8 நாட்கள் 84 பகுதிகளில் மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம்

மரணதண்டனைக்கு எதிராக வடாற்காடு மாவட்டம் சோலையார் பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தொகுதிகளில் உள்ள 84 ஊர்களில் பரப்புரைப் பயணம் நடந்தது. பிப்.15 இல் தொடங்கி பிப். 22 வரை 8 நாட்கள் நடந்த பரப்புரை பயணத்தில் மூன்று தமிழர் தூக்குத் தண்டனைக்கு எதிராக முன் வைத்த கருத்துகளை நியாயங்களை பல்லாயிரக்கணக்கான மக்கள் செவிமெடுத்தனர். பரப்புரைப் பயணம் பற்றிய செய்தித் தொகுப்பு:

தோழர்கள் சிவலிங்கம் மற்றும் குட்டிமணி (பா.ம.க. ஒன்றிய செயலாளர்) ஆகியோர் வழிகாட்டுதலில் எட்டு நாட்கள் தெருமுனைப் பிரச்சாரப் பயணம் திருப்பத்தூர், சோலையார்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய நான்கு தொகுதிகளில் பல்வேறு சிற்றூர், பேரூர் மற்றும் நகரங்களில் சிறப்பாக நடந்து முடிந்தது.

குமரேசன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் நிதியும், கே.சி.காமராஜ் திருமண மண்டபமும், வ.கி.அருணா மகிழுந்தும், ப.அன்பழகன் (தி.மு.க.) ஓய்விட அறையும் கொடுத்துதவினர்.

உணவு வழங்கியோர்: வ. கண்ணதாசன் (ம.தி.மு.க.), திருப்பத்தூர்அய்யம்பேட்டை பாலு (விடுதலை சிறுத்தைகள்), சா.பெரியார்தாசன் (அ.இ.அ.தி.மு.க.), கந்திலி அன்பு (அ.இ.தி.மு.க.), நாட்டறம்பள்ளி மலர் காமராஜ் (ஓய்வு, தமிழாசிரியர்), சோலையார்பேட்டை இல.குமரன், இன உணர்வாளர்கள் பெரிய மோட்டூர் சின்னத்தம்பி, சோலை சின்னக்கோடியூர், த. இளங்கோ, பூங்குளம் வேலரசு (திராவிட தமிழர் இயக்கம்), கே.டி.எஸ். சிவபிரகாசம் (தே.கா.க.), வாணியம்பாடி என். ஜெயசந்திரன் (நாம் தமிழர் கட்சி), வாணியம்பாடி உதயேந்திரம், தங்கப் பிரகாசம் (இன உணர்வாளர்), ஆம்பூர் ரவிக்குமார் (ம.தி.மு.க.), பள்ளிகொண்டா சுமதி ஆகியோர். பொது மக்கள் பலர் ஆங்காங்கு பிஸ்கட், பழம், தேநீர் முதலானவற்றைக் கொடுத்து மகிழ்வித்தனர்.

15.2.12 புதன் முற்பகல் சோலையார்பேட்டை பேருந்து நிறுத்தத்திலுள்ள தந்தை பெரியார், கடமைவீரர் காமராசர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மலர் மாலை அணிவிக்கப் பெற்றுப் பரப்புரை துவங்கியது.

காஞ்சி மக்கள் மன்றத் தோழர் பாலு தலைமையில் பறையடித்து முழக்கம் எழுப்பினர். சந்தனக்காடு புகழ் இயக்குநர் கவுதமன், பா.ம.க. மாவட்டத் தலைவர் பொறியாளர் பொன்னுசாமி, பெரியார் திராவிடர் கழக காஞ்சி மாவட்ட செயலாளர், பரப்புரைக் குழுத் தலைவர் டேவிட் பெரியார், வழக்கறிஞர் தேன்மொழி, திருமலை (நாம் தமிழர் கட்சி), கலைமதி, மகேந்திரவர்மன் இமயம் சரவணன், சோலைப்பிரியன் (திராவிடத் தமிழர் இயக்கம்) முதலான பரப்புரைக் குழுவினரும் சோலையார் பேட்டைத் தொகுதி ஊர்களில் பரப்புரை நிகழ்த்தினர்.

எந்தவித முன் விளம்பரமும் செய்யாமலேயே இந்த முயற்சி வெற்றியைத் தந்தது குறிப்பிடத்தக்கது.

16.2.2012 வியாழன் அன்று, திருப்பத்தூர் பகுதிகளில் நடந்த பரப்புரையில் டி.கே.ராஜா, சுபாஷ் சந்திர போஸ் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), பேராசிரியர் பார்த்திப ராஜா ஆகியோர் உரை யாற்றினர். சமர்பா குமரன் இசைப் பாடல் பாடினார்.

பிப். 17, 18 தேதிகளில் வாணியம்பாடி பகுதியிலும், பிப்.19 அன்று – சோலையார்பேட்டை பகுதிகளிலும்,  பிப்.20, 21, 22 தேதிகளில் ஆம்பூர் பகுதிகளிலும் பரப்புரை நடந்தது.

வெள்ளக்குட்டை கஜேந்திரன் (சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட அமைப்பாளர்), கவிஞர் தமிழேந்தி (மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி), வேங்கடேசன் (பா.ம.க.), தனபால் (விவசாய சங்கத் தலைவர்), பிரதாபன் (புரட்சிகர விடுதலை முன்னணி), சௌந்தர் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), கிருஷ்ணமூர்த்தி (பா.ம.க.), பேராசிரியர் அப்துல்லா (எ) பெரியார் தாசன் அஸ்லாம் பாஷா, ச.ம.உ.  (மனித நேய மக்கள் கட்சி), ரவிக்குமார் (ம.தி.மு.க.), சாமுவேல் செல்லபாண்டியன் (பா.ம.க.), ரவி (ம.தி.மு.க.), தினேஷ் (நாம் தமிழர் கட்சி) முதலானோர் கருத்துரையாற்றினர். பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மையார் வந்திருந்தார்.

பரப்புரைக் குழு

பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சென்னை டேவிட் பெரியார் தலைமையில் சேகர், சிபி, செல்வம், கலைமதி, இமயம் சரவணன், நாத்திகன், நாம் தமிழர் கட்சி பாக்ஸர் பாஸ்கர், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் மகேந்திரவர்மன், பாலு, ரஜினி, பால்பாண்டியன், முருகன், கடாபி, செந்தாமரை, ஓட்டுநர் சுகுமார் ஆகியோர் சிறப்பாக எல்லா இடங்களிலும் பரப்புரையாற்றினர்.

துண்டு அறிக்கைகளையும், தூக்குத் தண்டனையை நீக்கக் கோரும் “தவறிய அழைப்பு” (மிஸ்டு கால்) (9282221212) எண்ணுடன் கூடிய நாட்காட்டியும் கூடியிருந்த மக்களுக்குக் கொடுத்து, அந்த எண்ணுக்கு தவறிய அழைப்பு அனுப்பக் கேட்டுக் கொண்டனர். பேரறிவாளன், ராபர்ட் பயாஸ் மற்றும் முருகன் எழுதிய நூல்கள், ஈகி செங்கொடி பற்றிய நூல், ஒலிப்பதிவு வட்டு ஆகியன விற்கும் தொண்டில் சிலரும் உண்டியல் ஏந்திடும் தொண்டில் சிலரும் ஈடுபட்டனர்.

சோலையார்பேட்டை வ.கி.அருணா, புலவர் பூபதி (தமிழாசிரியர், ஓய்வு), வ.கண்ணதாசன் (ம.தி.மு.க.), ஆஞ்சி (தே.மு.தி.க.), கே.டி.காமராஜ், கார்த்திகேயன், எரான்ராஜ், சோலை சிவா, திருப்பத்தூர் பாலு, கோகுல் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வாணியம்பாடி நாம் தமிழர் கட்சி ஜெயசந்திரன், மேகநாதன், அருள்செல்வன், மோகன், ஆம்பூர் பன்னீர்செல்வம், ஆம்பூர் ரவி (தி.க.), ஏலகிரி சந்திரசேகரன் (பா.ம.க.), திருப்பத்தூர் நாம் தமிழர் கட்சியினராகிய சக்கரவர்த்தி, பெரியார் செல்வம், லெனின் மறவன் (திராவிடர் தமிழர் இயக்கம்) ஆகியோர் உதவிகளை நல்கினர்.

பரப்புரைக்கான வேன், பல்வேறு வண்ணங்களில் மரண தண்டனைக்கு எதிராக காந்தியார், அம்பேத்கார் வி.ஆர். கிருஷ்ணய்யர் சொன்ன கருத்துகளையும், தமிழர் மூவர் உயிரைக் காக்க தீயினுக்கு இறையான ஈகி செங்கொடியின் உருவப் படத்தை முகப்புக் கண்ணாடியிலும், தூக்கு மேடையில் நிற்க வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களின் படங்களையும் பதித்திருந்த புதுவிதமான வண்டியின் காட்சி மக்களை ஈர்த்துப் படிக்கச் செய்தது.

இதுநாள்வரை உண்மை அறியா மக்கள் உண்மையை அறிந்து வியந்தனர். உடனே செல்பேசியில் ‘தவறிய அழைப்பு’ (மிஸ்டு கால்) செய்தனர். எட்டு நாட்களில் சற்றொப்ப 9000 அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளது கண்டு பரப்புரைக் குழுவினர் உற்சாகம் பெற்றனர். ஆதரவாளர்கள் மகிழ்ந்தனர். இந்தப் பணியைத் தொடர மேலும் ஊக்கம் பெற்றனர். முனைப்புடன் அடுத்த மாவட்டங்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

 

பெரியார் முழக்கம் 15032012 இதழ்

You may also like...