‘வருண பகவானு’க்கு பூசை போட ரூ.17 கோடியை விரயமாக்கும் கருநாடக பா.ஜ.க. ஆட்சி

கருநாடக பா.ஜ.க. – குடுமி பிடிச் சண்டையில் முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது முதல்வராக வந்திருப்பவர் ஜெகதீஷ் ஷட்டர். இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்று ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ‘இந்துத்துவ நாத்திகர்’ ஆட்சி, தமது மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மாநிலம் முழுதும் உள்ள 34,000 கோயில்களிலும் ‘வருண ஜெபம்’ நடத்த உத்தரவு போட்டுள்ளது. பார்ப்பனர்களைக் கொண்டு பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்தப் போகிறதாம். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.17 கோடி. வறட்சி நிவாரணத்துக்காக நிதி கேட்டு மத்திய அரசு கதவுகளைத் தட்டிக் கொண்டே 17 கோடியை வீண்விரயமாக்குகிறது பா.ஜ.க. ஆட்சி. அரசின் இந்த நடவடிக்கையை சட்டமன்றத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சார்ந்த சி.எஸ்.புட்டே கவுடா, மகாதேவ பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், துறை அமைச்சராக உள்ள கோட்டா சீனிவாஸ் பூசாரி என்பவர், “நான கடவுளை நம்புகிறேன். வருண பகவானை வேண்டினால் மழை வரும். இந்த முடிவை அரசு திரும்பப் பெறாது” என்று கூறியுள்ளார். ‘மனுதர்ம’ம்தான் பா.ஜ.க வழியாக ஆட்சி நடத்துகிறது!

பெரியார் முழக்கம் 26072012 இதழ்

You may also like...