புள்ளி விவரங்களுடன் வழக்கறிஞர் துரைசாமி விளக்கம்: வரலாற்றுப் போக்கை மாற்றியமைத்த திராவிடர் இயக்கம்

திராவிடர் இயக்கம் வந்த பிறகு தான் தமிழன் தலைநிமிர்ந்தான்; தன்மானம் பெற்றான் என்று வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, வரலாறுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். 24.3.2012 அன்று பெரம்பூர் ராஜலட்சுமி அரங்கில் ‘குடிஅரசு’ வாசகர் வட்ட தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

1925 ஆம் ஆண்டு பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்தார்.

இவ்வியக்கம் ஆரம்ப காலத்தில் நம் நிலை எப்படி இருந்தது? ஹிட்லர், ஜெர்மன், யூதர்களிடம் கொண் டுள்ள மனப்பான்மைக்குக் காரணங்கள் என்ன வென்று அவர் சொல்லுகின்றாரோ, அவைகளும், அவைகளுக்கு மேற்பட்ட காரணங்களுமே இங்கே நம் மாபெருந்தலைவர்கள் இவ்வியக்கத்தை ஆரம்பிப்பதற்குக் காரணங்களாயிருந்தன.

கல்வி

1915 ஆம் ஆண்டில், நம் இயக்கம் ஆரம்பிக்கப்படு முன் கல்வித் துறையில் பார்ப்பனரல்லாத மக்கள் எந்நிலையிலிருந்தார்கள் என்பதைச் சிறிது கவனிப் போம்.

கல்வித் துறை நிர்வாகத்தில் மொத்தம் 518 பதவி களில் 400 பதவிகள் பார்ப்பனர்கள் கையிலிருந்தன. 73 பதவிகளை ஆங்கிலே இந்தியர்கள், யூரேஷியர்கள், கிறிஸ்தவர் இம்மூன்று வகுப்பினரும் 28 பதவிகளை முஸ்லீம்களும் வகித்து வந்தனர். வகுப்புவாதம் பேசுவதாகச் சொல்லப்படும் நமக்கு, அதாவது பார்ப்பனரல்லாத இந்துக்கள் என்பவர்களுக்கு 18 உபபதவிகளே இருந்தன. 400 எங்கே? 18 எங்கே?

ஜெர்மனியில் அப்பொழுது யூதர்கள் நம் நாட்டுச் சிறு கூட்டத்தாரைப்போல இவ்வளவு அதிகப் படியான பதவிகளைக் கைபற்றி இருந்திருப்பார்களா என்பது எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.

நம் இயக்கம் தோன்றிய காலத்தில் இந்நாட்டில் 100-க்கு 7 பேரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். அந்த எழுதப் படிக்கத் தெரிந்த மக்களில் 100-க்கு 90 பேருக்கு மேல் பார்ப்பனர்களே. படித்த இந்தியரில் பார்ப் பனரல்லாத இந்துக்கள் தொகை 100-க்கு 5-க்கு மேல் இருந்திருக்க முடியாது. நூற்றுக்கு தொண்ணூறு எங்கே? அய்ந்தெங்கே?

ஆனால், கல்வித் திறமையிலோ பார்ப்பனரல்லாத மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு சளைக்காமலே இருந்து வந்திருக்கின்றார்கள்.

1915 ஆம் வருடத்திய சென்னைப் பல்கலைக்கழக அறிக்கைப்படி 1914 ஆம் ஆண்டில் இன்டர்மீடியட் தேர்வுக்கு அனுப்பப்பட்ட 1900 பார்ப்பனப் பிள்ளை களில் 775 பேர் தேறியிருக்கின்றார்கள். பி.ஏ. தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் 469 பார்ப்பனப் பிள்ளைகளில் 210 பேர் தேறியிருந்தால், 133 பார்ப்பனரல்லாத இந்து மாணவர்களில் 60 பேர் தேறியிருக்கின்றனர்.

பி.ஏ. விஞ்ஞான தேர்வில் 442 பார்ப்பனப் பிள்ளை களில் 159 பேர் தேறியிருந்தால் பார்ப்பனரல்லாத இந்து பிள்ளைகளில் 107-க்கு 49 பேர்கள் தேறியிருக் கிறார்கள். பி.ஏ. (புதிது) முதல் பகுதியில் (பார்ட் 1) 460-க்கு 270 பார்ப்பனப் பிள்ளைகளும், 108க்கு 64 நம் சமூகப் பிள்ளைகளும் தேறியிருக்கின்றனர். இரண்டாவது பகுதியில் (பார்ட் 2), 426 பார்ப்பனப் பிள்ளைகளில் 203 பேரும், 117 பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு 63 பேரும் தேறியிருக்கிறார்கள்.

எம்.ஏ. தேர்வுக்கு அனுப்பப்பட்ட 157 பார்ப்பனப் பிள்ளைகளுள் 67 பேரும், பார்ப்பனரல்லாத 20 மாணவர்களில் 9 பேரும் தேறியிருக்கின்றனர்.

பி.ஏ., எல்.டி. என்ற ஆசிரியர் படிப்புக்குச் சென்ற 104 பார்ப்பனப் பிள்ளைகளில் 65 பேர் தேறியிருந்தால் நமது சமூக மாணவர்கள் 11 பேரில் 10 பேர் தேறியிருக்கிறார்கள்.

தேர்வுத்தாள் திருத்துபவர்கள் எல்லோரும் அநேகமாக பார்ப்பனர்களாகவே இருந்தும், கல்வித் துறை அவர்கள் கையிலிருந்தும் நம் மாணவர்கள் பார்ப்பன மாணவர்களுக்கு மேலாகவே அந்த தேர்வுகளில் தேறியிருப்பது கவனிக்கத்தக்கது.

பார்ப்பனப் பிள்ளைகள் 100 பேர் ஒரு தேர்வுக்கு அனுப்பப்பட்டால் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் அதில் 4 இல் ஒரு பங்குக்குக் குறைவாகவும், சில தேர்வுகளுக்கு 100-க்கு 10 விகிதத்துக்குக்கூட குறை வாகவுமே தான் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள்.

பதவிகள்

1916 ஆம் ஆண்டில் “புரொவின்ஷியல் சிவில் சர்வீஸ்” என்னும் உயர்தர நிர்வாக பதவியில் மக்கள் தொகையில் 100க்கு 3 பேர் எண்ணிக்கைக் கொண்ட பார்ப்பனர்களில் 100 பதவிகளில் இருந்திருக்கிறார் கள். ஆனால், அதே சமயத்தில் அப்பதவியில் இருந்த பார்ப்பனரல்லாதவர்கள் 29 பேரே ஆவார்கள்.

நீதித் துறையில் 190 பார்ப்பனர்கள் பதவி வகித்திருக்கிறார்கள். பார்ப்பனரல்லாதவர்களில் 39 பேர்தான் பதவி வகித்து இருந்தார்கள்.

திராவிட இயக்கத்தினால் ஏற்பட்ட மறுமலர்ச்சி என்ன?

தமிழன் தாழ்த்தப்பட்ட நிலை மாறி அரசியல் – பொருளாதாரம் – கல்வி – சமுதாயம் ஆகிய எல்லாவற்றிலும் முன்னேற்றம் காண முடிந்தது.

திராவிட இயக்கம் தோன்று முன்:

  1. கல்வி மறுக்கப்பட்டது
  2. அரசு பதவி கிடையாது
  3. சமூக அந்தஸ்து கிடையாது
  4. பொருளாதார வசதி கிடையாது
  5. மொழி உரிமை கிடையாது
  6. 1916க்கு முன் சட்டசபையில் தமிழனுக்கு இடமில்லை
  7. கல்லூரிகளில் இடமில்லை.
  8. நிர்வாகத் துறை முழுக்க பார்ப்பன மயம்
  9. நீதித் துறையில் பார்ப்பனரல்லாதாருக்கு இடம் கிடையாது
  10. காவல் துறையில் பெரிய பதவிகள் எல்லாம் பார்ப்பனர் கையில். எடுபிடி வேலைகள் மட்டும் தமிழன் கையில்.
  11. தொழிற்துறையும் பார்ப்பனர் ஆதிக்கத்தில்.

50 ஆண்டுகாலப் போராட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டது. மேல் ஜாதி ஆணவம் அழிந்த. தனி மனிதனின் உரிமை, மொழி உரிமை காப்பாற்றப்பட்டது.

1921 ஆம் ஆண்டு டாக்டர் நடேசனின் தீர்மானப் படி தலைமை செயலகத்தில் 100க்கு 100 பார்ப்பனர் மயமாக இருந்தது. இன்று ஐ.ஏ.எஸ். பதவிகளைத் தவிர 100க்கு 90 பேர் தமிழர்கள். நீதித் துறையில் 53 பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் மட்டுமே பார்ப்பனர்.

இதுதான் வரலாற்றுத் திருப்பம்!

1960 ஆம் ஆண்டு 12 பேர் மட்டுமே இருந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 10 பேர் பார்ப்பனர். அதாவது 90 சதவீதம்.

அதேபோல் தான் மருத்துவத் துறையில் சமஸ்கிருதம் படித்தவன் மட்டுமே டாக்டர் ஆகக் கூடும் என்ற நிலை மாறி இன்று மருத்துவத் துறையில் முழு ஆதிக்கமும் தமிழர்களே.

திராவிடர் இயக்கம் – சமூகத்தைப் புரட்டி போட்டது என்பது வரலாறு. இந்த உண்மைகளை மறைத்துவிட்டு திரிபுவாதம் பேசுவோரை வரலாறு மன்னிக்காது.                                          (நிறைவு)

பெரியார் முழக்கம் 19072012 இதழ்

You may also like...