்கும் கட்டுப்பட்ட கடவுள் உள்ள கோயில்கள் தகவல் உரிமை பெறும் சட்டத்துக்குக் கட்டுப்பட முடியாது என்ற அடிப்படையிலேயே இந்த அறங்காவலர் வழக்கைத் தொடர்ந்தார்.
கோயில்கள் பார்ப்பனர்களுக்கும் மந்திரங்களுக் கும் கட்டுப்பட்டவை என்று கூறிக் கொண்டாலும் அரசுப் பணத்திலும் பொது மக்கள் நன்கொடை யிலும் நடைபெறும் பொது நிறுவனம் என்பதால் கோயில் பற்றிய தகவல்களைக் கேட்க விரும்பும் எவருக்கும் தகவல் தந்தாக வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தீர்ப்பு உணர்த்துகிறது.
எனவே, இத் தீர்ப்பு வேதங்களுக்கும் வேதங்களின் அடிப்படையில் விதிகளையும் தண்டனைகளையும் எழுதி வைத்துள்ள மனுதர்மத்துக்கும் எதிரான தீர்ப்பாகும்.
மனுதர்மத்தைக் காப்பாற்றவே பார்ப்பனர்கள் இப்போதும் துடிக்கிறார்கள் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு சான்று!
பெரியார் முழக்கம் 21062012 இதழ்