ஜீவா வளர்த்த கட்சியில் “தளி இராமச்சந்திரன்களா?” அரங்க குணசேகரன் கேள்வி

இராயக்கோட்டையில் 15.7.2012 அன்று நடந்த தோழர் பழனி படுகொலை கண்டன கூட்டத்தில் ‘தமிழக புரட்சிக் கழக’ அமைப்பாளர் அரங்க குணசேகரன் ஆற்றிய உரை:

தோழர் பழனியை நான் 15 ஆண்டுகளாக அறிவேன். பெண்ணாகரத்திற்கு வருகின்ற காலத்தில் எல்லாம் தோழர் பழனியோடு அரசியல் உறவுகளைக் கொண்டு தோழமையுடன் பழகியிருக்கிறேன். ‘வர்க்க எதிரிகளை ஒழித்து, தமிழ்நாடு விடுதலையை சாதிக்க வேண்டும்’ என்ற கொள்கைகளை ஏற்று வர்க்கப் போராளியாக வாழ்ந்த பழனி, வர்க்கப் போருக்கு தடையாக நிற்கும் சாதி, மதத்தை தகர்த்தெறிய போராடும் பெரியார் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவரை படுகொலை செய்ததன் மூலம், இந்த தளி சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாட்டில் தான் இருக்கிறதா? இந்தப் பகுதியின் ஆட்சி தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதா? சி.பி.ஐ. தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் ஆளுகையில் இருக்கிறதா என்பதை தமிழக முதல்வர் ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

1971 இல் 5000 ஏக்கர் நிலம் பெற்றிருந்த தஞ்சை மாவட்டம் கருப்பையா மூப்பனாரின் பண்ணையில் நில மீட்பு இயக்கம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி, இன்றைக்கு ஏழைகளின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை பறித்து, நிலக் கொள்ளையனாக மாறிப் போயிருக்கிறது என்றால், 1971க்கும் 2012க்கும் இடையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த அளவுக்கு சீரழிந்து, கீழிறங்கிப் போயிருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.  தமிழகத்தில் ஒரு லட்சத்து 80000 ஏக்கர் நிலங்களை தி.மு.க., அ.தி.மு.க., பன்னாட்டுக் கம்பெனிகளின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக தாரை வார்த்துள்ளார்கள். அதைத் தடுத்து, நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய இராமச்சந்திரன் போன்றவர்கள், ரியல் எஸ்டேட் பிசினஸ் மூலம் பல்லாயிரம் ஏக்கர்களை வாங்கி, பன்னாட்டு கம்பெனிகளுக்குத்தொழில் தொடங்க ஏகாதிபத்திய சேவை செய்யும் இராமச்சந்திரன் போன்ற தரகர்களுக்கு கம்யூனிஸ்ட் தோழர்கள் வக்காலத்து வாங்குவது என்ன நியாயம்? கட்டியிருந்த வேட்டியைத் துவைத்துப் போட்டு, அந்த வேட்டியின் ஈரம் உலரும் வரை தலைவர் காமராசருடன் கூட்டத்திற்கு செல்ல முடியாமல் காத்திருந்த ஜீவா வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சி, இன்று கொலைகாரன் இராமச்சந்திரன் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கர்களை வளர்த்து விடலாமா?

களப்பால் குப்புவும், சிவராமனும், இரணியனும் வளர்த்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த இழி நிலையா? தோழர் பழனி சொந்த ஊரிலிருந்து சொந்த மக்களால் விரட்டப்பட்டவர் என்று பேட்டிக் கொடுக்கும் மாணவர் அணிச் செயலாளர் லெனின் அவர்களே! கர்நாடகத்தில் பிறந்த சீனுவாசராவ், ஊட்டியிலிருந்து, பிறகு இந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கி அரசியல் வேலை செய்யவில்லையா? ஊர் விட்டு ஊர் சென்று குடியேறுவது தேச விரோதமா? சென்னையிலே இன்று அரசியல் நடத்தும் தா. பாண்டியன், நல்லகண்ணு, மகேந்திரன் எல்லாம் சொந்த ஊரிலிருந்து விரட்டப் பட்டு சென்னையில் இருக்கிறார்களா? என்று கேட்டார்.

பெரியார் முழக்கம் 02082012 இதழ்

You may also like...