பா.ஜ.க.வின் ‘தமிழ் தேசியம்’

சாதி எதிர்ப்பு – பார்ப்பன எதிர்ப்பு – இந்து மத எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டு, மொழி அடிப்படையில் முன் வைக்கப்படும் தமிழ் தேசிய முழக்கத்தில் பா.ஜ.க.வினரும் பங்கேற்க தயாராகவே இருக்கிறார்கள் என்பதை அண்மையில் வந்துள்ள செய்திகள் உறுதி செய்கின்றன. தமிழக பா.ஜ.க. மதுரையில் ஏப்ரல் மாதத்தில் ‘தாமரை சங்கமம்’ என்ற பெயரில் மாநாடு நடத்தவிருக்கிறது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பா.ஜ.க. தலைவர் பொன். இராதா கிருட்டிணன், “மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 2 தமிழ்த் தாய் சிலைகளின் பவனி 8 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் (‘தினத்தந்தி’ 6.4.2012) என்று கூறியுள்ளார். மதுரை மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜரத்தினம் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “கன்யாகுமரியிலிருந்து தமிழன்னை சிலை மதுரைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படவிருக்கிறது. தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பா.ஜ.க.வால் தான் முடியும் என்பதோடு, தமிழ் உணர்வு கலந்த தேசியமே தமிழக பா.ஜ.க.வின் பார்வை என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த ஏற்பாடு” என்று கூறியுள்ளார். (‘குமுதம் ரிப்போர்ட்டர்’ 8.4.2012) இத்தகைய ‘ஊடுருவல்’ ஆபத்துகள் நேர்ந்து விடக் கூடாதே என்ற காரணத்தால்தான் பெரியார் ‘திராவிடர்’ என்ற பெயரைத் தேர்வு செய்து, தமிழின விடுதலையை முன்னெடுத்தார். ‘தமிழ்த் தாய்’ இந்துத்துவ பார்ப்பன சக்திகளுக்கும் தமிழ் தேசிய சக்திகளுக்கும் ‘தாயாகி’விட்டபோது, அவரது புதல்வர்கள் சகோதரப் பாசத்துடன் குடும்பம் நடத்திவிடக் கூடாது என்பதே நமது கவலை.

பால்ய விவாகங்கள்

குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து விட வேண்டும் என்ற பார்ப்பனியக் கொடுமைக்கு எதிராக பிரிட்டிஷ் இந்தியாவில் தடைச் சட்டம் வந்தபோது அதை எதிர்த்து கூக்குரலிட்டவர்கள் பார்ப்பனர்கள். பெரியாரின்  ‘குடிஅரசு’ பார்ப் பனர்கள் ஓலங்களுக்கு பதிலடி தந்தும், சட்டத்தை ஆதரித்தும் உறுதியாக கட்டுரைகளை எழுதியது. ‘சுதந்திர’ இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆகவும், ஆண்களின் திருமண வயது 21 ஆகவும் உயர்த்தப்பட்டாலும், சட்டங்களை புறந்தள்ளி ‘பார்ப்பனிய’ பால்ய விவாகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்து பார்ப்பனியம் சமூகத்தில் செல்வாக்குடன் தொடருவதையே இது வெளிப்படுத்துகிறது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ‘(ஏப்.5) வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் 18 வயக்கு முன்பே நடக்கும் சட்ட விரோத ‘பால்ய விவாகங்களில்’ ஜார்கண்ட் முதலிடத்தையும் (13 சதவீதம்), ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும் (10.1 சதவீதம்) பிடித்துள்ளது. இவையெல்லாம் இந்து பழமைவாதத்தில் ஊறிப் போன மாநிலங்கள். ஆனால், தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேல் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி ஆட்சி செய்த மேற்கு வங்க மாநிலம், இந்த பார்ப்பனியப் பிற்போக்குத்தனத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதுதான் (8.2) அதிசயம். பீகாரும் (7.2 சதவீதம்), ஒடிசாவும் (6.3 சதவீதம்) கூட மேற்கு வங்கத்துக்குப் பின்னால் தான் வருகின்றன. டெல்லியில்தான் மிகக் குறைந்த அளவில் ‘பால்ய விவாகங்கள்’ நடக்கின்றன (0.5 சதவீதம்) தமிழ்நாடு, அய்ந்தாவது இடத்தில் இருக்கிறது (1.8. சதவீதம்).

‘யுனிசெப்’ நிறுவனம், உலக குழந்தைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் உலகில் நடக்கும் குழந்தைகள் திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியாவில்தான் நடக்கின்றன என்று கூறுகிறது. 2001-2010 ஆம் ஆண்டுகளுக்குள் ‘பால்ய விவாகங்கள்’ இந்தியாவில் 6.1 சதவீத அளவுக்கு குறைந்துள்ளன என்றும், அந்த புள்ளி விவரம் கூறுகிறது.  குஜராத், இமாசலப் பிரதேசம், உ.பி., மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங் களில் கடந்த 10 ஆண்டுகளில் பால்ய விவாகங்கள் குறையாது, பின் தங்கிய நிலையிலேயே இருப்பதை புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது. இம்மாநிலங் களில் ‘திராவிடகட்சிகள்’ ஆட்சி எதுவும் நடக்க வில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக் கிறது. பெண்கள் கட்டாயத் திருமணத்தில் காலமெல்லாம் அவதிப்படாமல், மணவிலக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று பெண்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அதிக அளவில் பயன்படுததிய மாநிலம் தமிழ்நாடு. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே விவகாரத்துகள் அதிகம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு (8.8. சதவீதம்). கருநாடகம் இரண்டாவது இடத்தில் (8.2 சதவீதம்) உள்ளது. ‘விவாகரத்து’ பெறுவது ஒன்றும் சமூக அவலமல்ல என்ற சிந்தனை தமிழ்நாட்டில் மேலோங்கி நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெரியார் முழக்கம் 12042012 இதழ்

You may also like...