இந்தியாவில் நடப்பது – மதத்துக்கான அரசு!
இஸ்லாம் மதத்தை விமர்சித்து நூல் எழுதியதற்காகவே சாலமன் ருஷ்டி, மதப் பயங்கரவாதிகளின் கோபத்துக்கு உள்ளானார். 20 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய ‘சாத்தானின் வேதங்கள்’ என்ற நூலுக்கு முஸ்லீம் மதவாதிகளிடம் கடும் எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கு வருத்தமும் தெரிவித்துக் கொண்டார். அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தின் இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்கவிருந்த அவர், விழாவில் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டார். அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறை வழியாக ஒரு பொய்க் கதையை உருவாக்கி தடுத்து விட்டார். உ.பி.யில் நடைபெறவிருக்கும் தேர்தலில் முஸ்லீம்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே இப்படி ஒரு கபட நாடகத்தை காங்கிரசார் ஆடியிருப்பதாக ஊட கங்கள் குற்றம்சாட்டுகின்றன. மதங்களை விமர் சிக்கவே கூடாது என்ற மதவெறியை பகுத்தறி வாளர்களும், கருத்துரிமையை மதிப்போரும் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். இது தொடர்பாக ‘இந்து’ நாளேட்டில் வெளிவந்த கட்டுரை ஒன்று இந்தியா – மதச்சார்பு நாடாக படிப்படியாக மாறி வருகிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறது. இந்திய அரசு ‘கடவுளை’ பொதுத்துறை நிறுவனமாக மாற்றி வருவதாக அக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
கட்டுரையில் இடம் பெற்ற சில முக்கிய கருத்துக்கள்:
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கும்ப மேளாவுக்கு அரசுப் பணம் வீண்விரயமாக்கப் படுகிறது. 2001 ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த ‘கும்பமேளா’ (கங்கையில் முழுக்குப் போடும் நிகழ்ச்சி)வுக்கு மாநில அரசு செலவிட்ட தொகை ரூ.1.2 மில்லியன். 2013 ஆம் ஆண்டு வரவிருக்கும் கும்பமேளாவுக்கு உ.பி. காவல்துறை – 2.26 பில்லியன் ரூபாயை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்குமாறு மாநில அரசுக்கு திட்டங்களை தந்துள்ளது. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முஸ்லீம்கள், பாகிஸ்தானிலுள்ள குருத்வராவுக்கு பயணிக்கும் சீக்கியர்களுக்கு அரசு உதவித் தொகைகளை வழங்குகிறது. இந்துக்களுக்கும், அமர்நாத் போவதற்கும் ‘கைலாசமலை’ புனிதப் பயணத்துக்கும் பெரும் தொகையை வாரி வழங்குகிறது. உயர்கல்விக்காக ஒதுக்கப்படும் தொகையில், போலி அறிவியலான ‘சோதிடத்தை’ பயிற்றுவிப்பதற்கும் செலவிடப்படுகிறது. குஜராத் ஆட்சி, கோயில் அர்ச்சகர்களுக்கும் அரசுப் பணத்திலிருந்து ஊதியம் வழங்குகிறது.
அரசுப் பணத்தில் ‘கடவுள் பக்தியை’ வளர்க்கும் திட்டங்கள் தொடர்ந்து அமுல்படுத்துவதாக டில்லி மாநில ஆட்சி அதன் 2006 ஆம் ஆண்டு நிதிநிலை ஆய்வறிக்கையில் ஒப்புக் கொண்டது. கலாச்சாரம், பொழுது போக்கு, மதம் தொடர்பான நிகழ்வு களுக்கு டெல்லி மாநில ஆட்சி 2003-2004 இல்
526.5 மில்லியன் ரூபாய் செலவிட்டது. 2006-2007 இல் இது ரூ.751 மில்லியனாக உயர்ந்தது. மதங்களை விமர்சிக்கும் நூல்களுக்கு தடை போடுகிறார்கள். சாலமன் ருஷ்டியின் “சாத்தானின் வேதங்கள்”, மேனன் எழுதிய ‘இராமாயணத்தின் மறுவாசிப்பு’, டி.என்.ஜா எழுதிய ‘புனிதப் பசு’, ஜேம்ஸ் லேய்ன் எழுதிய ‘சிவாஜியின் சரித்திரம்’, பவுல் கோர்ட்ரைட் தொகுத்த ‘இந்து தொன்மங்கள்’ போன்ற நூல்கள், அரசால் தடைபடுத்தப்பட்டன. அல்லது திரும்பப் பெறப்பட்டன. உணவிலும் அரசு மதத்துக்காக குறுக்கிடுகிறது. மாட்டுக்கறி உண்பதை குற்றம் என்கிறார்கள். மது அருந்துவதை தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். பொது மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பள்ளிகளில் மாணவர்கள் மீது கட்டாய இறைவணக்கம் திணிக்கப்படுகிறது. அரசு விழாக்களில் இறைவணக்கம் பாடப்படுகிறது. அதை ஊக்கப்படுத்துகிறார்கள்.
கடவுளின் தரகர்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் உரிமைகளை தாங்களே கையில் எடுத்துக்கொள்கிறார்கள். கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படும் ஷரியத் நீதிமன்றம், கிறிஸ்தவ பாதியார்களை மாநிலத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றமோ அரசியல் கட்சிகளோ, காவல்துறையோ, இதைத் தட்டிக் கேட்கவில்லை. பல வட இந்திய மாநிலங்களில் உள்ளூர் ஆதிக்கசாதியினரும், மதவெறியர்களும் சாதி மத மீறல்களை செய்வோருக்கு கடும் தண்டனை விதித்து வருகிறார்கள். இப்படி சட்டங்களை அவர்களே கையில் எடுத்துக் கொள்வதை அரசு தட்டிக் கேட்பதில்லை. 2010 ஆம்ஆண்டில் பில்லி சூன்ய நம்பிக்கைகளால் கொல்லப்பட்டவர்கள் 178 பேர். அரசின் ‘குற்றவியல் புள்ளி விவர மய்யம்’ இதை தெரிவிக்கிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற கொள்கையிலிருந்து விலகிப் போய் மதச்சார்பு நாடாக மாறி வருகிறது என்ற கருத்துகளை இக்கட்டுரை பதிவு செய்துள்ளது. (‘இந்து’21.1.2012)
இது தவிர வேறு பல செய்திகளும் உண்டு. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடலாம் என்றும், அது தமிழர்களின் பண்பாடு என்றும் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும். ஆயுத பூஜைகளை தடை செய்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் அரசாணைகளை வலியுறுத்தி இதே உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ம.பி. மாநிலத்தில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ‘சூரிய நமஸ்காரம்’ செய்வதைக் கட்டாயப்படுத்து கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சி இந்து பஞ்சாங்க அடிப்படையில் பின்பற்றப்பட்டு வரும் “தமிழ்ப் புத்தாண்டே” உண்மையான தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்து, தமிழ் அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற கருத்தை நிராகரித்து விட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமரும் ‘ராமலீலா’ மைதானத்தில் நடக்கும் ‘ராமலீலா’வில் பங்கேற்கிறார்கள் திராவிடர்கள் மதித்துப் போற்றும் இராவணன், மேகநாதன், கும்பகர்ணனை எரிக்கும் விழாவில் பங்கேற்று, இந்து பார்ப்பனிய மேலாண் மைக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே பகுத்தறிவுப் பரப்புரைகளுக்கு தடை போடுகிறார்கள். காவல்துறை கடும் நெருக்கடிகளை செய்கிறது. பெரியார் பிறந்த தமிழ் மண்ணிலேயே இந்த நிலை வரத் தொடங்கிவிட்டது என்பதுதான் அவலம்!
பெரியார் முழக்கம் 02022012 இதழ்