தோழர் பழனி படுகொலையில் தேடப்பட்ட எம்.எல்.ஏ. சரண்
கிருட்டிணகிரி மாவட்ட கழக அமைப்பாளர் தோழர் பழனி படுகொலையில் தலைமறைவாக இருந்த தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், அவரது மாமனார் இலகுமய்யா, மைத்துனர் கேசவமூர்த்தி, சித்தராஜி மற்றும் ஒருவர் உட்பட 5 பேரும் ஜூலை 30 ஆம் தேதி காலை திருவண்ணாமலை முதலாவது நீதிமன்ற நடுவர் முன் சரணடைந்துள்ளனர். கொலை நடந்த ஜூலை 5 ஆம் தேதியி லிருந்து தலைமறைவாக இருந்த இவர்களை காவல்துறையின் தனிப்படைகள் தேடி வந்தன. இந்த கொலையில் 22 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே தனக்கு முன் பிணை கேட்டு தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன், உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். கடந்த 26 ஆம் தேதி இந்த முன் பிணை கேட்கும் மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி தளி ராமச்சந்திரன் சார்பில் வாதிட வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருட்டிணன் ஆஜர் ஆனார். உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் என்.நடராசன், தேடப்படும் குற்றவாளி சார்பில் நீதிபதி முன் வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் முன்கூட்டியே பிணை வழங்கக் கூடாது என்று வாதிட்டார். கொலையுண்ட தோழர் பழனிச் சார்பில் அவரது மகன் வாஞ்சிநாதன் இந்த வழக்கில் இணைத்துக் கொண்டு, தளி சட்டமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்திருந்தார். வாஞ்சிநாதன் சார்பில் கழக மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, இளங்கோ வாதிட்டனர். இறுதியில் நீதிபதி முன் பிணை கோரும் மனுவை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கில் இப்போது சரணடைந்துள்ள 5 பேர் தவிர, ஏற்கனவே 7 பேர் சரணடைந்துள்ளனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியார் முழக்கம் 02082012 இதழ்